Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இங்குள்ள பெயர்ப் பலகையில் தனது மகனின் பெயர் இருக்கிறதா? கணவரின் பெயர் இருக்கிறதா? தந்தையின் பெயர் இருக்கிறதா என்பதை பலரும் விரல் விட்டுத் தேடுவதை நான் அவதானித்தேன். தெற்கில் மட்டுமா இந்த நிலை? வடக்கிலும் அவ்வாறே தேடுகின்றனர். தனது பிள்ளைகளை, தனது கணவரை இழந்தோர் அவர்களின் புகைப்படங்களை வீதிகளில் வைத்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றனர். அனைத்துப் பெற்றோருக்கும் அவர்களின் பிள்ளை ஓர் இரத்தினக்கல். படையினரது கைகளிலுள்ள துப்பாக்கி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயற்படக்கூடாது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு”.
– போர் வெற்றிவிழாவில் ஜனாதிபதி அநுர குமர –
மழை விட்டும் தூவானம் போகவில்லை என்பதுபோல் உள்;ராட்சிச் சபைகளுக்கான தேர்தல் முடிவடைந்து மூன்று வாரங்கள் ஆகின்ற போதிலும் எந்த ஒரு சபையும் இன்னும் உருப்படியாகவில்லை. தேர்தலில் வென்றதாகக் கூறியவர்களும் அதற்கான கதிரைகளில் இதுவரை ஏறவில்லை. கூட்டணிகளை அமைக்க முயன்றவர்களும் அதில் வெற்றி கண்டதாகத் தெரியவில்லை.
உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஒரு சபையின் மொத்த உறுப்பினர்களில் ஐம்பது சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கைகள் இருப்பின் அந்தக் கட்சி அல்லது குழுவில் ஒருவரை மேயராக அல்லது தலைவராக நியமிக்க முடியும்.
எவருக்கும் பெரும்பான்மை இல்லாவிடின் – அதுவே கூடுதலான உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும், அதன் முதலாவது அமர்வின்போது இரகசிய வாக்கெடுப்பின் மூலம் மேயரை அல்லது தலைவரை தெரிவு செய்ய வேண்டும். (ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவுசெய்ய இடம்பெற்ற ரகசிய வாக்கெடுப்பின்போது நடைபெற்ற கண்ணாமூச்சி விளையாட்டுக்கு இங்கு சாத்தியமுண்டு).
இவ்வாறான ரகசிய வாக்கெடுப்பில் மேயர் அல்லது தலைவரை தெரிவு செய்யும்போது எதிர்க்கட்சிகள் கூட்டணிகளை உருவாக்கி பெரும்பான்மை இல்லாவிட்டாலும் மேயர் அல்லது தலைவர் பதவியை தக்க வைக்க முடியும். அநேகமாக இப்போதுள்ள நிலைமையில் இந்த விநோத விளையாட்டுக்கு இடமுண்டு.
உள்;ராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் ஒரு கட்சி அல்லது குழு அதிக இடங்களில் வெற்றி பெற்றதென்பது அறுதிப் பெரும்பான்மையென்று அர்த்தப்பட மாட்டாது. உதாரணத்துக்கு யாழ்ப்பாணம் மாநகரசபை தேர்தல் முடிவை எடுத்துக் கொள்ளலாம்.
இங்கு தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களைப் பெற்றது. இதுவே ஒரு தரப்புக்கான ஆகக்கூடிய எண்ணிக்கை. கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய பேரவை 12 ஆசனங்களையும், அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும் பெற்றன. மேலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி என்பவை தலா நான்கு ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவை தலா ஒவ்வொன்றையும் பெற்றன. மொத்தம் 45 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் அறுதிப் பெரும்பான்மைக்கு 23 எண்ணிக்கை தேவை. நவக்கிரகங்கள்போல் நிற்கும் தமிழ்த் தேசியவாத கட்சிகள் யாரோடு யார் சேர்ந்து ஆட்சியமைப்பார்கள் என்பதை எவராலும் சொல்ல முடியாதுள்ளதுவே இங்குள்ள நிலைமை.
தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் 377 உறுப்பினர்களைப் பெற்று 35 சபைகளில் முன்னணியில் நிற்கிறது. ஆனால், 6 சபைகளில் மட்டுமே எவரது ஆதரவும் இல்லாது தனித்து ஆட்சியமைக்கும் அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. இதில் கிளிநொச்சியில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற இரு சபைகளை சிறீதரனின் தனிப்பட்ட வெற்றியாகவே கட்சிப் பிரமுகர்களும் கணிக்கின்றனர். 35ல் 6 போக மிகுதி 29 சபைகளை யாருடன் யார் இணைந்து ஆட்சியமைப்பதென்பது அந்தச் சபைகளின் முதலாவது அமர்வின்போதுதான் தெரிந்து கொள்ள முடியும்.
தெற்கிலும் இதே நிலைமைதான். இங்குள்ள 359 சபைகளில் 265ல் அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தி கூடிய ஆசனங்களைப் பெற்று முதலிடத்தில் நிற்கிறது. ஆனால் 133 சபைகளில் மட்டுமே இதற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. எனவே இச்சபைகளில் அவர்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால், மிகுதி 132 சபைகளில் ஆட்சியமைக்க வேறு கட்சிகளின் அல்லது குழுக்களின் ஆதரவை பெறவேண்டும். கொள்கை ரீதியாக இது முடியாவிடின் தொங்குபாலமாகவே இச்சபைகள் இழுபடும்.
117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகரசபையில் அநுர குமர தரப்புக்கு 48 ஆசனங்கள் கிடைத்துள்ளன. எதிரணிகள் கூட்டாக 67ஐ பெற்றுள்ளன. தலைநகரைக் கைப்பற்றுவதற்காக சாம பேத தான தண்டம் ஆகிய நான்கு ஆயுதங்களையும் அநுர தரப்பு பயன்படுத்துகிறது. மனோ கணேசனின் சகோதரரான பிரபா கணேசனின் தரப்பு வழங்கும் ஆதரவோடு அநுர குமர அணி கொழும்பு மாநகரசபையை கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.
தோற்ற கட்சிகளுடன் கூட்டணி இணைத்து ஆட்சியை கைப்பற்றுவதை எதர்ப்பதாகவும், அவர்களுக்கு நிதி வழங்குவதை யோசித்தே செய்ய முடியுமெனவும் தெரிவித்து வரும் அநுர தரப்பு கொழும்பை கைப்பற்றுவதற்கு எதனையும் செய்ய (இழக்க) தயாராகியுள்ளது.
அறுதிப் பெரும்பான்மை பெறாத சபைகளுக்கான முதலாவது அமர்வு உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற வேண்டுமென்பதும் அந்த அமர்வில் மேயர் அல்லது தலைவர் இடம்பெற வேண்டுமென்பதும் சட்டம். யூன் மாதம் 2ம் திகதிக்குப் பின்னர் இந்த அமர்வுகள் இடம்பெறுமாயின் சகல சபைகளினதும் முடிவுகளை அறிய ஓரிரு வாரங்கள் காத்திருக்க வேண்டும். வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியவாத கட்சிகளின் முடிவு எவ்வாறு அமையுமென்பதைப் பொறுத்தே அங்குள்ள சபைகளின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படும்;.
‘நாங்கள் சாதகமாக ஆதரவளிக்கக்கூடிய தரப்புகளுடன் பேசியுள்ளோம். எங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்ணியின் ஆதரவு கிடைக்குமென நம்புகிறோம். நிலைமையை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்” என்று தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். எதுவும் நம்பிக்கை அளிப்பதாகக் காணப்படவில்லையென்பதை அவரது சொல்லாடல் புரிய வைத்தது.
இது ஒருபுறமிருக்க, தெற்கில் சற்று சூடு பிடித்திருக்கும் போர்வீரர் நாள் நிகழ்வு பற்றிய விடயம் பார்க்கப்பட வேண்டியது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளை அடுத்து அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ராணுவ வெற்றிநாள் என்ற பெயரில் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
தமது இனவாதப் போக்கினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புப் போரில் மரணித்த 27,000 பேருக்கும் மேலான இராணுவத்தினருக்கு மரியாதை வழங்க இந்த நாளை அவர் உருவாக்கினார். இவ்வருட விழாவில் ஜனாதிபதி அநுர குமர பங்குபற்ற மாட்டாரென்று இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் இதனை அரசியலாக்க எத்தனித்ததால் அவர் பங்குபற்றினார் என்பதே உண்மை.
இந்நிகழ்வில் அவர் நிகழ்த்திய உரையில் இராணுவத்தினர் என்ற சொற்பதத்தை தவிர்த்து அதற்குப் பதிலாக படையினர் என்று குறிப்பிட்டதை எதிர்த்தரப்பினர் – முக்கியமாக உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றவர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். ஜனாதிபதி உண்மையைப் பேசவில்லையென்று சிங்கள இனவாதிகளை உசுப்பேற்றும் வகையில் இவ்விருவருடைய உரைகளும் சிங்கள ஊடகங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இலங்கையில் அரச பயங்கரவாதத்தை நிலைநிறுத்திய இனஅழிப்புப் போரில் இராணுவத்தினர் (காலாட்படை – ஆமி) மட்டும் ஈடுபடவில்லை. கடற்படை, வான்படை, காவற்படை என்ற சகல படைத்தரப்பினரும் தமிழின அழிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் அனைவர் தரப்பிலும் உயிரிழப்பு இடம்பெற்றது. இதன் பின்னரே அனைத்துத் தரப்புகளையும் இணைத்து முப்படைத் தளபதியாக போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டார். அநுர குமர ஜனாதிபதியாகிய பின்னரே இவர் ஓய்வுக்கு அனுப்பப்பட்டார்.
எனவே, போரில் இறந்த அல்லது உயிர் நீத்த படையினரை வெறுமனே இராணுவத்தினர் என்று அழைப்பது முறையற்றது. அதனாலேயே அவர்களை படையினர் என்று அநுர குமர குறிப்பிட்டதில் தவறு இருக்க முடியாது. இதனை ஒரு குற்றமாகச் சுட்டிக்காட்டி இராணுவத்தினரை ஆட்சித் தரப்புக்கு எதிராக்க உதய கம்மன்பிலவும், விமல் வீரவன்சவும் முனைவது தெரிகிறது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமர ஆற்றிய உரையின் ஒரு பகுதி பின்வருமாறு இருந்தது: ‘இங்குள்ள பெயர்ப் பலகையில் தனது மகனின் பெயர் இருக்கிறதா? கணவரின் பெயர் இருக்கிறதா? தந்தையின் பெயர் இருக்கிறதா என்பதை பலரும் விரல் விட்டுத் தேடுவதை நான் அவதானித்தேன். தெற்கில் மட்டுமா இந்த நிலை? வடக்கிலும் அவ்வாறே தேடுகின்றனர். தனது பிள்ளைகளை, தனது கணவரை இழந்தோர் அவர்களின் புகைப்படங்களை வீதிகளில் வைத்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றனர். அனைத்துப் பெற்றோருக்கும் அவர்களின் பிள்ளை ஓர் இரத்தினக்கல். அனைத்துப் படையினரதும் கைகளிலுள்ள துப்பாக்கி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயற்படக்கூடாது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு”, என அநுர குமர குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றும்போது 1971 ஏப்ரல் சேகுவேரா கிளர்ச்சியின்போதும், 1987 – 1989 காலப்பகுதியில் அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட ஜே.வி.பி.யினர் பற்றியும் அநுர குமர நினைவில் கொண்டுள்ளாரென்பது நன்றாகத் தெரிகிறது. அதனாலேயே அவரது உரையில் உண்மை வெளிச்சமாகியது.
இந்த உண்மையை இவரும் இவரது தரப்பினரும் உண்மையாகவே தொடருவார்களானால் நாடு நலன் பெறும், மக்களும் நலம் பெறுவர். பேச்சு பல்லக்கு, தம்பி கால்நடையாக இருக்கக்கூடாது.