Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘எளிமையே அதன் பலம்’ – வீட்டில் வினிகர் கொண்டு சுத்தம் செய்வதன் நன்மைகள் என்ன?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், கத்ரீனா ஜிம்மர்பதவி, பிபிசி23 நிமிடங்களுக்கு முன்னர்
சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய புதிய பெர்லின் அபார்ட்மெண்டில் எனக்கும் என்னுடைய கழிப்பறை இருக்கைக்கும் இடையே ஒரு போராட்டம் நடந்தது. எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் அதன் உள்ளே படிந்திருக்கும் உப்புக்கறைகளை அகற்ற முடியவில்லை. விரக்தியடைந்த நான் கூகுளைப் பார்த்தேன். அதில் வினிகரை பரிந்துரைத்த ஒரு பக்கத்தைக் கண்டேன். முந்தைய குடியிருப்பாளர் வினீகரை ஏராளமாக விட்டுச் சென்றிருந்தார்.
எனவே இரண்டு தேக்கரண்டி “Essigessenz” அதாவது செறிவூட்டப்பட்ட வினிகரை அதற்குள் ஊற்றி அரை மணி நேரம் காத்திருந்த பிறகு தேய்த்து சுத்தம் செய்தேன். சிறிது நேரத்தில் உப்புக் கறைகள் காணாமல் போய்விட்டன.
அப்போதிலிருந்து எங்கு உப்புக் கறைகள் இருந்தாலும் அவற்றை அகற்ற நான் வினிகரை ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய சிங்க்கை மின்னச் செய்வதில் என்னுடைய வழக்கமான சமையலறை ஸ்ப்ரே கிளீனரை விட இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தேன். இதில் குழாய்களும் அடங்கும். அவற்றை வினிகரில் நனைத்த சமையலறை டிஷ்யூவால் சுற்றினேன்.
நான் வழக்கமாக சுத்தம் செய்யும் ஸ்ப்ரே இதற்கு எதிரே தோற்றுப்போனது. உப்புக் கறை படிந்த கண்ணாடி கெட்டிலை சுத்தம் செய்ய சிறப்பு மாத்திரைகள் வாங்குவதற்கு பதிலாக நான் இரண்டு தேக்கரண்டி அடர் வினிகரை அதில்விட்டு கொதிக்க வைத்தேன். உப்பு கறை கரையத் தொடங்கி சிறிது நேரத்தில் கெட்டில் பளபளப்பாக ஆனது.
வினிகருக்கு வேறு ஏதேனும் நன்மைகள் இருக்கிறதா என்று நான் யோசித்தேன். இது பாக்டீரியா மற்றும் பிற கிருமிகளையும் கொல்லுமா? மேலும் மிக முக்கியமாக இந்த எளிய இயற்கை தயாரிப்பு, வழக்கமான துப்புரவுப் பொருட்களை விட சுற்றுச்சூழலுக்கும் என் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததா?
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.வினிகர் என்றால் என்ன?
நச்சுத்தன்மை கொண்ட துப்புரவுப் பொருட்களுக்கு, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாக வினிகரை விளம்பரப்படுத்தும் பல பதிவுகளை இணையத்தில் பார்க்க முடிகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இவை அர்த்தமுள்ளதாகத் தோன்றின. வினிகர் வெறும் புளிக்கவைக்கப்பட்ட ஆல்கஹால் ஆகும்.
மேலும் இது நீண்ட காலமாக உணவு பதப்படுத்தலிலும், சாலட் டிரஸ்ஸிங்கிலும், வீட்டை சுத்தம் செய்யும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எனக்கு ஆதாரம் தேவைப்பட்டது. மூன்று நிபுணர்களை நேர்காணல் செய்த பிறகு இந்தக் கூற்றுகளில் சிலவற்றில் உண்மை இருப்பதை நான் அறிந்தேன். ஆனால் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது மற்றும் நீங்கள் எந்த வகையான அழுக்கை போக்க முயற்சிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து வினிகரின் நன்மைகள் அமையும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வினிகர் போன்ற அமில திரவங்களில் உப்பு படிமங்கள் எளிதில் கரைகிறதுவேதியியல் பொறியாளரும், பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியருமான எரிக் பெக்மேன், வினிகரின் முக்கிய அங்கமான அசிட்டிக் அமிலம்தான் உப்புக்கறைகளை நீக்கும் டீஸ்கேலராக வேலையைச் செய்கிறது என்று தெரிவித்தார்.
