Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கடந்த 18ஆம் தேதியும் 19 ஆம் தேதியும் இலங்கைத் தீவில் இரண்டு மக்கள் கூட்டங்கள் இருப்பதனை மீண்டும் உணர்த்திய அடுத்தடுத்த நாட்கள். 18 ஆம் திகதி தமிழ் மக்கள் இன அழிப்பை நினைவு கூர்ந்தார்கள். 19ஆம் திகதி சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடினார்கள்.
பதினெட்டாம் திகதியை நோக்கி அந்த வாரம் முழுவதும் தமிழ் மக்கள் ஊர் ஊராக, சந்தி சந்தியாக கஞ்சி காய்ச்சிக் கொடுத்தார்கள். 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் கூடினார்கள்; உருகி அழுதார்கள்.
அடுத்த நாள் கொழும்பில் அரசாங்கம் யுத்த வெற்றியைக் கொண்டாடியது. காலையில் அரசுத் தலைவர் உடல் வழங்காத படை வீரர்கள் தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்று அவர்களைக் கௌரவித்தார். அதன்பின் படைத் தளபதிகளோடு போய் யுத்த வெற்றி வீரர்களின் நினைவுச் சின்னத்தைத்த தரிசித்தார்.
நாட்டின் ஒரு பக்கத்தில் தமிழ் மக்கள் துக்கத்தை அனுஷ்டித்த அடுத்த நாள் நாட்டின் தலைநகரில் சிங்கள மக்களும் அவர்களுடைய பிரதானிகளும் வெற்றியைக் கொண்டாடினார்கள். கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் எழுதியது போல “மே பதினெட்டு கொல்லப்பட்டவர்களின் தினம்; மே பத்தொன்பது கொன்றவர்களின் தினம் “.
பதினெட்டாம் திகதி பெரும்பாலான தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள் முள்ளிவாய்க்காலில் கூடியிருந்தார்கள்.19ஆம் திகதி பெரும்பாலான சிங்களத் தலைவர்கள் தமது வெற்றி நாயகர்களைப் போற்றி அறிக்கை விட்டார்கள்.
பதினெட்டாம் தேதி தமிழ் மக்கள், உணவு ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட ஒரு யுத்தத்தின் நினைவாக கஞ்சியைப் பகிர்ந்தார்கள். முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தின் முன் பூக்களை வைத்து அஞ்சலித்தார்கள். அதே நாளில் யுத்த வெற்றி வீரர்களின் நினைவுச் சின்னத்தின் முன் “பிவிதுறு ஹெல உரிமை”யின் செயற்பாட்டாளரான பெண் ஒருவர் சிறப்பு அதிரடிப்படை வீரருக்கு ஒரு ரோஜாப் பூவை பரிசளித்தார்.
பதினெட்டாம் தேதி முள்ளிவாய்க்காலில் கூட்டுத் துக்கமும் கூட்டுக் காயங்களும் கூட்டு இழப்பும் கூட்டு அவமானமும் கண்ணீராய் பெருகி ஓடின. 19ஆம் திகதி கொழும்பிலும் ஏனைய தென்னிலங்கை தலைநகரங்களிலும் கூட்டு வெற்றி கொண்டாடப்பட்டது.
18 ஆம் தேதி தமிழ் அரசியல்வாதிகள் தமது மக்களின் கூட்டுத் துக்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்கள். அதே நாளிலும் அடுத்த நாளும் சிங்கள அரசியல்வாதிகள் யுத்த வெற்றியைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது செய்தியில் ஓரிடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்… “சண்டை பிடிப்பது நமக்கு புறத்தியானது அல்ல. நாங்கள் சமர்க் களத்தில் சுய கட்டுப்பாடு உடையவர்கள். எங்களுக்கு நன்றாகத் தெரியும் சண்டை என்றால் என்ன? யாருடன் என்று? மகத்தான மன்னர்களான துட்டு கெமுனு, வளகம்பா,தாது சேனன்,விஜயபாகு ஆகிய மகத்தான மன்னர்கள் அந்நிய படையெடுப்பாளர்களை தோற்கடித்து வெற்றியை உறுதிப்படுத்திய நிலம் இது. பிரிட்டிஷ்காரர் டச்சுக்காரர் போர்த்துக்கீசர் போன்ற கொலனித்துவ சக்திகளுக்கு எதிராக தேசபக்தர்கள் சமர் புரிந்த நிலம் இது. வீரபுரான் அப்பு கெப்பிட்டிபொல போன்ற நாயகர்களும் பௌத்த துறவிகளும் மேலாதிக்க சக்திகளுக்கு எதிராக எழுந்த நிலம் இது.நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதற்காக ஆயிரக்கணக்கான வீரம் மிகுந்த யுத்த நாயகர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்து 30 ஆண்டுகால கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த நாடு இது.” அதாவது அவர் சுட்டிக் காட்டும் உதாரணங்கள் அந்நியப் படைகளுக்கு எதிரானவை. அதாவது தமிழர்களையும் அவர் அந்நியராகத்தான் பார்க்கிறார்?
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச “தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து தாயகத்தை விடுவித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்” என்று தனது செய்தியில் கூறியுள்ளார்.
தாயகத்தின் நீட்சியும் அகட்சியுமாகக் காணப்படும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் குறிப்பாக கனடாவில் அண்மையில் ஒரு இன அழிப்பு நினைவகம் திறக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு வெளியே அதிக தொகை தமிழர்கள் வாழும் இடம் கனடா.அங்கே அந்த நினைவுத் தூபியை திறந்து வைத்து உரை நிகழ்த்திய பிரம்டன் நகர மேயர் பின்வருமாறு சொன்னார் “இன அழிப்பு நடந்தது என்பதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொழும்புக்கு திரும்பி போய் விடுங்கள்” என்று. ஆனால் கொழும்பிலிருந்து கொண்டு நாமல் ராஜபக்ச அதற்கு எதிராகக் குரல் கொடுத்தார்.முன்னாள் வெளியுறவு அமைச்சரும் இந்நாள் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தும் கூறுகிறார்கள், நாட்டில் இன அழிப்பு நடக்கவில்லை என்று.
முள்ளிவாய்க்காலில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கூறுகிறார்கள் நடந்தது இன அழிப்பு என்று. கனடாவிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் வாழும் தமிழர்கள் கூறுகிறார்கள் அது இன அழிப்பு என்று. “பொறுப்புக்கூறலுக்கும், உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளைக் கனடா தொடர்ந்தும் ஆதரித்து வருகிறது” என்று கனேடியப் பிரதமர் மார்க் கார்ணி தனது செய்தியில் கூறியுள்ளார். அவருடைய செய்தியில் இனஅழிப்பு என்ற வார்த்தையைப் பிரயோகித்திருக்கிறார்.கனேடிய கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர், “இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்பு. ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களை ஒருபோதும் மறக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.
அதாவது தமிழ் மக்களும் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளின் அரசியல்வாதிகளும் கூறுகிறார்கள், நடந்தது இன அழிப்பு என்று. அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் கூறுகிறார்கள் அது இன அழிப்பு இல்லை என்று.இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறுகிறார்…இன அழிப்பு என்று கூறினால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று.
மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது என்ன தெரிகிறது? இச்சிறிய தீவில் இரண்டு வகை நினைவுச் சின்னங்கள் உண்டு. இரண்டு மக்கள் கூட்டங்கள் உண்டு. இரண்டு வேறு அரசியல் அபிப்பிராயங்கள் உண்டு. இரண்டு வேறு தேசங்கள் உண்டு. இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிரான அபிலாசைகளோடும் இருவேறு அரசியல் நிலைப்பாடுகளோடும் காணப்படுகின்றன.
ஆனால் அரசுத் தலைவர் அனுர வெற்றி வீரர்களின் சின்னத்தை முன்னிறுத்தி பின்வருமாறு கூறியுள்ளார் “இந்த நினைவிடத்தின் முன் நாம் நின்று அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துவது என்பது மீண்டும் ஒரு மோதல் ஏற்பட இடமளிக்காமல்,வெறுப்பு நிறைந்த சமூகத்திற்குப் பதிலாக, சகோதரத்துவம் அன்பு மற்றும் நல்லிணக்கம் நிறைந்த சமூகத்தை உருவாக்கத் தயார் என்று உறுதி மொழியை எடுப்பதற்காககும்” என்று.
அந்த நினைவுச் சின்னமே நல்லிணக்கத்திற்கு எதிரானது. ஒரு இனத்தின் வெற்றியைக் கொண்டாடுவது.நாடு இப்பொழுதும் வென்றவர்கள் தோற்றவர்கள் என்று இரண்டாகதான் நிற்கிறது. நாட்டின் வடக்கில் முள்ளிவாய்க்காலில் மற்றோர் நினைவுச் சின்னம் உண்டு.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக வந்த ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் ஒருவர்கூட அந்த நினைவுச் சின்னத்துக்கு வரவில்லை. அங்கே ஒரு பூவைக்கூட வைக்கவில்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்களின் வாக்குகளை எந்த சஜித்துக்கு சுமந்திரன் சாய்த்துக் கொடுத்தாரோ அந்த சஜித்தோ அவருடைய கட்சிப் பிரமுகர்களோ அந்த நினைவுச் சின்னத்துக்கு வரவில்லை.அங்கே ஒரு பூவைக்கூட வைக்கவில்லை. ஆனால் சுமந்திரன் கொழும்பில் மே 18ஐ நினைவு கூர்ந்த பொழுது, சஜித் யுத்த வெற்றியைப் போற்றி அறிக்கை விட்டிருந்தார். சிங்களத் தலைவர்கள் எப்பொழுதும் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய வாக்காளர்களுக்கு உண்மையாக இருக்கிறார்கள்.ஆனால் தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் அப்படியிருக்கிறார்கள்?
நாடாளுமன்ற தேர்தலிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற அனுர 19 ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ செய்தியில் பின்வருமாறு கூறியுள்ளார்…”நாம் முழுமையான வெற்றியாளர்கள் அல்ல. நாட்டில் சமாதானத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே நாம் முழுமையான வெற்றியாளர்களாக மாற முடியும்.எனவே அச்சமின்றி சமாதானத்துக்காக எடுக்கக்கூடிய ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்க நாம் தயாராக இருக்கிறோம்…. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன்மூலம் தாய்நாட்டின் முழுமையான சுதந்திரத்தை நாம் பெறவில்லை..”
கடந்த 16 ஆண்டுகளில் ஒரு பேருண்மையை ஒப்புக்கொண்ட முதலாவது அரசுத் தலைவர் அவர். 2009 மே மாதம் தாங்கள் பெற்ற வெற்றி முழுமையானது அல்ல என்பதனை அவர் ஒப்புக் கொள்கிறார். போரில் வெற்றி பெற்ற பின்னரும் நாட்டில் சமாதானத்தை உருவாக்க முடியவில்லை என்பதனை அவர் ஏற்றுக் கொள்கிறார். அதுதான் உண்மை. தமிழ் மக்களுக்குச் சமாதானம் இல்லையென்றால் சிங்கள மக்களுக்கும் சமாதானம் இல்லை.இந்தப் பிராந்தியத்துக்கும் சமாதானம் இல்லை.16 ஆண்டுகளின் பின்னரும் வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் இடையே இரண்டாகப் பிளவுண்டிருக்கும் இலங்கைத் தீவு.