Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இன்றைய (21/05/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
தங்க நகைக்கடன் பெறுவதற்கான விதிகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், ” ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிகளின் படி, தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும். எடுத்துக்காட்டாக நகையின் மதிப்பு 100 ரூபாய் என்றால் 75 ரூபாய் வரை மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும். மேலும் தங்க நகை கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும்.
தங்க நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் சான்றிதழ் பெற வேண்டும். குறிப்பிட்ட வகையிலான தங்கங்களுக்கு மட்டுமே நகைகடன் வழங்கப்படும். நகை 22 காரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
வெள்ளி நகைகளுக்கும் நகைக்கடன் பெறலாம். தனிநபர்கள் ஒரு கிலோ தங்க நகை வரை மட்டுமே அடக்கு வகைக்க முடியும். நகைக்கடனாக பெறப்படும் தங்கம் 22 காரட் மதிப்பின் அடிப்படையில் கடன் வழங்கப்படும். நகைக்கடன் ஒப்பந்தத்தில் முழுமையான தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
நகைக்கடன் வாங்கியவர் அந்த கடனை திரும்ப செலுத்திய 7 வேலை நாட்களில் நகையை திரும்பி ஒப்படைக்க வேண்டும். 7 வேலை நாட்களில் ஒப்படைக்கவில்லையென்றால் கடன் கொடுத்தவர் (வங்கிகள்) ஒரு நாளைக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக கொடுக்க வேண்டும் என புதிய விதிகள் தெரிவிக்கின்றன.
அடமானம் வைத்திருக்கும் தங்கத்தை முழுவதும் மீட்டப் பிறகு தான், மீண்டும் அந்த நகைகளை அடமானம் வைக்க முடியும் என்றும் தங்க நகைகளை மீட்காமல் அப்படியே அடமானக் காலத்தை நீட்டிக்க முடியாது என்றும் ரிசர்வ் வங்கி கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கைதிகளின் சாதியை ஆவணங்களில் குறிப்பிடக் கூடாது: தமிழக அரசு உத்தரவு
தமிழக சிறை ஆவணங்களில் கைதிகளின் சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என சிறைத்துறை விதிமுறைகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், ” தமிழக சிறைகளில் கைதிகள் ஜாதி ரீதியாக அடையாளம் காணப்பட்டு, ஒவ்வொரு ஜாதிக்கும் என ஏற்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அடைக்கப்படுவதாக புகாா் கூறப்பட்டு வந்தது. மேலும், ஜாதி ரீதியாக கைதிகளுக்கு சிறையில் பணி ஒதுக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசு, சிறைத் துறை விதிமுறைகளில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
“தமிழக சிறைகளில் புதிதாக அடைக்கப்படும் கைதிகளின் ஜாதி பெயரை சிறைத் துறை ஆவணங்களில் குறிப்பிடக் கூடாது. கைதிகளின் ஜாதி பெயரை குறிப்பிடாமலேயே, அனைத்து ஆவணங்களையும் பராமரிக்க வேண்டும். சிறைக்குள் கைதிகளிடம் ஜாதி ரீதியாக பாகுபாடு காட்டக் கூடாது. கைதிகளை ஜாதி ரீதியாக வகைப்படுத்தி சிறைக்குள் அடைக்கவும் கூடாது. அதேபோல ஜாதி ரீதியாக சிறைக்குள் கைதிகளுக்கு பணி ஒதுக்கக் கூடாது என்று விதிமுறை திருத்தப்பட்டுள்ளது.
மேலும் சிறைக்குள் கழிப்பறை சுத்தம் செய்யும் பணி,கழிவுநீா் தொட்டி சுத்தம் செய்யும் பணி ஆகியவற்றை செய்ய கைதிகளுக்கு பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் ஏ.ஐ செயலி விற்பதாக ரூ. 3.5 கோடி மோசடி
பட மூலாதாரம், தி இந்து தமிழ் திசை
சென்னை ஏஐ செயலியை விற்பதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி செய்த பொறியியல் பட்டதாரி கைது செய்யப்பட்டார் என்று தி இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், ” ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் மூலம் ஆன்லைன் வணிகத்துக்கான செயலி இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் சமூக வலைதளத்தில் விளம்பரம் வெளியானது. இதைப் பார்த்த பலரும் அந்தச் செயலியை வாங்கி, ரூ.40 ஆயிரம் செலுத்தியுள்ளனர். ஆனால் அந்த செயலி வேலை செய்யவில்லை. மேலும், செயலியை விற்றவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட 7 பேர் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸில் புகார் தெரிவித்தனர்.
விசாரணையில், மோசடியில் ஈடுபட்டவர் சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த அஸ்வின் விக்னேஷ் (32) என்பதும், பொறியியல் பட்டதாரியான இவர் நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்டோரிடம் இந்த போலி செயலியை விற்று, ரூ.3.5 கோடி வரை மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் சென்னை சோழிங்கநல்லூரில் பதுங்கியிருந்த அஸ்வின் விக்னேஷை கைது செய்தனர். அவரிடமிருந்து 14 லேப்டாப், கார், ரூ.7.60 லட்சம் ரொக்கம், மின்சாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து புதுச்சேரி சிறப்பு காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா கூறும்போது, “பொறியியல் பட்டதாரியான அஸ்வின் விக்னேஷ், டிரேடிங் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். பின்னர், சென்னையில் தனியாக நிறுவனம் தொடங்கி, மோசடியில் ஈடுபட்டுள்ளார். பொதுமக்கள் ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும்போது, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அந்நிறுவனம் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்த நிறுவனமா என்பதை விசாரித்து, பின்னர் பணத்தை செலுத்த வேண்டும்” என்றார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இறந்தவரின் கைரேகையை ஆதார் தரவுடன் ஒப்பிட இயலாது’ – ஆதார் ஆணையம்
பட மூலாதாரம், Getty Images
இறந்து போன அடையாளம் தெரியாத நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது சாத்தியமற்றது என உயர் நீதிமன்றத்தில் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், ” அடையாளம் தெரியாத இறந்த நபர் ஒருவரின் அடையாளத்தை கண்டறிவதற்காக அவரது கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து விவரங்களை வழங்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டிஎஸ்பி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில் ஆதார் ஆணையத்தின் துணை இயக்குநர் பிரியா ஸ்ரீகுமார் சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் சீனிவாசமூர்த்தி தாக்கல் செய்த பதில் மனுவில், ‘இந்தியாவில் வசிக்கும் குடிமகன்களை முறையாக கணக்கிட்டு அவர்களுக்கு நிதி மற்றும் அரசின் பிற மானியங்கள், சேவைகள் உண்மையான பயனாளிகளுக்கு வெளிப்படையாக சென்றடையும் வகையில் 12 இலக்க எண்கள் கொண்ட ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டன.
இதன்படி தனி நபர்களின் பிரத்யேக ஆதார் தொடர்பான சேகரிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட அடையாளங்கள் மற்றும் பயோ மெட்ரிக் தகவல்களை வேறு எந்த காரணங்களுக்காகவும் மற்றவர்களுக்கு பகிர இயலாத அளவுக்கு சட்ட ரீதியாக கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்காக தனிநபர் குறித்த விவரங்களை உறுதி செய்வதே ஆதாரின் நோக்கமேயன்றி, தனிநபர்களின் நடவடிக்கையை கண்காணிப்பது ஆணையத்தின் நோக்கம் அல்ல.
தடயவியல் பரிசோதனைக்கு ஏற்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தனிநபரது கருவிழி மற்றும் கைரேகை தகவல்களை ஆணையம் சேகரிப்பதில்லை என்பதால் இறந்து போன நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது என்பது சாத்தியமற்றது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 12-க்கு தள்ளி வைத்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் காணி அபகரிப்பை தடுக்க தமிழ்தேசிய பேரவை கோரிக்கை
பட மூலாதாரம், Facebook/ GG Ponnambalam
படக்குறிப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இலங்கையில் காணி அபகரிப்பையும், பௌத்த மயமாக்கலையும் தடுப்பதற்கு தலையீடு செய்யுங்கள் என அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய, சுவிட்ஸர்லாந்து ராஜதந்திரிகளிடம் தமிழ்த்தேசிய பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், ” வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், குருந்தூர் மலை விவகாரம், தையிட்டியில் விகாரை நிர்மாணம் என்பன உள்ளடங்கலாக வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி சுவீகரிப்பு முயற்சிகள் தொடர்பில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாட்டு இராஜதந்திரகளிடம் எடுத்துரைத்திருக்கும் தமிழ்த்தேசிய பேரவையின் பிரதிநிதிகள், காணி அபகரிப்பையும், தொல்பொருள் அடையாளங்கள் பௌத்தமயப்படுத்தப்படுவதையும் தடுப்பதற்கு சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான குழுவுக்கும் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
இராஜதந்திரிகளுடனான இச்சந்திப்புக்களின்போது முதலாவதாக வடமாகாணத்தில் உள்ள உரிமைகோரப்படாத சுமார் 6000 ஏக்கர் காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதியிடப்பட்டு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. தையிட்டியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் விகாரை குறித்தும், குச்சவெளியில் 32 சைவ தொல்பொருள் அடையாளங்களை பௌத்த அடையாளங்களாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி குறித்தும் இராஜதந்திரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதுடன், தொல்பொருள் அடையாளங்கள் அவ்வாறே தொடர்ந்து பேணப்படவேண்டுமே தவிர, அவற்றை பௌத்தமயப்படுத்தக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. இவைகுறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்படவேண்டும் எனவும் இராஜதந்திரகளிடம் வேண்டுகோள்விடுக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு