Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘தாடி வைத்திருந்தால் தாலி கட்டக் கூடாது’ – மீனவ கிராமங்களில் வினோத கட்டுப்பாடு ஏன்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ் 49 நிமிடங்களுக்கு முன்னர்
சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நவீனுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமம் தான் பூர்வீகம்.
அதே ஊரைச் சேர்ந்த பெண்ணை அவருக்கு நிச்சயம் செய்திருந்தனர். ஏப்ரல் முதல் வாரம் திருமணம். முகூர்த்த நேரம் நெருங்கும்போது, தாலி கட்டுவதற்கு ஊர்ப் பெரியவர்கள் அனுமதி தரவில்லை. ஒரே காரணம், மணமகனின் தாடி.
“சிறிய அளவிலான தாடியை மட்டுமே தான் வைத்திருப்பதாக அவர் கூறினார். ஆனால், அதை ஊர்ப் பெரியவர்கள் ஏற்கவில்லை. தாடியை மழித்த பிறகே அவரால் தாலி கட்ட முடிந்தது” எனக் கூறுகிறார், கிளிஞ்சல் மேடு கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன்.
‘திருமண நாளில் மணமகன் தாடியுடன் இருக்கக் கூடாது’ என்பது இங்குள்ள 11 மீனவ கிராமங்களிலும் கடைபிடிக்கப்படும் கட்டுப்பாடாக உள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஏன் இப்படியொரு கட்டுப்பாடு?
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
புதுச்சேரியின் காரைக்காலில் காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, பட்டணம், கீழ் காசா குடி, மண்டபத்தூர், காளி குப்பம் உள்பட 11 மீனவ கிராமங்கள் உள்ளன. இவை தவிர சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட சிறிய மீனவ கிராமங்களும் உள்ளன.
இங்கு மீன் பிடி தொழில் பிரதானமாக உள்ளது. ஒவ்வொரு கிராமத்துக்கும் 15 பேர் கொண்ட குழு ஒன்று உள்ளது. இவர்களை கிராம பஞ்சாயத்தார் என அழைக்கின்றனர்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கட்டுப்பாடு விதிக்கப்பட்டது ஏன்?
கிராமத்தில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், திருமணம் உள்பட முக்கிய நிகழ்வுகளில் பின்பற்றப்பட வேண்டிய விதிகள் என்ன என்பதை கிராம பஞ்சாயத்தார் தீர்மானிப்பதாக கூறுகிறார், காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்.
“இந்தக்கால இளைஞர்கள் பண்பாட்டைக் கடைபிடிக்கக் கூடியவர்களாக இல்லை. திருமணம் போன்ற முக்கிய நிகழ்வில் தாடியை வைத்துக் கொள்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. அதனால் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தோம். அதை ஊர் மக்களும் ஏற்றுக் கொண்டனர்” என்கிறார் அவர்.
“எல்லாம் முறைப்படி சடங்குகளுடன் நடந்தாலும் கிராம பஞ்சாயத்தார் சொன்னால் தான் திருமணமே நடக்கும். திருமணம் முடிந்த பிறகு மணமகன் தாடி வைத்துக் கொள்வதற்கு எந்த தடையும் இல்லை” எனக் கூறுகிறார், கிளிஞ்சல் மேடு கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன். இவர் கிராம பஞ்சாயத்தார்களில் ஒருவராக இருக்கிறார்.
‘1 மணிநேரத்துக்கு முன்னர் எச்சரிக்கை’
படக்குறிப்பு, ‘திருமண நாளில் மணமகன் தாடியுடன் இருக்கக் கூடாது’ என்பது 11 மீனவ கிராமங்களிலும் கடைபிடிக்கப்படும் கட்டுப்பாடாக உள்ளதுதொடர்ந்து பேசிய அவர், “காலை 9 மணி முதல் 10 மணி வரை திருமணம் நடக்க உள்ளது என்றால், அதை நடத்தி வைப்பதற்கு பணியாளர் ஒருவரை நியமித்துள்ளோம். தாலி கட்டுவதற்கு 1 மணிநேரத்துக்கு முன்னதாக அவர் மண்படத்துக்குச் சென்றுவிடுவார்.
மணமகன் தாடி வைத்திருக்கிறாரா என்பதைப் பார்ப்பது தான் அவரது முதல் வேலை. தாடி வைத்திருந்தால் கிராம பஞ்சாயத்தாருக்கு தகவல் வரும். யாரும் திருமணத்துக்குச் செல்ல மாட்டார்கள். நாங்கள் செல்லாவிட்டால் திருமணமும் நடக்காது” என்கிறார்.
“தாலி கட்ட வேண்டுமா… தாடி எடுக்க வேண்டுமா என்பதை மணமகன் முடிவு செய்யலாம். ஒரு மணிநேரத்தில் திருமணம் நடக்க உள்ள நிலையில், இதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள்” என்கிறார் கஜேந்திரன்.
படக்குறிப்பு, ”ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்வது என முடிவெடுத்தால், அந்தப் பெண்ணிடம் சென்று கிராம பஞ்சாயத்தார் பேசுவார்கள்”’கட்டுப்பாடுகளை மீறினால் தண்டனை’
“பஞ்சாயத்தாரின் கட்டுப்பாடுகளை மீறி திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு கிராமத்தில் எந்தப் பொறுப்புகளையும் வழங்க மாட்டோம்” எனக் கூறுகிறார், காரைக்கால் மேடு கிராம பஞ்சாயத்துக்குக் குழுவைச் சேர்ந்த சிவக்குமார்.
“ஊரில் கிரிக்கெட் கிளப், கபடி கிளப் ஆகியவற்றில் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்க மாட்டோம். ஊரில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் அவர்களுக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படாது. ஊர் கட்டுப்பாட்டுக்கு மாறாக திருமணம் செய்தால் இவை பின்பற்றப்படுகிறது” என்கிறார் அவர்.
தாடியைத் தவிர திருமண நிகழ்வில் வேறு சில கட்டுப்பாடுகளையும் இங்குள்ள மீனவ கிராமங்கள் பின்பற்றுகின்றன.
3 கட்டுப்பாடுகள் என்னென்ன?
“ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்வது என முடிவெடுத்தால், அந்தப் பெண்ணிடம் சென்று கிராம பஞ்சாயத்தார் பேசுவார்கள். அப்போது பெண்ணின் பெற்றோர் உடன் இருக்கக் கூடாது.
வேறு ஆண் யாரையாவது காதலிக்கிறாரா, திருமணத்தில் விருப்பம் உள்ளதா என்பதை விசாரிப்போம். அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே திருமணம் நடக்கும்” எனக் கூறுகிறார் சிவக்குமார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “திருமணத்தின்போது ஃபிளக்ஸ் போர்டுகளை வைக்கின்றனர். அதில் மணமகளின் தோள் மீது கையைப் போட்டபடி மணமகன் நிற்பது போன்ற காட்சிகளை வைக்கின்றனர். இவ்வாறு வைக்கக் கூடாது என தடை செய்துள்ளோம். திருமணத்தில் டிஜே வைப்பதற்கும் தடை உள்ளது. கலாசாரத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பது தான் நோக்கம்” என்கிறார்.
“தற்போதுள்ள இளைஞர்களில் சிலர் சொல்வதைக் கேட்பதில்லை. அதனால், ‘முடிந்தால் திருமணம் செய்து கொள். ஆனால், வேறு எந்தப் பிரச்னையாக இருந்தாலும் வர மாட்டோம்’ என பஞ்சாயத்தார் கூறிவிடுவார்கள்” எனக் கூறுகிறார், கிளிஞ்சல் மேடு கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார்.
“ஊரில் நடக்கும் நிகழ்வுகள், காவல்துறை விசாரணை என யாருக்கு எந்தப் பிரச்னை என்றாலும் பஞ்சாயத்தார் தலையீட்டின் பேரில் தான் எதுவும் நடக்கும். அதனால் கட்டுப்படுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.
