Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
“கடலில் வீசப்பட்ட அகதிகள்” இந்தியா மீது ஐ.நா.வின் குற்றச்சாட்டு என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெல்லியில் அகதிகள் முகாமில் வசிக்கும் ரோஹிஞ்சா அகதிகள்2 மணி நேரங்களுக்கு முன்னர்
ரோஹிஞ்சா அகதிகள் இந்திய கடற்படை கப்பலில் இருந்து மியான்மர் கரையோரம் நடுக்கடலில் இறக்கிவிடப்பட்டதாக எழுந்துள்ள கூற்றை விசாரிக்கப்போவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழன் அன்று ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த வாரம் இந்திய கடற்படை கப்பலில் இருந்து ரோஹிஞ்சா அகதிகள் வலுக்கட்டாயமாக அந்தமான் கடலில் இறக்கிவிடப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் எங்களுக்கு மிகவும் கவலையளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய “தேவையற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம்” தொடர்பாக நிபுணர் ஒருவர் விசாரணை நடத்துவார் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, டெல்லி காவல்துறை ரோஹிஞ்சா அகதிகளை அவர்களின் முகாம்களில் இருந்து பிடித்துச் சென்றதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானது.
ஆனால் இந்தச் செய்திகள் பற்றி தற்போது வரை இந்திய அரசாங்கமோ அல்லது இந்தியக் கடற்படையோ எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.
எனினும், ரோஹிஞ்சா அகதிகளை நாடு கடத்துவது தொடர்பான வழக்கை இந்திய உச்சநீதிமன்றம் வெள்ளியன்று விசாரித்தது. இந்த விவகாரத்தில் சந்தேகம் எழுப்பிய நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்க மறுத்துவிட்டது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஐ.நா.வின் கருத்து என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் மியான்மரில் நிலவும் ஆபத்தான சூழ்நிலைகளுக்கு மத்தியில் ரோஹிஞ்சா அகதிகளை நாடு கடத்துவது போன்ற மனிதத்தன்மையற்ற, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகிற செயல்களை இந்திய அரசு தவிர்க்க வேண்டும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
மியான்மரில் மனித உரிமைகளின் நிலை தொடர்பாக நியமிக்கப்பட்ட ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் தாமஸ் ஆண்ட்ரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரோஹிஞ்சா அகதிகள் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டனர் என்கிற எண்ணமே கொடூரமானது. இந்த நிகழ்வுகள் தொடர்பாக நான் கூடுதல் தகவல்கள் மற்றும் சாட்சியங்களை வேண்டுகிறேன். நடந்தது பற்றி முழுமையான தகவல்களை வழங்க நான் இந்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
மேலும் அவர், “இத்தகைய கொடூரமான செயல்கள் மனிதநேயத்திற்கு எதிரானது மற்றும் திரும்பிச் செல்லாமை (non refoulment – உயிருக்கு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஒருவரை விருப்பத்திற்கு மாறாக ஒரு நாட்டில் இருந்து திருப்பி அனுப்பக்கூடாது என்கிற கொள்கை) கொள்கையை மீறுவதாகும். திரும்பிச் செல்லாமை என்பது சர்வதேச சட்டத்தின் அடிப்படை கொள்கை ஆகும்” என்றார்.
என்ன சர்ச்சை?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மியான்மரில் மனித உரிமைகளின் நிலை தொடர்பாக நியமிக்கப்பட்ட ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் தாமஸ் ஆண்ட்ரூஸ்இந்தச் சம்பவம் தொடர்பாக ஐ.நா வெளியிட்ட அறிக்கையில், “கடந்த வாரம் இந்திய அதிகாரிகள் டெல்லியில் வசித்து வந்த ரோஹிஞ்சா அகதிகள் பலரைக் கைது செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அகதி அடையாள ஆவணங்களை வைத்திருந்தவர்கள்” எனத் தெரிவித்துள்ளது.
அவர்களில் 40 பேர் கண்கள் கட்டப்பட்டு அந்தமான் நிக்கோபார் தீவுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து இந்திய கடற்படை கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டனர் என அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும் அந்த அறிக்கையில், ”அந்தமான் கடலை கடந்த பிறகு அகதிகளுக்கு உயிர்க்கவசம் கொடுக்கப்பட்டு மியான்மர் எல்லையில் உள்ள தீவிற்கு நீந்திச் செல்ல வலுக்கட்டாயமாக கடலில் இறக்கிவிடப்பட்டனர். கடலில் தத்தளித்த அகதிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.
அகதிகள் நீந்தி கரையை அடைந்து பிழைத்ததாகக் கூறும் ஐ.நாவின் அறிக்கை, அவர்கள் தற்போது எங்கு, எப்படி உள்ளார்கள் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கிறது.
இந்திய அதிகாரிகள் அசாமில் உள்ள தடுப்பு மையங்களில் இருந்து 100 ரோஹிஞ்சா அகதிகளை வங்கதேச எல்லை அருகே உள்ள பகுதிக்கு மாற்றியுள்ளனர். இவர்கள் தற்போது எங்கு உள்ளார்கள், என்ன நிலையில் உள்ளார்கள் என்பது பற்றியும் எந்தத் தகவலும் இல்லை என ஐ.நா தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் என்ன கூறுகிறது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, உச்சநீதிமன்றம் ரோஹிஞ்சா அகதிகள் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்தது.நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு (Citizens for Justice and Peace) வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த சில நாட்களாக ரோஹிஞ்சா அகதிகள் உள்ளிட்ட பல வெளிநாட்டினர் அசாமின் மத்தியா மற்றும் கோவல்பாரா தடுப்பு மையங்களில் இருந்து கொத்து கொத்தாக வெளியேற்றப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற வழக்குகள் பற்றி செய்தி வெளியிடும் லைவ் லா மற்றும் கோர்ட்புக் இணையதளங்களின்படி, இந்தச் சம்பவம் தொடர்பான பொதுநல வழக்கு ஒன்று வெள்ளியன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவில் இந்திய அரசு 43 ரோஹிஞ்சா அகதிகளை வலுக்கட்டாயமாக நாடுகடத்தி சர்வதேச எல்லையோரம் கடலில் இறக்கிவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இவர்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் புற்றுநோய் போன்ற உடல்நல பிரச்னைகள் உள்ளவர்களும் அடங்குவார்கள்.
இந்த மனுவை விசாரித்தபோது அதில் சொல்லப்பட்டுள்ள கூற்றுகள் மீது நீதிபதிகள் சூர்யாகண்ட் மற்றும் கோட்டீஸ்வர் சிங் சந்தேகங்கள் எழுப்பியிருந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரோஹிஞ்சா அகதிகள் வழக்கில் இடைக்கால நிவாரணம் அல்லது உத்தரவு வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.ரோஹிஞ்சாக்கள் நாடு கடத்தப்படுவதைத் தடுக்க மனுதாரர் இடைக்கால உத்தரவு கோரியிருந்த நிலையில் நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது.
மே 8-ம் தேதி நடைபெற்ற இதே போன்றதொரு வழக்கின் விசாரணையை மேற்கோள் காட்டி அந்த வழக்கிலும் இடைக்கால உத்தரவு வழங்கப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை உடனடியாக விசாரிக்கவும் மறுத்த உச்சநீதிமன்றம் அடுத்த விசாரணையை ஜூலை 31ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஐ.நாவின் அறிக்கையை மேற்கோள்காட்டி இந்த விவகாரத்தில் நீதிமன்றம் விரைந்து தலையிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் நீதிமன்றம், “மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்போது ஐ.நா அறிக்கை பற்றி கருத்து தெரிவிக்கிறோம்” எனக் கூறிவிட்டது.
உச்சநீதிமன்ற அமர்வு மேற்கோள் காட்டிய மே 8-ம் தேதி மனுவில் அடிப்படையில் உரிமைகள் குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் பொருந்துமா என்பதையும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் நாடு கடத்தப்படுவது பிரிவு 21-ன் கீழ் உயிர்வாழ்வதற்கான உரிமையை மீறுகிறதா என்பதையும் நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு