Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இறுதிப் போர் உள்ளிட்ட அரச படை நடவடிக்கைகளில் படுகொலை செய்யப்பட்ட சிறார்களை நினைவு கூர்ந்து சிறுவர்களின் பங்கேற்புடன், வலிகாமம் கிழக்கு வாதரவத்தை, வீரவாணி – ஞானவாணி சனசமூக நிலையத்தில் நேற்று சனிக்கிழமை (17.05.25) மாலை உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
சமூக செயற்பாட்டாளர் சிவராசா ரூபன் தலைமையில் அஞ்சலி சுடரினை போரில் மகனை இழந்த தந்தை எஸ். சுந்தரவேல் ஏற்றினார்.
போரில் சிறுவர்களுக்கு எதிராக அரசு மேற்கொண்ட தாக்குதல்களின் கோரத்தினையும் அதுதொடர்பில் பொறுப்புக்கூறப்படாமை மற்றும் மறுக்கப்பட்ட நீதி தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் அஞ்சலியுரையாற்றினார்.
சனசமூக நிலைய நிர்வாகிகள், பொது அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரின் பங்கேற்புடன் இந் நிகழ்வுகள் நடைபெற்றன.
அஞ்சலி நிகழ்வுகளை தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளில் மனிதாபிமானமற்ற முறையில் கோரமாக படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுவர்களை நினைவுகூர்ந்து 16 தீபங்கள் ஏற்றப்பட்டு அஞ்சலிப்பிரார்த்தனை இடம்பெற்றது.
போரின் பின்பாக கடந்த 16 ஆண்டுகளாக நாம் நீதி கிட்டாதவர்களாக அடக்குமுறைக்குள் ஏங்குகின்றோம் என்பதை மையப்படுத்தியதாகவே 16 தீபங்கள் ஏற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து போருக்குப் பின்னர் முள்ளிவாய்க்கால் இறுதி போரில் வலிந்து காணாமலாக்கப்பட்டவரின் தாயாரான பா. யோகராணி முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கினார்.
தொடர்ந்து போரின் வலிகளையும் அவ் வலிகளுக்கும் கொடூர அநீதிகளுக்கும் உள்நாட்டில் நீதி வழங்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்தி சர்வதேச நீதி ஒன்றே உள்நாட்டில் பாதிக்கப்பட்டு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் எமக்கான பரிகாரம் என்ற தொனிப்பொருளில் நிகழ்வுகளும் இடம்பெற்றன.