2017 ம் ஆண்டு இறுதிப் பகுதி வரை கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றிய நான், அதே ஆண்டில் அந்த பல்கலைக்கழகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, விலங்கியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு மாறுதல் பெற்று வருகின்றேன். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நான் மாற்றம் பெற்று வந்து இரு வாரங்களில் திடிர் இதயத் தாக்கு சுகவீனத்திற்குள்ளாகி இங்கும், தலைநகரிலும் தீவிர சிகிச்சை பெற வேண்டி வந்தது.  உடலின் உறுதி நிலை குலைந்து பலவீனமான நிலையில் இருந்தது. சிகிச்சை பெற்ற முதலாவது மாதத்திலிருந்து படிப்படியாக சின்ன சின்ன உடற்பயிற்சிகள், நடை என அப்போது அம்பாறை வைத்தியசாலையில் கடமையாற்றிய இயன்மருத்துவர் முகம்மட் பயாசின் ஆலோசனைகளின் அடிப்படையில் அவைகளைச் செய்து உடற் தகவை அதிகரித்தேன். உடற்பயிற்சிகளை அதிகரித்தேன். இதற்கு எனது விசேட தேவையுடைய மகளிற்கு என்று  அமைக்கப்பட்ட பெரியளவிலான உடற்பயிற்சிக்கூடமும் உதவி செய்தது.

திடீர் சுகவீனமடைந்த தினத்திலிருந்து இன்று வரை மோட்டார் சைக்கிள் பாவித்ததில்லை. மோட்டார் சைக்கிளும் வைத்துக்கொண்டிருந்ததில்லை. பணிக்குச் செல்வதற்காக கார் வண்டியையும், மற்றைய சகல வேலைகளுக்கு மிதி வண்டியையும் பாவித்துக்கொண்டிருக்கின்றேன்.

இந்த நிலையில் 2020 களின் ஆரம்பத்தில் மருதமுனை றைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழகத்தைச் சேர்ந்த கலீல் கபூர் (ஆலோசகர், அரசு சாரா நிறுவனம் ), எம்.என். முகம்மட் பைலான் (சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர், டொக்டர் ஏ.ஆர். முகம்மட் அஸ்மி (சிரேஸ்ட மருத்துவ அதிகாரி) ஆகியோரின் ஆலோசனையுடன் அந்தக் கழகத்தில் இணைந்தேன். மிதி வண்டி ஓடத் தொடங்கினேன. அதே நேரம் நண்பர் டொக்டர் அருள்நிதி கனகரத்தினம் (இதய வைத்திய விசேட நிபுணர்) அவர்களின் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு, முதல் வாரம் சுமார் 5 கிலோ மீற்றர் ஓடினேன். அடுத்த மூன்று வாரங்களில் சுமார் 8 கிலோமீற்றர் ஓடினேன். அடுத்த ஒரு மாதம் சுமார் 10 – 15 கிலோமீற்றர் தூரம் ஓடினேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு மற்றைய உறுப்பினர்களுக்கு சமாந்தரமாக ஓடத் தொடங்கினேன். இது கொவிட் 19 தொற்றுக்குரிய காலம். எங்கும் போக்குவரத்து தடைகள் இருந்தது. வீட்டை விட்டு வீதிக்கு செல்வதற்கே அரச தடை இருந்தது. அந்தக் கால கட்டத்திலும் முகக் கவசம் அணிந்து ஓடத் தொடங்கினேன். அப்போது வரை குறுகிய தூரமே பெரிய தூரமாகக் கருதி ஓடிக் கொண்டிருந்த எல்லா அங்கத்தவர்களின் மன அமைப்பையும், றைடர்ஸ் ஹப் சைக்கிள் கழகத்தின் சிரேஸ்ட அங்கத்தவர்களில் ஒருவரான டொக்டர் காண்டீபன் கனகரெத்தினம் (எலும்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர்) தனது அறிவியல் ரீதியான எளிமையான அணுகுமுறைகளால் மாற்றினார். தூரம் என்பது சாதாரண இலக்கம் என்பதை கற்கச் செய்தார். தூரத்தைக் கூட்டினோம் 15 என்ற இலக்கம் 20 ஆனது. 20 என்ற இலக்கம் 50 ஆனது. 50 என்ற இலக்கம் 100 ஆனது. 100 என்ற இலக்கம் 150 கிலோமீற்றர் தூரம் என்று ஆனது. தற்போது மிதிவண்டியினால் மிதிக்கின்ற தூரத்திற்கு எல்லையில்லை என்ற நிலை ஆகிவிட்டது.