படக்குறிப்பு, தன்னுடைய உரிமை பறிபோவதாக யாராவது புகார் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் ‘சிகரெட், மதுவுக்கு தடை’
திருமணம் தவிர்த்து, வேறு சில கட்டுப்பாடுகளும் இங்குள்ள மீனவ கிராமங்களில் விதிக்கப்பட்டுள்ளன.
“சிகரெட் புகைக்க வேண்டும் என்றால் மக்கள் கூடும் இடங்களில் நின்று ஊதக் கூடாது. அதையும் மீறி யாராவது புகை பிடித்தால் சட்டையைப் பிடித்து சத்தம் போடுவார்கள். நான்கு பேர் பார்க்கும் அளவுக்கு மது அருந்தக் கூடாது. தெருவில் அமர்ந்து கொண்டு வரும் போகும் பெண்களைப் பார்க்கக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் உள்ளன” என்கிறார், கிளிஞ்சல் மேடு கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார்.
“இந்த விதிமுறைகள், 11 மீனவ கிராமங்களுக்கும் பொருந்தும். இவை ஓர் அமைப்பாக செயல்படுகின்றன. சிறிய கிராமங்களில் தீர்க்கப்படாத பிரச்னைகள் பொது கிராமங்களில் தீர்க்கப்படும். அதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்” என்கிறார், கிளிஞ்சல் மேடு கிராமத்தைச் சேர்ந்த முரளி.
” வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது பஞ்சாயத்துபோல தோன்றும். இது உத்தரவு அல்ல. ஊர்க் கட்டுப்பாடு” எனக் கூறும் அவர், “தொடக்க காலங்களில் யாரையும் எதிர்பார்க்காமல் மக்கள் தங்களுள்ளேயே தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். அதனால், கிராமத்துக்குள் சுய கட்டுப்பாடுகளை விதித்து அதன்படி வாழ்ந்து வருகின்றனர்” என்கிறார்.
படக்குறிப்பு, திருமணம் தவிர்த்து, வேறு சில கட்டுப்பாடுகளும் இங்குள்ள மீனவ கிராமங்களில் விதிக்கப்பட்டுள்ளன.”திருமணத்தில் பெண்ணின் விருப்பத்தைக் கேட்பது வரவேற்கக் கூடிய ஒன்று. ஆனால், மணமகன் தாடி வைத்துக் கொண்டால் கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைப்போம் எனக் கூறுவதை ஏற்க முடியாது” என்கிறார், தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் தமயந்தி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தாடி என்பது அவரவர் விருப்பம். உடல் மற்றும் உரிமை சார்ந்த விருப்பம். அவ்வாறு வைக்கக் கூடாது என யாரும் கட்டாயப்படுத்த முடியாது” என்கிறார்.
“கிராம வழக்கப்படி இவ்வாறு கடைபிடிப்பதை எதுவும் செய்ய முடியாது” எனக் கூறும் தமயந்தி, “தன்னுடைய உரிமை பறிபோவதாக யாராவது புகார் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். ஊரில் கட்டுப்பாடு என்ற பெயரில் அனைத்தையும் கட்டுப்படுத்துவதையும் ஏற்க முடியாது” எனக் கூறினார்.
இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் சில அடிப்படை உரிமைகளைக் கொடுத்துள்ளது. இந்த உரிமைகள் மீறப்படும் போது தாராளமாக புகார் அளிக்கலாம். அதே போன்று ஊர் பஞ்சாயத்து போன்ற நடைமுறைகள் சட்டத்திற்கு புறம்பானவையாக உள்ளன. பெரும்பாலும் சாதி சார்ந்து இயங்கும் இந்த அமைப்புகள், ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல் போன்ற நடவடிக்கைகளில் இறங்கும் போது புகார் அளிக்கும் சட்ட வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடுகின்றனர் சட்ட நிபுணர்கள்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு