இங்கிலாந்தின் தென்மேற்குத் தொடருந்து சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அரசாங்கத்தினால் தேசிய மயமாக்கப்பட்டது.

பிரித்தானிய தொழிற்கட்சியின் பிரச்சாரத்தின் போது கடந்த ஆண்டு பிரதமர் கேய்ர் ஸ்டாமர் பதவியேற்ற போது உறுதியளித்தபடி தொடருந்து சேவைகள் மீண்டும் தேசிய மயமாக்கும் பெரிய திட்டத்தின் ஒரு பகுதி நடவடிக்கையாகும்.

தொடருந்து சேவையில் மீண்டும் கொண்டுவருவதற்கு எங்கள் பணியில் இன்று ஒரு திருப்புமுனைத் தருணம் என போக்குவரத்து செயலாளர் ஹெய்டி அலெக்சாண்டர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். 

இந்த தேசிய மயமாக்கல் திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.59 மணிக்கு நடைமுறைக்கு வந்தது.

தனியார் மயமாக்கலில் இங்கிலாந்து தொடருந்து சேவைகள் அடிக்கடி இரத்து செய்யப்படுதல், பயணச் சிட்டைகள் அடிக்கடி விலையேற்றுதல், சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தங்களில் ஈடுபடுதல் போன்ற பிரச்சினைகள் தொடருந்து நீடித்து வந்தன.

சமீபத்திய ஆண்டுகளில் சம்பள உயர்வுக்காக பல வேலைநிறுத்தங்களை நடத்திய தொடருந்து தொழிற்சங்கங்கள், அரசு கையகப்படுத்தியதில் மகிழ்ச்சி அடைந்தன. 

1990களின் நடுப்பகுதியில் இங்கிலாந்தின் தொடருந்து சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டன.

நவம்பரில் நிறைவேற்றப்பட்ட சட்டம், நாட்டின் 14 ரயில் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் காலாவதியானவுடன் மீண்டும் பொதுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வழி வகுத்தது. தனியார் மயமாக்கப்பட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் அனைத்தும் 2027 ஆம் ஆண்டு காலாவதியாகிவிடும். அதன் பின்னா அனைத்து சேவைகளும் அரசாங்கத்தின் கீழ் பொதுவுடமையாக்கப்படவுள்ளது.

மோசமான செயல்திறன் காரணமாக நான்கு தொடருந்து இயங்குநர்கள் ஏற்கனவே பொதுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டனர். ஆனால் இவை முதலில் தற்காலிக நடவடிக்கைகளாகவே இருந்தன.

மறுதேசியமயமாக்கலால் ஏற்கனவே வழங்கப்படும் இழப்பீட்டுக் கட்டணத்தில் £150 மில்லியன் ($203 மில்லியன் அல்லது €178 மில்லியன்) வரை மிச்சப்படுத்தும் என்று தொழிற்கட்சி அரசாங்கம் கூறியது. 

தென்கிழக்கு மற்றும் கிழக்கு சேவைகள் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தேசியமயமாக்கப்பட உள்ளன.

வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ரயில் அமைப்புகள் அனைத்தும் பொது கட்டுப்பாட்டில் உள்ளன.