தவறான விடயத்தை செய்து வந்தால் அதைத் தொடர்வதற்கே விரும்புகின்றனர். அதை மாற்றுவதற்கு பின்னடிக்கின்றனர். மாற்றத்தை எல்லோரும் ஒன்றிணைந்தாலே ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், செயலாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் ஆளுநர் கருத்து தெரிவிக்கும் போது,காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை நாம் ஏற்படுத்தவேண்டும். எங்கள் சேவைகளை விரிவாக்குவதுடன் அவற்றை விரைவுபடுத்தவும் வேண்டும். தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் சிலர் துணிவுடன் நடவடிக்கைகள் எடுக்கின்றீர்கள். அதைப் பாராட்டுகின்றேன். ஏனையோரும் அவ்வாறு செயற்படவேண்டும். தவிசாளர்களும், செயலாளர்களும் இணைந்து செயற்படவேண்டும். இருவரும் முரண்பட்டால் அதைத் தீர்பதே எங்களுக்குப் பெரும் தலையிடியாக மாறிவிடும். தவிசாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையிலான முரண்பாட்டால் பாதிக்கப்படப்போவது அந்தப் பகுதி மக்களே. அந்த மக்களுக்கு சேவை செய்வதற்கே எல்லோருக்கும் இருக்கின்றார்கள். அதை மனதிலிருத்தினாலே போதும். மக்களை அவர்களது சேவைகளை நிறைவேற்றுவதற்கு அலைக்கழிக்காதீர்கள் என மேலும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணியும் பயிற்சியும் செ.பிரணவநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
சேவை பெற வரும் மக்களை அலைக்கழிக்காதீர்கள் – வடக்கு ஆளூநர் தவிசாளர் , செயலர்களிடம் மன்றாட்டம்
6