இந்த மிதி வண்டி ஓட்டம் பல கதவுகளைத் திறந்துவிட்டது. அக்கம் பக்கத்திலும், இந்த மாவட்டத்திலும், அடுத்த மாவட்டங்களிலும் உள்ள  சென்று பார்க்காத, கேட்காத, கேள்விப்படாத சூழலியல், புவியியல், கலாசார, பண்பாட்டு, வரலாற்று, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. காடுகளுக்கும், மனித நடமாட்டமே இல்லாத இடங்களுக்கும் கூட செல்ல நேர்ந்தது. அந்தந்த இடங்களில் இருந்த மக்களின் கலாசாரம், மொழி, பண்பாடு, உணவு, பழக்கவழக்கங்களை அறிந்து கொள்ள முடிந்தது. இது சிந்தனைத் தெளிவையும், மாற்றத்தையும், விரிந்த பார்வைiயும் ஏற்படுத்தியது. கழகத்தில் இணைந்துகொள்ளுவதற்கு முன்பு சகல தேகைளுக்குமாக எனது ஒரு நாளின் முழுப் பகுதியையும் ஏற்கனவே ஆக்கிரமித்து வைத்திருந்த மிதிவண்டி, கழகத்தில் சேர்ந்து ஓடத் தொடங்கியபோது. அருகிலுள்ள நகரங்கள், உறவினர் வீடுகள், விழாக்கள், பணிகள், பொழுதுபோக்குகள் என மேலதிக பல விடயங்களுக்கும் மிதிவண்டியை என்னை பாவிக்கச் செய்தது.

கொவிட் 19 தனிப்படுத்துகை காலத்தில், சைக்கிளோட்டமானது. மற்றவர்களிலிருந்து எங்களை தனிப்படுத்தும் பொறிமுறையில் சிறந்ததாக இருந்தது. அதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத, மரணம்தான் நிச்சயம் என்றிருந்த கொறோனாவிலிருந்து நிர்ப்பீடனத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறுவதற்கு மிதிவண்டி ஓட்டம் சிறந்த ஒரு விளையாட்டாக அல்லது பயிற்சியாக இருந்தது.

கொறோனா காலப் பகுதிக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பிர்ச்சினையும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்டஎரிபொருள் தட்டுப்பாடான காலப் பகுதியும் மற்றவர்களை கடுமையாக பாதித்திருந்தபோதும், எரிபொருளுக்காக அவர்கள் நாட்கணக்கில் வரிசைகளில் இரவு பகலாக நின்றிருந்தபோதும், அவை எவையும் என்னை சிறிதும் பாதித்திருக்கவில்லை. பக்கத்திலுள்ள நகரங்களுக்கு செல்வதற்கும், தூரத்திலுள்ள உறவினர் வீடுகளுக்குச் செல்வதற்கும், உத்தியோகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கும், இலக்கிய விழாக்களில் விமர்சனம் செய்வதற்கும், உரையாற்றுவதற்கும், ஆய்வு மாநாட்டில் முக்கிய உரையாற்றுவதற்கும், பாசிக்குடாவில் கடல்சார் சூழற்றொதி பாதுகாப்பு சம்பந்தமான மூன்று நாள் பயிற்சிப் பட்டறைக்கு வளவாளராக கலந்துகொள்வதற்கும் கூட மிதிவண்டியில் சென்றிருந்தேன். சுமார் மூன்று மாத காலங்களுக்கு மேற்பட்டு பல்கலைக்கழகத்திற்கும், பணிக்கும் மிதிவண்டியிலேயே சென்றிருந்தேன். ஆய்வுகளுக்கும், ஆய்வு மேற்பார்வைகளுக்கும் மிதிவண்டியையே பாவித்திருக்கின்றேன். அத்துடன் வாகனங்கள் செல்ல முடியாத ஆய்வுப் பிரதேசங்களுக்கும் சென்று (யானை – மனிதன் மோதல் (வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவு) மிதிவண்டியிலேயே ஆய்வுகளை முடித்திருந்தேன். மாணவர்களின் ஆய்வுகளையும் மேற்பார்வை செய்திருந்தேன்.

**

இவ்வாறான ஒரு கால கட்டத்தில், சில இடங்களை நோக்கியே மிதிவண்டியில் ஓடியும், திரும்பிக் கொண்டிருந்தபோது, சில பாதைகள் பிரதான பாதைகளிலிருந்து கிளைத்துச் சென்றிருந்தன. கிளைத்த பாதைகளிலும் பல பாதைகள் மீண்டும், மீண்டும் கிளைத்துச் சென்றிருந்தன. அந்தப் பாதைகள் பற்றியும், அங்குள்ள உயிருள்ள, உயிரற்ற கூறுகள் பற்றியும், மற்றமைகள் பற்றியும், மனிதர்களுக்கும் – மனிதர்களுக்கும், மற்றமைகளுக்கும் – மற்றமைகளுக்கும், மற்றமைகளுக்கும் – மனிதர்களுக்கும், அவைகளுக்கும், தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான உறவுகளையும், இடைத் தொடர்புகளையும் அறிய ஆவலாக இருந்தது. எனவே எந்த முன்முடிவும் இன்றி, அபாயங்கள், இடைஞ்சல்கள், சங்கடங்கள் பற்றிய அஞ்சுதல்கள் எதுவுமின்றி தைரியமாக மிதிவண்டியின் சக்கரங்கள் எழுந்தமானமாக சென்ற பாதைகளில்; பிரயாணம் செய்ய ஆரம்பித்தேன். அங்கு நிறைய விடயங்களை கற்கத் தொடங்கினேன். அந்தந்த பிரதேசங்களிலுள்ள தாவரங்கள், விலங்குகள், மற்றும் மனித, விலங்கு, தாவர நடத்தைகள், விவசாய முறைகள், சூழலியல் அதிசயங்கள், அரசியல், பொருளாதாரம், பல்வேறு விடயங்களுடன் தொடர்புபட்ட தத்துவங்கள், ஆரோக்கியம், உயிரினவியல் பாதுகாப்பு முறைகள், கலாச்சாரங்கள், உணவு பழக்க வழக்கங்கள், வெற்றிபெற்ற சுற்றுச்சூழல் திட்டங்கள், நிலக்காட்சிகள் என பல அதிசயங்களைக் கண்டேன். எனது பார்வை விரிவாகியது. சிந்தனை எவ்வளவு தூரம் சீராக்கப்பட வேண்டும் என்ற அளவும் விளங்கியது. அவைகளை ஒவ்வொரு மிதிவண்டி ஓட்டத்தின் பின்னும் முகனூலில் சக்கரம் போன போக்கு என்ற தலையங்கத்தின் கீழ் மிதிவண்டி ஓடிய நாட்களில் பதிவு செய்யத் தொடங்கினேன். அதற்கு அமோகமான ஆதரவு இருந்தது. சம காலத்தில் அந்தக் கட்டுரைகளை ஆங்கிலத்திலும் (புழiபெ வாந றுயல வாந றூநநடள பழ) என்ற தலையங்கத்தில் எழுதினேன்.

றைடர்ஸ் ஹப் கழகத்தில் 2020 ஜனவரி மாதம் சேர்ந்து, 2022 ஜூன் மாதம் எங்களது சொந்தக் கழகமான சைக்கிளிங் கிறீன் சைக்கிள் கழகத்தை ஆரம்பித்தது வரைக்குமான இடைப்பட்ட காலத்தில் சக்கரம் போன போக்கு என்ற தலைப்பில் எழுதிய எழுத்துக்கள் அனைத்தும் சக்கரம் போன போக்கு பாகம்- 1 , சக்கரம்போன போக்கு பாகம் – 11 என இருநூல்களாக வெளிவருகின்றன.  அந்த வகையில் இது சக்கரம்போன போக்கு பாகம் – 1 என்ற நூலாகும்.

பசுமையாக்கத்திற்கு பல்வேறு வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன. நாளாந்த வாழ்க்கையை சூழலியல் நேய முறையில் மாற்றிக் கொள்ளுதலும் பசுமையாக்கத்திற்கான ஒரு வரைவிலக்கணமாகும். ஆந்த வகையில் மிதிவண்டி பாவனை என்பதும் பசுமையாக்கத்தின் ஒரு பகுதியாகும்.

மிதிவண்டி ஓட்டம் பல்வேறு மாற்றங்களுக்கு வழிவகுத்திருக்கின்றது. பல்வேறு விடயங்களை சாத்தியமாக்கியிருக்கின்றது. மிதிவண்டிப் பாவனையை நிறுத்தியிருந்த பலரின்; மீள் மிதிவண்டிப் பாவனைக்கு உந்துசக்தியாக இருந்திருக்கின்றோம் என்பதை அவர்களே கூறக் கேட்டிருக்கின்றோம். மிதிவண்டிப் பாவனை அதிகரிப்புக்கு உந்துசக்தியாக இருந்திருக்கின்றோம். பல்வேறு இடங்களிலிருந்தும், பல்வேறு நண்பர்களும், தோழர்களும் நேரிலும், தொலைபேசியிலும், முகநூலிலும், உள்பெட்டியிலும் தொடர்புகொண்டு அவர்களின் மிதிவண்டி ஓட்டத்திற்கான ஆர்வத்தை தெரிவிக்கிறார்கள். அதற்குத் தேவையான வண்டி, பொருட்கள் வாங்குவது பற்றியும், தங்கள் தங்களது சொந்த ஊர்களில்  மிதிவண்டிக் கழகங்கள் ஆரம்பிப்பது பற்றியும் விசாரிக்கின்றார்கள். ஆலோசனை கேட்கின்றார்கள். அவர்களை சரியான இடங்களுக்கும், சரியான வழிகளுக்கும் திசைப்படுத்துகின்றோம். பெரும்பாலான நேரங்களில் நேரடியாக களச் செயற்பாடுகளில் ஈடுபட்டு அவைகளைச் செய்கின்றோம். பல்வேறு இடங்களிலும், பிரதேசங்களிலும் சிறிய சிறிய கழகங்கள் உருவாக்கப்படுகின்றன. அவர்களுக்குத் தேவையான வண்டிகளை, பொருட்களை வாங்க திசைப்படுத்துகின்றோம். ஏன் வெளிநாட்டிலும் எங்கள் நண்பர்கள் பலர் பயிற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். இங்கு ஒவ்வொரு நாளும் பலரை மிதிவண்டிகளுடன் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஓவ்வொரு மிதிவண்டி ஓட்டத்தின் பின்னரும் முகநூல்களில் இட்ட படங்களும், செய்திகளும் பல்வேறு தரப்பினருக்கும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கின்றன. கொடுக்கின்றன. மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு ஒரு சிறிய பொறியாக இருந்திருக்கின்றோம் என்பதில் ஒரு மகிழ்ச்சி வெளிவரப்பார்கின்றது. ஆனால் அதற்கு பாத்தியதை கொண்டாட முடியாது. வேகமான செயற்பாட்டாளர்கள் இவற்றையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள்.

இயலுமானவரை எரிபொருளில் இயங்கும் வாகனங்களை சிறிய தூரங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்த்து, சிறிய தூரங்களுக்கும்  விரும்பினால் பெரிய தூரங்களுக்கும் மிதிவண்டியை பயன்படுத்துவதே சூழலுக்கு நன்மை பயக்கும். உடற்பயிற்சிக்கு மட்டும் மிதிவண்டியை பாவித்தால் பாவிப்பவரின் உடல்நலத்திற்கு மட்டும் நன்மையளிக்கும் என்பதனையும் புரியவைத்திருக்கின்றோம். இதனைக் கூறும் நான் பணிக்கு மட்டும் வாகனத்தில் சென்று வருகின்றேன். கடந்த எட்டு வருடங்களாக மோட்டார் சைக்கிள் பாவிப்பதில்லை. எனது எல்லா வேலைகளுக்கும் மிதிவண்டியையே பாவித்து வருகின்றேன். இது கடுமையான மன உறுதியுடன் சம்பந்தப்பட்ட நிலைப்பாடாகும்.

சைக்கிள் பாவனை என்பது ஒரு இழிவான அல்லது  ஏழ்மையான (நம்மை  ஏழ்மையானவன் என்று மற்றவர்கள் நினைத்து விடுவார்கள்); அல்லது அருவருக்கத்தக்க அல்லது இழுக்கான விடயம் என்று பலரின் மனதில் பிடிவாதக் கோட்பாடாக பதிந்திருந்த அல்லது பதிய வைக்கப்பட்டிருந்த மன அமைப்பை மாற்ற முயற்சித்து ஓரளவு வெற்றியும் கண்டிருக்கின்றோம். மிதிவண்டிப் பாவனை உடலுக்கும், மனதுக்கும், சூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் மிகவும் முக்கியமானது என்ற விடயத்தை மீளப்பதித்திருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் பெரியவர்களும், இளைஞர்களும், சிறுவர்களும் மிதிவண்டியின் பக்கம் திரும்புவதற்கு தங்களது விருப்பை தெரிவித்துக்  கொண்டிருக்கின்றார்கள். அந்த நோக்கத்துடன் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றோம்.

மிதிவண்டியில் மாணவர்களும், சிறுவர்களும் எங்களுடன் பல இடங்களுக்கும் வந்து கூட்டமாக கற்கின்றார்கள். மாணவர்கள் ஆய்வுகளில் ஈடுபடுகின்றார்கள். மிதிவண்டியை பல்வேறு இடங்களில் மரங்கள் நடுவதற்கும், விதைப்பந்துகள் எறிவதற்கும், காடுகளை மீளுருவாக்குவதற்கும் பயன்படுத்துகின்றோம். இலங்கையின் பல பாகங்களிற்கும் கழக அங்கத்தவர்கள் அனைவரும் மிதிவண்டியில் சென்று, தொற்றாத நோய்கள், மனித ஆரோக்கியம், காலநிலை மாற்றம், பசுமையாக்கம், காடுகள், மரங்கள், சூழல் மாசடைதல் பற்றிய விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும்  பயன்படுத்தியிருக்கின்றோம்.

சக்கரம் போன போக்கு பதிவு செய்த குருக்கள்மடம், ஏத்தாளைக்குளம், பறவைகள் தங்கல் பகுதி பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற எனது எழுத்தின் காரணமாக 2024 ஜனவரி மாதம் இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சக்கரம் போன போக்கு எழுத்துக்கள் பல்வேறு பகுதிளிலும் அந்நிய ஆக்கிரமிப்பு தாவரம் சம்பந்தமான விழிப்புணர்களை ஏற்படுத்தி சமூகம் ஒன்றிணைந்து கட்டுப்படுத்தலை மேற்கொண்டிருக்கின்றார்கள். மேற்கொள்கின்றார்கள் வெளிப்படுத்தப்பட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் உரிய தரப்பினரால் காணப்பட்டிருக்கின்றன அல்லது ஆர்வம் செலுத்தப்பட்டிருக்கின்றன.

சக்கரம்போன போக்கு மிதிவண்டி ஓட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தனியே நிகழ்த்தப்பட்டவைகளாகும். இந்த ஓட்டத்தின் மற்றைய பகுதிகளில் சற்.எம். றிபான் (அபிவிருத்தி உத்தியோகத்தர்), நைறூஸ்கான் ஹிதாயத்துல்லாஹ் (பிரதிக்கல்விப் பணிப்பாளர்), டொக்டர் எம்.ஏ.எம். அசீம், (மருத்துவ உத்தியோகத்தர்), கலாநிதி சத்தார் பிர்தௌஸ் (ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர், வருகைதரு விரிவுரையாளர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்), எம்.என்.எம். பைலான் (சிரேஸ்ட சுகாதார பரிசோதகர்) போன்றவர்கள் பங்குபற்றியிருக்கின்றார்கள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக. முகநூலில் தொடராக வெளிவந்து கொண்டிருந்த இந்த சக்கரம் போனபோக்கு தொடரின் பல பகுதிகள் சுவிற்சர்லாந்தைக தளமாகக் கொண்ட சுபீட்சம் வார அச்சுப் பத்திரிகையிலும் தொடராக வந்து கொண்டிருந்தது. அதற்கு அதன் பிரதம் ஆசிரியர் வேதநாயகம் தாந்தியன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இந்த சக்கரம் போனபோக்கு நூலுருவாக்கப்பட வேண்டும் என வேண்டிக்கொண்டவர்களுக்கும், ஆர்வம் செலுத்தியவர்களுக்கும், தங்களுக்கான நேரங்களை எனக்கு ஒதுக்கி என்னை காலையிலும், மாலையிலும், பகலிலும், இரவிலும், அதிகாலையிலும்,  நள்ளிரவிலும் மிதிவண்டி ஓட அனுமதித்த பெற்றோருக்கும, சகோதரர்களுக்கும், மனைவி பிள்ளைகளுக்கும், நண்பர்களுக்கும், குறிப்பாக சைக்கிளிங் கிறீன் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.

மாற்றம் ஒன்றே மாறாதது.

தொடருவோம்.

ஏ.எம். றியாஸ் அகமட்

தலைவர், உயிரியல் விஞ்ஞானப் பிரிவு, பிரயோக விஞ்ஞான பீடம்,

தென்கிழக்குப் பல்கலைக்கழகம், சம்மாந்துறை

தலைவர், சைக்கிளிங் கிறீன் கழகம், மருதமுனை.

224, காரியப்பர் வீதி

மருதமுனை.05

இலங்கை

077 6009 200

[email protected]