வினிகர் போன்ற அமில திரவங்களில் எளிதில் கரையக்கூடிய சில அயனிகள் சுண்ணாம்பு படிவம் மற்றும் துரு போன்றவற்றில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். முகம் பார்க்கும் கண்ணாடிகளில் படியும் உப்பு கறைகளை அகற்ற பெக்மேனும் வினிகரைப் பயன்படுத்துகிறார்.
அதே நேரத்தில் ஜெர்மனியில் உள்ள ரைன்-வால் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியலாளர் டிர்க் போக்முல் எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்த விரும்புகிறார். இதில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது மிகவும் பயனுள்ள டீஸ்கேலர் என்றும் கூடவே நல்ல வாசனை கொண்டதாகவும் இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.
ஆனால் வினிகர் எல்லாவற்றிலும் வேலை செய்யும் என்று சொல்ல முடியாது. பாத்திரங்களில் படியும் எண்ணெய் படலங்களை அகற்றுவதில் சோப்பு சிறப்பாக செயல்படுகிறது என்று பெக்மேன் கூறுகிறார். அதே நேரத்தில் சமைக்கும் போது மேற்பரப்பில் ஒட்டிக்கொள்ளும் பதப்படுத்தப்பட்ட எண்ணெய்களுக்கு எதிராக சமையல் சோடா பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெவித்தார்.
இருப்பினும் வினிகரை பேக்கிங் சோடாவுடன் கலக்கும் ஒரு பிரபலமான தீர்வை பெக்மேன் ஏற்கவில்லை. வினிகரின் அமிலத்தன்மையும் பேக்கிங் சோடாவின் காரமும் ஒன்றையொன்று திறம்பட ரத்து செய்வதால், இந்தக் கலவை வேதியியல் ரீதியாகப் பயனற்றது என்று அவர் கூறுகிறார்.
“நான் இரண்டையும் தனித்தனியாக பயன்படுத்துகிறேன், ஆனால் ஒன்றாக அல்ல. ஒன்றாக சேர்த்து பயன்படுத்தினால் அவற்றால் ஒரு பயனும் இல்லை,” என்கிறார் பெக்மேன். வினிகர் ஒரு சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பி என்று பரவலாக கூறப்பட்டாலும் அதில் உண்மை உள்ளதா என்பது மேலும் ஆராயப்படவேண்டும் என்று போக்முல் கூறுகிறார்.
பாக்டீரியாக்கள் மீது வினிகரின் எதிர்வினை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வினிகர் வெறும் புளிக்கவைக்கப்பட்ட ஆல்கஹால் ஆகும்2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் போக்முல் மற்றும் அவரது குழுவினர், நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக வினிகரை சோதித்தனர். சுத்தம் செய்வதற்காக ஒரு வாளி தண்ணீரில் ஒரு துளி வினிகரைச் சேர்க்கும்படி பல இணைய பரிந்துரைகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதன் நுண்ணுயிர் எதிர்ப்புத்தன்மை சுமார் 5% அசிட்டிக் அமில செறிவில் மட்டுமே இருக்கிறது என்று போக்முல் கண்டறிந்தார். தூய வினிகரில் மட்டுமே இந்த அளவு செறிவு உள்ளது. மேலும் காய்ச்சி வடிகட்டிய 10% செறிவு முழுமையாக பயனுள்ளதாக இருந்தது.
ஆராய்ச்சியாளர்கள் இதில் சிறிது சிட்ரிக் அமிலத்தை கலந்தனர். இது எஸ்கெரிச்சியா கோலி மற்றும் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் உள்ளிட்ட ஐந்து பொதுவான பாக்டீரியாக்களையும், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் வேக்ஸீனியா வைரஸின் பலவீனமான திரிபு ஆகியவற்றையும் அழித்தது.
கோவிட்-19-ஐ ஏற்படுத்தும் வைரஸான சார்ஸ்-கோவி-2-க்கு எதிராகவும் இதேபோன்ற செறிவுகள் செயல்படுவதாக பிற ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஆனால் இந்த செறிவுகள் கூட MRSA பாக்டீரியத்திற்கு எதிராக வேலை செய்யவில்லை.
சில ஆண்டிபயாடிக்குகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸின் திரிபும் இதில் அடங்கும். அதே நேரத்தில் எண்ணற்ற பிற பாக்டீரியாக்கள் மீது அது இன்னும் சோதிக்கப்படவில்லை. ஆல்கஹாலை வினிகராக மாற்றும் பாக்டீரியாக்கள் உட்பட பல பாக்டீரியாக்கள் அமிலத்தில் செழித்து வளரும் என்று பெக்மேன் தெரிவிக்கிறார். அசிட்டிக் அமிலம் சில பூஞ்சைகளையும், நோரோ வைரஸ் போன்றவற்றையும் ஒன்றும் செய்வதில்லை என்று போக்மல் கூறுகிறார். அதே நேரத்தில் சாதாரண பாக்டீரியாக்களுக்கு எதிராக சோப்பும், வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக கிருமிநாசினிகளும் சிறப்பாக செயல்படுகின்றன என்று பெக்மேன் குறிப்பிடுகிறார்.
ப்ளீச் போன்றவை கிட்டத்தட்ட எல்லாவற்றையும் கொன்றுவிடும் என்று கூறிய அவர் சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் ப்ளீச் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சுட்டிக்காட்டினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சமைக்கும் போது மேற்பரப்பில் ஒட்டிக்கொள்ளும் பதப்படுத்தப்பட்ட எண்ணெய்களுக்கு எதிராக வினிகரின் செயல்திறன் குறைவாக உள்ளதுவினிகரின் உடல்நல அபாயங்கள் என்ன?
வினிகர் கிருமிகளை கொல்ல வேண்டும் என்றால் அதன் செறிவு அதிகமாக இருக்கவேண்டும் என்று என்று போக்முல் வலியுறுத்துகிறார். சுத்தம் செய்யும் கரைசலில் ஒரு டீஸ்பூன் வினிகரை மட்டும் சேர்த்தால் அதன் செறிவு போதுமானதாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் அசிட்டிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தால் அது சருமத்தில் அதிக எரிச்சலை ஏற்படுத்தும், கண்களில் பட்டால் பாதிப்பு ஏற்படும் என்று அவர் கூறினார். இயற்கை கற்கள், செம்பு, வெண்கலம் மற்றும் பித்தளை போன்ற உலோகங்களை வினிகர் அழிக்கிறது என்று இத்தாலிய வேதியியலாளர் டாரியோ பிரெஸ்ஸானினி எழுதிய தி சயின்ஸ் ஆஃப் கிளீனிங் புத்தகம் தெரிவிக்கிறது.
மேலும் டிஷ்வாஷர் மற்றும் வாஷிங் மெஷின்களை இறுக்கமாக மூடுவதற்கு பயன்படுத்தப்படும் ரப்பர் கேஸ்கட்களை இது சேதப்படுத்தும். அதே நேரத்தில் காபி மெஷின்களையும் வினிகர் சேதப்படுத்தலாம். டைல்களின் மேலே இருக்கும் பூச்சுகளை அது அகற்றிவிடும் என்று பிரெஸ்ஸானினி எழுதுகிறார். ஆனால் கண்ணாடி, கழிப்பறை இருக்கைகள் உட்பட பீங்கான் மேற்பரப்புகள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங்க்குகளில் வினிகரை பயன்படுத்தலாம் என்று போக்முல் குறிப்பிட்டார்.
வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களுடன் அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகள் அல்லது பாதுகாப்பு பரிந்துரைகள் அளிக்கப்படுவதில்லை. இது ஒரு மிகப்பெரிய பிரச்னை என்று போக்முல் தெரிவித்தார்.
“நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தால் அவை பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால் இணையத்தில் நிறைய முட்டாள்தனமான மற்றும் அபத்தமான பரிந்துரைகள் உள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.
பாரம்பரிய துப்புரவுப் பொருட்களுடன் ஒப்பிடும்போது வினிகரின் உடல்நல அபாயங்கள் என்ன என்பதைப் பற்றி மேலும் அறிய பிரிட்டனில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் உட்புற காற்று வேதியியல் பேராசிரியரான நிக்கோலா கார்ஸ்லாவை தொடர்பு கொண்டேன்.
துப்புரவுப் பொருட்கள் நமது வீடுகளிலும் கட்டிடங்களிலும் காற்றை சீர்குலைக்கின்றன என்பது அவரது மிகப்பெரிய கவலையாக உள்ளது. மற்ற தொழில் குழுக்களுடன் ஒப்பிடும்போது தொழில்முறை வீட்டு சுத்தம் செய்பவர்களுக்கு ஆஸ்துமா விகிதம் அதிகமாக உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட ஒரு தயாரிப்பு அல்லது மூலப்பொருளை இதற்குக் காரணமாக சுட்டிக்காட்ட முடியவில்லை.
பட மூலாதாரம், Getty Images
சமீபத்திய ஆய்வில் கார்ஸ்லாவும் அவரது குழுவினரும், டிஷ்வாஷர் திரவம், வாஷிங் சோப்பு திரவம் மற்றும் ஸ்ப்ரே பொருட்கள் உட்பட 23 வெவ்வேறு சுத்தம் செய்யும் பொருட்களை சோதித்தனர். அவற்றில் பல பொருட்கள், ஆவியாகும் ரசாயன சேர்மங்களை (VOCs) வெளியிடுவதை அவர்கள் கண்டறிந்தனர்.
டெர்பீன்கள் போன்ற இந்த சேர்மங்களில் சில, லாவெண்டர் அல்லது பைன் எண்ணெய்கள் போன்ற நல்ல வாசனையை வழங்குவதற்காக பெரும்பாலும் சேர்க்கப்படுகின்றன. ஆனால் அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையவை அல்ல. உதாரணமாக டெர்பீன்கள் காற்றில் உள்ள ஓசோனுடன் எளிதில் வினைபுரிந்து சிறிய துகள்களை உருவாக்குகின்றன. பொதுவாக இத்தகைய குறுந்துகள்களை உள்ளிழுப்பது நுரையீரல் மற்றும் இதய நோய் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
“உங்கள் மூக்கு பெரிய துகள்களுக்கு ஒரு நல்ல வடிகட்டியாக இருக்கிறது. ஆனால் சிறிய துகள்கள் உங்கள் நுரையீரலுக்குள் புகுந்து ரத்த ஓட்டத்தில் நுழையலாம்,” என்று கார்ஸ்லா கூறுகிறார்.
“இயற்கையானது” அல்லது “சுற்றுச்சூழலுக்கு உகந்தது” என்று விளம்பரப்படுத்தப்படும் துப்புரவுப் பொருட்களும் ஆரோக்கியமானதாக இல்லை என்பதை இந்த ஆய்வில் அவர்கள் கண்டறிந்தனர்.
“இயற்கை/பசுமைப் பொருட்கள் மற்ற துப்புரவு பொருட்களைப்போலவே அல்லது அவற்றுக்கும் அதிகமாக VOC-களை வெளியிடுவதாக இருந்தன. அவற்றில் பல அதிக வினைத்திறன் கொண்டவையாக இருந்தன” என்று அவர் கூறுகிறார்.
ஆனால் இதற்கு நேர்மாறாக வினிகரில் தண்ணீர் மற்றும் அசிட்டிக் அமிலம் மட்டுமே உள்ளன. (சிவப்பு மற்றும் ஒயின் வினிகருக்கு இடையில் வேறுபாட்டை ஏற்படுத்தும் வேறு சில பொருட்களும் இருக்கின்றன).
“இது வேதியியல் ரீதியாக பிற பொருட்களைப்போல வினைபுரியாது” என்று கார்ஸ்லா கூறுகிறார். வினிகரின் மற்றொரு நன்மை என்னவென்றால், இது பொதுவாக மேற்பரப்புகளைத் துடைக்க ஒரு துணியில் பயன்படுத்தப்படுகிறது, ஸ்ப்ரேயாக அல்ல என்று அவர் தெரிவித்தார்.
திரவங்கள் மற்றும் துடைப்பான்களை விட ஸ்ப்ரேக்களாகப் பயன்படுத்தப்படும் துப்புரவுப் பொருட்கள் சுவாச மண்டலத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. “நீங்கள் எதையாவது தெளிக்கும்போது அந்த ரசாயனத்தை, சுவாசிக்க மிகவும் எளிதான வடிவமாக மாற்றுகிறீர்கள்” என்று கார்ஸ்லா கூறுகிறார்.
இருப்பினும் தோலுடன் தொடர்பு ஏற்படும் நிலை இருந்தால் எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் கையுறைகளை அணியுமாறும், நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்யுமாறும், அதிகப்படியாக சுத்தம் செய்வதைத் தவிர்க்குமாறும் அவர் பரிந்துரைக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வினிகர் விரைவாக சிதைவடைகிறது, எனவே சுற்றுச்சூழல் மீது சிறிய தாக்கத்தையே ஏற்படுத்துகிறதுவினிகரைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?
இவை அனைத்தும் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன: பாரம்பரிய துப்புரவு பொருட்களை விட வினிகரைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?
இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது கடினம் என்று பெக்மேன் கூறுகிறார். “ஒவ்வொரு மூலப்பொருளும் எங்கிருந்து வருகிறது, எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, கொண்டு செல்லப்படுகிறது, தொகுக்கப்படுகிறது மற்றும் இறுதியில் அகற்றப்படுகிறது என்பதைக் கண்காணிக்கும் பகுப்பாய்வு இருக்க வேண்டும். ஆனால் தங்கள் தயாரிப்புகளை ‘பசுமை’ தயாரிப்பு என்று கூறிக்கொண்டாலும் கூட சில நிறுவனங்கள் மட்டுமே இதைச் சரியாகச் செய்கின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.
“ஆனால் நான் வினிகரைப் பற்றி ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். எளிமையே அதன் வலிமை,” என்று பெக்மேன் விவரித்தார். வழக்கமான துப்புரவுப் பொருட்களில் டஜனுக்கும் மேற்பட்ட வெவ்வேறு பொருட்கள் இருக்கலாம். அவற்றில் பல தொழில்துறை ரீதியாக, மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்தும் செயல்முறைகளில் தயாரிக்கப்படுகின்றன என்று அவர் கூறுகிறார்.
அதே நேரம் இயற்கையான, ஈஸ்ட் மூலமான ஆல்கஹால் நொதித்தலால் அசிட்டிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது சர்க்கரையின் இயற்கையான நொதித்தலில் இருந்து வருகிறது. வினிகர் தயாரிப்பதன் மிகப்பெரிய சுற்றுச்சூழல் தாக்கம், சர்க்கரை எங்கிருந்து வருகிறது என்பதுதான்.
அது திராட்சை, ஆப்பிள், தானியங்கள், உருளைக்கிழங்கு அல்லது அரிசி என எதுவாக இருந்தாலும் சரி, இவை பெரும்பாலும் புதுப்பிக்கத்தக்க வளங்கள். ஆனால் இது இயற்கையாகவே புளிக்கவைக்கப்பட்ட வினிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று போக்முல் சுட்டிக்காட்டுகிறார். அவை பொதுவாக உணவுப் பொருட்கள் என்பதன் கீழ் விற்கப்படுகின்றன.
புதைபடிவ எரிபொருட்களிலிருந்து பெறப்படும் செயற்கை வினிகர்களும் உள்ளன. அதாவது அவை எண்ணெய் மற்றும் எரிவாயு பிரித்தெடுப்பதில் இருக்கும், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுடன் வருகின்றன.
தன் ஆயுட்காலத்தின் முடிவில் கூட வினிகர் சிறிய விளைவையே ஏற்படுத்துகிறது. சோப்பில் கடினமான மூலக்கூறுகள் கொண்ட பல பொருட்கள் இருக்கின்றன. அவை எளிதில் மக்குவதில்லை. அவை சுற்றுச்சூழலில் சேரும்போது உயிரினங்களைக் கொன்று கொண்டே இருக்கும். ஆனால் வினிகர் விரைவாக உடைந்து விடும் என்று பெக்மேன் கூறுகிறார். “வினிகர் எந்தவொரு நிலைத்தன்மை அளவையும் கடந்து நிற்கிறது. ஏனெனில் அது எளிமையானது மற்றும் சிதையக்கூடியது,” என்று அவர் தெரிவிக்கிறார்.
இதையெல்லாம் அறிந்த பிறகு வினிகர் பயன்பாடு பற்றி நான் உற்சாகமாக உணர்தேன். மேற்பரப்புகளில் இருந்து கிருமிகளை அகற்ற நான் இதை நம்பப்போவதில்லை. ஆனால் சுண்ணாம்பு படிவுகளை அகற்ற இதை நான் பயன்படுத்துவேன். துரு இருக்கும் பொருளில் இதை முயற்சிக்க ஆவலாக இருக்கிறேன்.
என் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்காத ஒரு நிலையான தயாரிப்பை நான் பயன்படுத்துகிறேன் என்பதால் இதன் வாசனையை மகிழ்ச்சியுடன் பொறுத்துக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு