Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், தினேஷ் அகிராபதவி, கிரிக்கெட் நிபுணர் 25 மே 2025, 12:03 GMT
புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்
தோனி ஓய்வுபெற வலியுறுத்தும் ரசிகர்களின் கருத்துக்கள் உண்மையில் ஆச்சர்யத்தையே ஏற்படுத்துகின்றன. தோனியை நன்றாக அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல, வழக்கமான தோனி நகர்வுதான் என்பது எளிதாக புரிந்துவிடும்.
தோனியின் ஓய்வறிவிப்புகளுக்கு என்று ஒரு தனித்த பாணி உண்டு. திடீர் முடிவுகள் போல தோற்றம் அளித்தாலும், ஒரு ஃபார்முலாவின் படிதான் அவை எப்போதும் அமைந்துள்ளன. அது என்ன ஃபார்முலா?
தனது தலைமைத்துவமோ ஆட்டத்திறனோ கேள்விக்குள்ளாக்கப்படும் போது தோனி முதலில் அமைதிகாப்பார், விமர்சனங்களை சிரித்த முகத்துடன் எதிர்கொள்வார்; சமயங்களில் சற்று ஆக்ரோஷத்துடன். அடுத்ததாக தனது செயல்பாடுகளின் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க முயற்சிப்பார்.
தன்னுடைய பங்களிப்பு இனியும் அணிக்கு தேவைப்படாது என உணர்ந்த பிறகு, கடைசியாகத்தான் ஓய்வை அறிவிப்பார். அதுவும் யாரும் எதிர்பார்க்காத வகையில், யாரும் எதிர்பார்க்காத சமயத்தில்.
இந்த முடிவுக்கு வந்து சேர்வதற்கு வழக்கமாக தோனி எடுத்துக்கொள்ளும் காலம் 3–4 ஆண்டுகள்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
2011 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அயல் மண்ணில் தொடர்ச்சியாக மண்ணைக் கவ்வியது. ஆனால், தோனி அவசரப்படவில்லை. 3 ஆண்டுகளுக்கு பிறகு 2015–ல், ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் யாரும் எதிர்பாராத சமயத்தில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தன்னுடைய பங்களிப்பு இனியும் அணிக்கு தேவைப்படாது என உணர்ந்த பிறகு, கடைசியாகத்தான் ஓய்வை அறிவிப்பார் தோனி’ஓய்வுக்கு பின்னான கவலை’
2015 உலகக் கோப்பையின் போதே தோனியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணுகுமுறை மீதான விமர்சனங்கள் எழத் தொடங்கிவிட்டன.
ஆனால் 2019 உலகக் கோப்பை முடிந்த பின்னர் சாவகாசமாக சில மாதம் கழித்து ஒரு சமூக வலைதள பதிவின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் முடிவை அவர் அறிவித்தார்.
தோனியின் முந்தைய ஓய்வறிப்புகளின் போது இப்போது போல ரசிகர்கள் காத்துக்கிடக்கவில்லை. களத்தை விட்டு விலக அவர் முடிவெடுக்கும் போதெல்லாம், அது எதிர்பார்த்த ஒன்றாக இருந்தபோதும், அவர்கள் உண்மையில் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
ஆனால், இந்தமுறையோ தோனி எப்போதுதான் ஓய்வுபெறுவாரோ என்று கேட்டு கேட்டு சிஎஸ்கே ரசிகர்கள் சோர்ந்து போயுள்ளனர். ஏன் தோனி களத்தை காலிசெய்ய மறுக்கிறார்?
கோபத்தில், விரக்தியில் ரசிகர்கள் சிலர் விமர்சிப்பதை போல, இதை வெறுமனே சுயநலம் என்று மட்டும் சுருக்கிட முடியாது.
தோனி மட்டுமல்ல தான் விரும்பிய துறையில் உச்சத்தை தொட்ட எவர் ஒருவரும் அந்த களத்தை விட்டு அவ்வளவு எளிதாக விலக மாட்டார்கள்.
தன்னுடைய ஆளுமையை செதுக்கிய கிரிக்கெட்டை விட்டு முற்றும் முழுவதுமாக விலகுவது என்பது தோனிக்கு கடினமான முடிவாக இருக்கக் கூடும்.
ஓய்வுக்குப் பிறகு என்ன செய்யப் போகிறோம் என்கிற கவலையே, பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களை மன உளைச்சலுக்கு தள்ளுகிறது என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் டேவிட் ஃபிரித். சைலன்ஸ் ஆஃப் தி ஹார்ட் : கிரிக்கெட் சூசைட்ஸ் (Silence Of The Heart: Cricket Suicides) என்ற புத்தகத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தோனியே ஆகச்சிறந்த கேப்டன். ஒரு கேப்டனாக அவருடைய சாதனைகளும் சாகசங்களும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவைவணிக நோக்கமா?
தோனி தொடர்ந்து விளையாடுவதற்கு அவருடைய பெருவிருப்பத்துடன் சேர்ந்து சிஎஸ்கே நிர்வாகத்தின் ஆதரவும் அதற்கு பின்னால் ஒரு பெரும் வணிக நோக்கம் இருப்பதும் உண்மைதான். ஆனால் இதை வெறுமனே கருப்பு வெள்ளையாக மட்டும் புரிந்துகொண்டு விட முடியாது.
ரசிகர்களின் ஆதரவும் அபிமானமும் இருந்ததால் தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் இத்தனை ஆண்டுகள் தோனியால் விளையாட முடிந்தது. பிறகு இப்போது ஏன் ரசிகர்கள் தோனியை ஓய்வுபெற சொல்கிறார்கள்?
கிரிக்கெட்டில் 15 வருடங்களுக்கு ஒருமுறை தலைமுறை மாற்றம் ஏற்படுகிறது என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். கிரிக்கெட்டின் பாணி, கிரிக்கெட் வீரர்களின் சிந்தனை முறைகளில் நிகழும் மாற்றம் என இதனை புரிந்துகொள்ளலாம்.
தலைமுறை மாற்றம் என்பது மிகவும் நுட்பமாக நிகழும். ரஹ்மான் யுகம் முடிந்து அனிருத் யுகம் தொடங்கியதை போல. சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் திடீரென சரிவை சந்திப்பதை பார்க்கிறோம். தொடர்ச்சியாக அவர்களுடைய படங்கள் தோல்வியை சந்திக்க தொடங்கும். இதற்கும், அவர்களுடைய பாணியில் இருந்து அந்த படங்கள் பெரிதாக விலகியிருக்காது. அதே பாணி திரைப்படங்கள் தான், அதே ரசிகர்கள் தான். ஆனால், அப்போது ரசித்தவர்கள் ஏன் இப்போது ரசிக்கவில்லை?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கிரிக்கெட்டில் 15 வருடங்களுக்கு ஒருமுறை தலைமுறை மாற்றம் ஏற்படுகிறது என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.ஆகச்சிறந்த ஐபிஎல் கேப்டன்
2007–ல் தோனி முதல்முறையாக கேப்டன் பொறுப்பு ஏற்றது முதல் 2020களின் தொடக்கம் வரை தோனியின் யுகம் என வரையறுக்கலாம்.
இப்போது நவீன கிரிக்கெட், குறிப்பாக T20 கிரிக்கெட் விளையாடப்படும் விதத்தில் பாரதூரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொடக்கத்தில் நிதானித்து விளையாடி, பிறகு மிடில் ஓவர்களில் வேகத்தை கூட்டி, இறுதிக்கட்டத்தில் மின்னல் வேகத்தில் முடிப்பது தோனியின் யுகம்.
ஆனால், இன்று மின்னல் வேகத்தில் தொடங்கி வேகத்தை மட்டுப்படுத்தாமல் அதே வேகத்தில் முடிப்பதாக புதுயுக கிரிக்கெட் உருவெடுத்துள்ளது.
தோனியின் கேப்டன்சி குறித்து கிரிக்கெட் எழுத்தாளர் சித்தார்த் மோங்காவின் அவதானிப்பு கவனிக்கத்தக்கது.
”தோனி ரிஸ்க் எடுப்பவர் அல்ல. ரிஸ்க்கள் குறித்து மதிப்பிடுபவர். ஆனால், இன்று மதிப்பீடு செய்வதற்கு எல்லாம் நேரமில்லை. ரிஸ்க் எடுக்காமல் விளையாடுவதுதான், இன்று ரிஸ்க் என்பதாக மாறிவிட்டது” என்கிறார் சித்தார்த் மோங்கா.
இந்த தலைமுறை இடைவெளிக்கு சரியான உதாரணமாக சிஎஸ்கேவுக்கும் மற்ற அணிகளுக்கும் ஆட்டத்தை அணுகுவதில் உள்ள வித்தியாசத்தை சொல்லலாம்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தோனியையும் சிஎஸ்கேவையும் பிரிந்துப் பார்க்க முடியாது. சிஎஸ்கேவின் ஆட்ட பாணி இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை ஆரம்ப காலத்தில் ஸ்டீபன் ஃபிளமிங் உடன் சேர்ந்து தோனி தான் வரையறுத்தார்.
அந்தப் பாணி காலாவதி ஆனதை உணராததால் தான் சிஎஸ்கே நிர்வாகம் ஏலத்தில் அனுபவம் என்ற பெயரில் வயதான வீரர்களை எடுத்து சொதப்பியது. பாதி போட்டித் தொடர் முடிந்த பிறகுதான், தனது தவறை உணர்ந்து ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், டெவால்ட் பிரவிஸ் என இளம் வீரர்கள் மீது தன் பார்வையை திருப்பியுள்ளது.
சிஎஸ்கேவின் அணுகுமுறையில் மாற்றம் தேவை என்பதை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்கும் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுவிட்டார்.
தோனியின் ஓய்வு குறித்து வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமானது முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கரின் விமர்சனம்.
அணியில் தோனியின் இருப்பே சிஎஸ்கே அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்கிறார் பாங்கர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2007–ல் தோனி முதல்முறையாக கேப்டன் பொறுப்பு ஏற்றது முதல் 2020களின் தொடக்கம் வரை தோனியின் யுகம் என வரையறுக்கலாம்.களத்தில் தோனிதான் தலைவன்
தோனி கேப்டனாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, களத்தில் அவர் இருக்கும்போது அவர்தான் தலைவன். அவர் கண்ணசைவில் தான் எல்லாம் நடக்கும். அப்படி இருக்கையில், எப்படி ஒரு கேப்டனால் தனக்கான அணியை கட்டமைக்க முடியும், தனக்கான ஒரு பாணியை புதிதாக வரித்துக்கொள்ள முடியும்? தோனியின் நிழலில் இருந்ததால்தான் ருதுராஜ் கெய்க்வாட்டால் கேப்டனாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
ஆனால், தோனியோ அணியின் நலனை கருத்தில் கொண்டுதான் தான் தொடர்ந்து விளையாடி வருகிறேன் என நம்புகிறார். சரியான நேரத்தில் மாற்றம் (Transition) நிகழ வேண்டும், அப்போதுதான் தான் இல்லாத போதும் அணி வருங்காலத்திலும் ஆதிக்கத்தை தக்கவைக்க முடியும் என்பது அவருடைய நம்பிக்கையாக இருக்கிறது.
ஆனால், இந்த சிந்தனையும் கூட இப்போது எல்லாம் காலாவதியாகி வருவதை பார்க்கலாம். இந்த சீசனில் புதிய தலைமையின் கீழ் களமிறங்கிய பஞ்சாப் அணி, கடந்த காலத்தின் எந்தவொரு சுவடும் இன்றி புதிய பாணியில் விளையாடி அசத்துவதை என்ன சொல்வது?
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தோனியே ஆகச்சிறந்த கேப்டன். ஒரு கேப்டனாக அவருடைய சாதனைகளும் சாகசங்களும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவை. சிஎஸ்கேவுக்காக களமிறங்கிதான் அவர் அணியின் முகமாக இருக்க வேண்டும் என்பதில்லை.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு