Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இன்றைய ( 20/05/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல என, இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
அச்செய்தியில், “இலங்கையில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2015-ல் கைது செய்யப்பட்டார். 2018-ல் விசாரணை நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. 2022 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் அவரது தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைத்தது. 7 ஆண்டுகள் தண்டனை முடிவடைந்ததும் அவர் இந்தியாவில் இருக்கக்கூடாது, இலங்கைக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதற்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இலங்கையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனது மனைவி, குழந்தைகள் இந்தியாவில் குடியேறிவிட்டதாகவும் கூறியுள்ள அவர், தன்னை நாடு கடத்தும் நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை என்பதால் தான் இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் தீபங்கர் தத்தா, வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அப்போது நீதிபதிகள், ‘உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? ஏற்கெனவே நாங்கள் 140 கோடி மக்களுடன் இருந்து போராடி வாழ்ந்து வருகிறோம். இந்தியா, அனைத்து இடங்களிலிருந்தும் வரும் வெளிநாட்டினரை வரவேற்று மகிழ்விக்கக்கூடிய சத்திரம் அல்ல. இந்தியாவில் குடியேற உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்குச் செல்லுங்கள்’ என்று மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதாக கூறுகிறது அந்த செய்தி.
காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறி உயிரிழப்பு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஆந்திராவில் காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக, தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
அச்செய்தியில், “ஆந்திர மாநிலம், துவாரகாபுடி கிராமத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஒருவர் தனது காரை அப்பகுதியில் நிறுத்தியிருக்கிறார். கார் பூட்டப்பட்டுள்ளதா என்பதை அவர் சரிபார்க்க தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு குழந்தைகள் மழை காரணமாக காரைத் திறந்து உள்ளே நுழைந்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக, காரின் கதவு தற்செயலாக உள்ளே பூட்டிக்கொண்டதாக அச்செய்தி கூறுகிறது. கதவைத் திறந்து குழந்தைகளால் வெளியேற முடியாததால் அவர்கள் அனைவரும் கடுமையான வெப்பத்தாலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பல இடங்களில் தேடியும் குழந்தைகள் கிடைக்காத நிலையில், கார் நின்ற பகுதி வழியாக சென்று பெண் ஒருவா், குழந்தைகள் காருக்குள் மயங்கிக் கிடப்பதை கண்டு தகவல் தெரிவித்தாா். இதற்குள் சுமாா் 6 மணி நேரம் கடந்துவிட்டது, காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்த கிராம மக்கள் குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், நால்வரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனர். காருக்குள் இருந்த அதிக வெப்பம், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அவா்கள் உயிரிழந்திருக்கலாம் என்று தெரியவந்ததுள்ளது. பலியான குழந்தைகள் உதய் (8), சாருமதி (8), கரிஷ்மா (6), மற்றும் மனஸ்வினி (6) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.” என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனக் குறைவாக உயிரிழப்பை ஏற்படுத்தும் சட்டப் பிரிவு 304 (ஏ) பிரிவின் கீழ் காரின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.
சோஃபியா குரேஷி பற்றி அவதூறு: அமைச்சரின் மன்னிப்பை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம்
பட மூலாதாரம், KrVijayShah/ EPA
படக்குறிப்பு, கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷாராணுவ அதிகாரி சோஃபியா குரேஷி பற்றி அவதூறாக விமர்சித்ததாக, மத்திய பிரதேச அமைச்சரின் மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது என தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலாக, இதிய படைகள் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை பெண் ராணுவ அதிகாரி சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் நாட்டுக்கு அறிவித்தனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷா சோபியா குரேஷி குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. பின்னர் தன் கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சூர்யகாந்த், கோடீஸ்வர் சிங் ஆகியோர், “ஒட்டுமொத்த நாடும் ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறது. ஆனால் நீங்கள் (விஜய் ஷா) அவதூறான கருத்தை தெரிவித்து இருக்கிறீர்கள். அதைக்கேட்டு ஒட்டுமொத்த நாடும் அவமானப்படுகிறது.
மிகவும் மலிவான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறீர்கள். உங்கள் வீடியோவை பார்த்தோம். அது என்ன முதலை கண்ணீரா? அல்லது சட்ட நடவடிக்கையை தவிர்க்கும் முயற்சியா? இது என்ன மாதிரியான மன்னிப்பு? உங்கள் தவறை ஒப்புக்கொண்டு நீங்கள் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால், ‘இப்படி சொல்லி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.’ என கூறியிருக்கிறீர்கள். இது மன்னிப்பு கேட்கும் முறை அல்ல. நீங்கள் பேசிய அற்பத்தனமான வார்த்தைகளுக்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்.
மக்கள் பிரதிநிதி என்ற முறையில் நீங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வார்த்தையையும் உணர்வுடன் பேச வேண்டும்.” என கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய் ஷாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை 20ம் தேதி, இன்று காலை 10 மணிக்குள் மத்திய பிரதேச காவல்துறை டிஜிபி அமைக்க வேண்டும் என்றும், ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரி தலைமையிலான அக்குழுவில் ஒரு பெண் அதிகாரியும் இடம்பெற வேண்டும் என்றும் முதல் அறிக்கையை 28ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியதாக அச்செய்தி கூறுகிறது.
சர்க்கஸ் கூடாரத்தில் ஒட்டகத்தை திருடியது யார்? தஞ்சை போலீஸார் விசாரணை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் சர்க்கஸ் கூடாரத்தில் இருந்த ஒட்டகத்தைத் திருடியது யார் என்று, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு தஞ்சாவூர் போலீஸார் விசாரித்து வருவதாக, இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
அச்செய்தியில், “கரூர் மாவட்டம் வேட்டமலிக்களம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் விஜய் (25). இவர் தனது குடும்பத்தினருடன் ஊர் ஊராகச் சென்று சர்க்கஸ் நடத்துவது வழக்கம். அதன்படி, தற்போது தஞ்சாவூர் கீழ வஸ்தாசாவடி பகுதியில் கூடாரம் அமைத்து சர்க்கஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 15-ம் தேதி இரவு சர்க்கஸ் காட்சி முடிந்த பின், விஜய் தனது குடும்பத்தினருடன் அங்கு தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது கூடாரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒட்டகத்தைக் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் பல்வேறு இடங்களில் ஒட்டகத்தை தேடிப் பார்த்தும், கிடைக்கவில்லை. இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா போலீஸில் விஜய் புகார் செய்தார். இதன்பேரில், உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில், தஞ்சாவூர் ஞானம் நகர் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில், ஒட்டகத்தை ஒருவர் ஓட்டிச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அந்த நபர் யார்? எதற்காக ஒட்டகத்தை திருடிச் சென்றார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இனவாதம் தலைதூக்குவதற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்கஅதிகார மோகமுடையவர்கள் வடக்கிலும், தெற்கிலும் மீண்டும் இனவாதத்தை தூண்ட ஆரம்பித்துள்ளனர் என்றும் இனவாதம் தலைதூக்குவதற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளதாக, வீரகேசரி இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
திங்கட்கிழமை கோட்டை – ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் போர் வீரர் நினைவு தூபி அமைந்துள்ள மைதானத்தில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “அதிகார மோகத்தால் உருவாக்கப்படும் யுத்தம் என்பது பேரழிவாகும். எவ்வாறிருப்பினும் மக்களால் நிராகரிக்கப்பட்ட தோல்வியடைந்த சில குழுவினர் யுத்தம் என்பது ஆசீர்வாதம் என நினைக்கின்றனர். அது அவர்களுக்கு தான். ஆனால் எமக்கு அவ்வாறல்ல. இந்த குரல்களுக்கு நாம் இனியும் அஞ்ச வேண்டுமா?
அமைதியையும், நல்லிணக்கத்தையும் காட்டிக் கொடுப்புக்களாக திரிபுபடுத்தியிருக்கின்றனர். தற்போதுள்ள படை வீரர்கள் இப்போது எம் கைகளிலுள்ள துப்பாக்கிகள் எந்த சந்தர்ப்பத்திலும் இயக்கப்படக் கூடாது என்றே எண்ணுகின்றனர். ஆனால் மிகச்சிறிய குழுவொன்று அவற்றை ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் பயன்படுத்தச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர்.
அவ்வாறான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை என்பதை நாம் அச்சமின்றி கூற வேண்டும். அமைதியை நிலைநாட்டுவதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் எடுப்பதற்கு நாம் தயார். எவ்வாறிருப்பினும் இனவாதம் மீண்டும் வெளிவர ஆரம்பித்துள்ளது. அதிகார மோகமுடையவர்கள் வடக்கிலும், தெற்கிலும் மீண்டும் இனவாதத்தைத் தூண்ட ஆரம்பித்துள்ளனர். எனினும், அது தலைதூக்குவதற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது” என்றார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு