Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஆயிரம் பேர் துரத்தி சென்று புலியை கொன்றனர் – வெற்றிச் சின்னங்களாக எடுத்து செல்லப்பட்ட உடல் பாகங்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வங்கப்புலி (சித்தரிப்புப் படம்) 17 நிமிடங்களுக்கு முன்னர்
இன்றைய (23/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள் சில இங்கே வழங்கப்பட்டுள்ளன.
அசாம் மாநிலத்தில் சுமார் 1000 பேர் சேர்ந்து ஒரு புலியை கொலை செய்து அந்த புலியின் உடல் பாகங்களை வெற்றிச் சின்னங்களாக அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் என்று, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், “அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள துசிதிமுக் கிராமத்தில் ஓர் ஆண் ராயல் பெங்கால் புலியை (வங்கப்புலி) அப்பகுதியை சேர்ந்த 1,000 பேர் சேர்ந்து கொலை செய்து அதன் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அந்த புலி கடந்த சில வாரங்களில் ஒருவரை தாக்கிக் கொலை செய்ததாகவும், கால்நடைகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்திகள், ஈட்டிகள், இரும்பு கம்பிகள் ஆகியவற்றுடன் இருந்த கிராமத்தினர் ஒரு வனப்பகுதிக்குள் புலியை துரத்திச் சென்று, வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள்ளாக அந்த புலியை கொன்றதாக அச்செய்தி கூறுகிறது.
இந்த சம்பவம் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலி காப்பகத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நடைபெற்றுள்ளது. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பாக, புலியின் கால்கள், காதுகள், பற்கள், தோலின் சில பாகங்களை கிராமத்தினர் வெற்றிச் சின்னங்களாக எடுத்துச் சென்றுவிட்டனர் என்று வன அதிகாரிகள் தெரிவித்ததாக குறிப்பிடுகிறது அந்த செய்தி.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”இந்த ஆண்டில் அசாமில் நடைபெறும் மூன்றாவது புலியின் இறப்பு இதுவாகும். இதற்கு முன்பாக ஓரங்க் தேசிய பூங்கா, பிஸ்வநாத் வன உயிர் பகுதியில் இறந்த புலியின் உடல்கள் கண்டறியப்பட்டன.
அசாமில் 227 புலிகள் இருப்பதாக 2022 கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.” என குறிப்பிடுகிறது அந்த செய்தி.
கோல்காட் வன அதிகாரி குனதீப் தாஸ், “புலி கூர்மையான ஆயுதங்களால் ஏற்பட்ட காயத்தினால் உயிரிழந்துள்ளது என்றும் துப்பாக்கிக் குண்டுகளால் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புலியை காப்பாற்ற முயன்ற போது மூன்று வன அதிகாரிகள் காயமடைந்தனர்.
கோல்காட் வன அலுவலகத்தில் புலியின் உடல் புதைக்கப்பட்டது. அதற்கு முன்பாக உடற்கூராய்வு நடத்தப்பட்டது. மே மாத தொடக்கத்திலிருந்தே அப்பகுதியில் புலி ஒன்று உலவி வருவது குறித்து அப்பகுதியினருக்கு தெரிந்துள்ளது என்றும் அவர்கள் தங்கள் ஆயுதங்களை தயார் செய்து வந்துள்ளனர் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். வியாழக்கிழமை காலை 6 மணிக்கு புலி இருக்கும் இடம் குறித்த தகவல் கிடைத்த உடனே, புலியை தேடும் பணியை தொடங்கியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.” என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் மேலும், காசிரங்கா கள இயக்குநர் சோனாலி கோஷ் புலியின் இருப்பிடம் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றார்.
உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ம்ரினால் சாக்கியா இந்த கொலையை கண்டித்தார். “இது மிகவும் துயரமான சம்பவம். இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் கிடையாது. வன விலங்குகளுக்குமானது” என்று கூறிய அவர், இதில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக குறிப்பிடுகிறது அந்த செய்தி.
IUCN – இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் அழிந்துவரும் இனங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ள புலிகள். வன உயிர் பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. அந்த சட்டத்தின் படி புலியை வேட்டையாடுவது, அதன் உடல் உறுப்புகளை விற்பது குற்றமாகும்.
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அபூர்ப பல்லவ் கோசுவாமி வனத்துறை போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். “மே 4-ம் தேதி புலியின் நடமாட்டம் குறித்து உள்ளூர்வாசி ஒருவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனப்பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால், உரிய எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம்” என்று கூறியதாக தெரிவிக்கிறது அந்த செய்தி.
ரூ.15 ஆயிரத்துக்கு அடமானம் வைக்கப்பட்ட ஆந்திர மாநில சிறுவன்: காஞ்சிபுரத்தில் சடலமாக மீட்பு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் பெற்றோர் வாங்கிய ரூ.15 ஆயிரம் கடனுக்காக வாத்து மேய்க்க அனுப்பப்பட்ட ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிறுவன் காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் சடலமாக மீட்கப்பட்டார் என்று தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த செய்தி கூறுகிறது.
ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி தனபாக்கியம். இவர்கள், காஞ்சிபுரம் அடுத்த வெம்பாக்கம் பகுதியில் தங்கியிருந்து வாத்து வளர்க்கும் தொழில் செய்துள்ளனர். ‘
“இவர்களிடம் ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் ஏனாதி-அங்கம்மாள் தம்பதியினர் கடனாக ரூ.15 ஆயிரம் வாங்கியுள்ளனர். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். இதனால் வாங்கிய கடனுக்காக தனது 9 வயது மகன் வெங்கடேஷை 10 மாதங்கள் வாத்து மேய்க்க முத்து-தனபாக்கியம் தம்பதி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.” என அச்செய்தி கூறுகிறது.
இந்த நிலையில் கடந்த 30 நாட்களுக்கு முன்பு சிறுவனுக்கு மஞ்சள் காமாலை நோய் அதிகரித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வெம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இதுகுறித்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் முத்து, தனபாக்கியம், இவர்களின் மகன் ராஜசேகர் ஆகியோர் சிறுவனை காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாற்றில் குழிதோண்டி புதைத்துள்ளனர். இந்த நிலையில், 10 மாத குத்தகை காலம் முடிவுற்று குழந்தையை மீட்க ஆந்திர மாநிலத்தில் இருந்து சிறுவனின் பெற்றோர் செவிலிமேடு வந்து, எங்கள் மகன் எங்கே என கேட்டுள்ளனர். நீங்கள் வாங்கிய கடன் கழியவில்லை. இன்னும் 3 மாதங்கள் உங்கள் மகன் வேலை செய்யவேண்டும் என முத்து கூறியுள்ளார்.” என தெரிவிக்கிறது அந்த செய்தி.
இதுகுறித்து ஆந்திர மாநிலம் சத்தியவேடு போலீஸில் பிரகாஷ் ஏனாதி அளித்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் வந்த ஆந்திர மாநில போலீஸார், முத்து, தனபாக்கியம், ராஜசேகர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். புத்தூர் டிஎஸ்பி ரவிகுமார் தலைமையிலான போலீஸார், காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலைய போலீஸார் உதவியுடன் புதைக்கப்பட்ட சிறுவன் வெங்கடேஷ் சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து “முத்து, தனபாக்கியம், ராஜசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிறுவன் மஞ்சள் காமாலை நோயில்தான் இறந்தாரா? வேறு காரணமா? என வெம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரித்து வருகின்றனர்” என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு