அரியகுளம் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் பந்தல்களைப் பார்ப்பதற்கு ஒரு பகுதி தமிழர்கள் போனது உண்மை.புதுக்குடியிருப்பிலும் கிளிநொச்சியிலும் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரங்களைப் பார்ப்பதற்கு ஒரு பகுதியினர் போனது உண்மை.புதுக்குடியிருப்பில் ஆயிரக்கணக்கில் போய் படைத்தரப்பு வழங்கிய குடிபானங்களையும் அன்னதானத்தையும் வாங்கியதும் உண்மை.

அதேசமயம் கடந்த வாரம் தாயகம் முழுவதிலும் ஆங்காங்கே பரவலாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி கொடுக்கப்படுவதும் உண்மை.மக்கள் பரவலாக அதை வாங்கி அருந்துவதும் உண்மை. இன்று முள்ளிவாய்க்காலில் பெருந்திரளாக மக்கள் திரள்வார்கள் என்பதும் உண்மை.

ஒரு தேசம் என்பது அப்படித்தான் இருக்கும். தேசங்கள் எப்பொழுதும் தட்டையாக ஒற்றைப் பரிமாணத்தில் இருப்பதில்லை.வெசாக் பந்தல்களைப் பார்க்க போனவர்கள் எல்லாருமே படையினரின் நண்பர்களும் அல்ல. பொழுது போக்காகப் போனவர்களும் உண்டு. விடுப்புப் பார்க்கப் போனவர்களும் உண்டு. ஆனால் அவர்களின் பலர் பின்னர் கஞ்சி வாங்கிக் குடித்திருப்பார்கள். முள்ளிவாய்க்காலுக்கும் போயிருப்பார்கள். ஒரு தேசம் என்றால் அப்படித்தான். எல்லாத் தரப்புக்களும் இருப்பார்கள்.யார் அதிகமாக இருக்கிறார்கள் என்பது தான் இங்கே முக்கியம். நாடு மே 18ஐ நினைவுகூரும் என்பதுதான் இங்கு முக்கியம்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அதற்கான தயாரிப்புகளை கடந்த வாரம் முழுவதும் செய்து வருகிறார்கள்.கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் செய்கிறார்கள்.நீதி கிடைக்காத அல்லது நீதியை நோக்கி மெதுமெதுவாக ஊர்ந்து போகின்ற 16ஆவது ஆண்டு இது.

அமெரிக்கக் கண்டத்தில் இன அழிப்பு செய்தவர்களுக்கு எதிராக தடைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன; தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த வாரம் கனடாவில் ஒரு நினைவுச் சின்னம் நிறுவப்பட்டிருக்கிறது. தாயகத்துக்கு வெளியே அதிக தொகை ஈழத் தமிழர்கள் வாழ்வது கனடாவில்தான்.சில வாரங்களுக்கு முன்பு பிரித்தானியாவும் இனஅழிப்பு செய்தவர்களுக்கு எதிராகத் தடைகளை விதித்திருக்கிறது.

இப்படிப்பட்டதோர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சூழலில், தாயகத்தில் தமிழ் அரசியல்வாதிகள் ஒருபுறம் கஞ்சி காய்ச்சுகிறார்கள்;இன்னொருபுறம் புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்காக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மே 18 முடிந்த இரண்டு வாரங்களில் புதிய உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

தமிழ்ப் பகுதிகளில் உள்ள மொத்தம் 56 சபைகளில் ஆறு சபைகளில் மட்டும்தான் நிச்சயமான அறுதிப் பெரும்பான்மை உண்டு.எதிர்க்கட்சிகள் இணைந்து தோற்கடிக்கப்பட முடியாத பெரும்பான்மை.எனைய பெரும்பாலான எல்லாச் சபைகளிலுமே தொங்கு நிலைதான். மொத்தம் 36 சபைகளில் வீடு முன்னிலை வகிக்கின்றது.மூன்று சபைகளில் சைக்கிள் முன்னிலையில் நிற்கின்றது.ஒரு சபையில் சங்கு.ஒரு சபையில் வீணை.ஒரு சபையில் காரைநகரில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை.

அதாவது நினைவு கூரும் மாதம் ஒன்றில் தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளுக்கு வழங்கிய ஆணை என்பது பெருமளவுக்கு தொங்கு சபைகள்தான். அந்த மக்கள் ஆணைக்குள் மறைமுகமாக ஒரு செய்தி உண்டு. ஒன்றுபடுங்கள் என்பதுதான் அது. ஒன்றுபடாவிட்டால் பெரும்பாலான சபைகளை நிர்வகிக்க முடியாது.

மேலும்,உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்கு மட்டுமல்ல. அதற்குமப்பால் அடுத்து வர இருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கும் அதுமிக அவசியமானது.ஏனென்றால் உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளின் படி,தமிழ்ப் பகுதிகளில் என்பிபி பெரும்பாலும் இரண்டாம் இடத்தில் நிற்கின்றது. அது பெரும்பாலும் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் வளர்ச்சியைப் பெறவில்லைத்தான். ஆனால் 6 மாதங்களில் ஒரு தென்னிலங்கைக் கட்சி பெற்ற வளர்ச்சி என்பது தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு எச்சரிக்கை மணி போன்றது. மாகாண சபைத் தேர்தல்களை நோக்கி ஏதோ ஓர் ஒருங்கிணைப்புக்குப் போகத் தவறினால் தேசிய மக்கள் சக்தி உற்சாகமாக உழைக்கும்.

தேசிய மக்கள் சக்தி மட்டுமல்லை தமிழ் வாக்காளர்களும் நம்பிக்கையூட்டும் எதையாவது காட்டினால்தான் ஆர்வத்தோடு,உற்சாகமாக வாக்களிக்க வருவார்கள். தொடர்ச்சியாக மூன்று தேர்தல்கள் வந்து விட்டன. உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வாக்களிப்பு வீதம் குறைவதற்குக் காரணம் தொடர்ச்சியாக மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டமை மட்டுமல்ல.தமிழ் வாக்காளர்கள் மத்தியில் சோர்வு அல்லது தளர்வு ஏற்பட்டதும் ஒரு காரணம்.

யாழ்ப்பாணம் ஈவினைப் பகுதியில் நடந்த ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்.அங்கு வாக்களிப்பில் கலந்துகொள்ள ஆர்வமின்றிக் காணப்பட்ட முதியவர்களை வாக்களிப்பு நிலையங்களை நோக்கிச் செல்லுமாறு தூண்டுவதற்கு சில கட்சிசாரா பெண் செயற்பாட்டாளர்கள் முயற்சித்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக அவர்கள் முயற்சித்த பொழுது, ஒரு கட்டத்தில் முதியவர்கள் சொன்னார்களாம், “எங்களுக்கு வாக்களிப்பில் ஆர்வம் இல்லை.இவர்கள் ஒற்றுமைப்படட்டும் நாங்கள் உற்சாகமாகப் போய் வாக்களித்து விட்டு வருவோம்.நீங்கள் எவ்வளவுதான் தூண்டினாலும் நாங்கள் வாக்களிக்க வரவே மாட்டோம்” என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்களாம்.

இப்படி எத்தனை கிராமங்களில் வாக்காளர்கள் சோர்ந்து போய்,ஆர்வமின்றி வாக்களிக்க வராமல் இருந்திருப்பார்கள்?தமிழ்த் தேசிய வாக்களிப்புப் பாரம்பரியத்தைப் பொறுத்தவரை வாக்களிப்பு அலை ஒன்று தோன்றும் போதுதான் அதிக ஆசனங்கள் கிடைக்கும்.வாக்களிப்பு அலை என்பது பெரும்பாலும் ஒரு தமிழ்த் தேசிய அலைதான்.அதைத் தூண்டுவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் படைப்புத்திறனோடு சிந்திக்க வேண்டும். ஐக்கியப்பட்டுச் சிந்திக்க வேண்டும்.

இப்படிப்பட்டதோர் பின்னணியில்,மே18இன் பின் இரண்டே வாரங்களில் அமைக்கப்படவிருக்கும் உள்ளூராட்சி சபைகளில் எவ்வாறு தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் நிர்வாகத்தை அமைப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆழமாக உரையாடி வருகின்றன.

வவுனியாவில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியோடு உடன்படிக்கைக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. அது போல எல்லாச் சபைகளிலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் அல்லாத கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தடுப்பது என்ற அடிப்படையில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் ஐக்கியப்படலாம். அல்லது பகை தவிர்ப்பு உடன்படிக்கைக்குப் போகலாம்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை ஒரு கொள்கை விடயத்தைத் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகிறது. தீர்வு விடயத்தில் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி “எக்கிய ராஜ்ய”வைக் கைவிட வேண்டும் என்று அந்தக் கூட்டு கேட்கின்றது.இறுதித் தீர்வு என்று வரும்பொழுது ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்தத் தீர்வையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அது தொடர்பான சமரசங்களுக்கும் இடமிருக்கக் கூடாது. ஆனால் ஒரு தீர்வை நோக்கிய யாப்புருவாக்க முயற்சிகள் இப்போதைக்குத் தொடங்குமா?

எப்பொழுது தொடங்கும் என்று தெரியாத ஒரு யாப்புருவாக்க முயற்சியை நோக்கி ஐக்கிய முயற்சிகளை ஒத்திவைப்பதா?அல்லது உடனடிக்கு உருவாக்கப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைகளை நோக்கிச் சிந்திப்பதா? அது போல மாகாண சபைத் தேர்தல்களை நோக்கிச் சிந்திப்பதா? எது சரி?

இரண்டுமே சரி. தீர்வு முயற்சிகளை நோக்கி நீண்ட கால நோக்கில் கொள்கைத் தெளிவோடு இருக்க வேண்டும். அதேசமயம் தமிழ்த் தேசியக் கட்சிகள் அல்லாத கட்சிகள் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுவதைத் தடுப்பது என்பதும் தமிழ்த் தேசியக் கொள்கையின் ஒரு பகுதிதான்.பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைவது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின்படி வரக்கூடிய மாகாண சபை தேர்தலில் என்பிபி புதிய சவால்களை ஏற்படுத்தக்கூடும். அதை நோக்கித் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆழமாக உரையாட வேண்டும். பொது எதிரிக்கு எதிரான தேசிய ஐக்கியத்தைப் பற்றி ஆழமாக உரையாட வேண்டும். இல்லையென்றால்,அதாவது தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரிந்து நின்றால், உள்ளூராட்சி சபை தேர்தல்களில் விழுந்தது போல வாக்குகள் விழுமாக இருந்தால், அல்லது வாக்குகள் விழாமல் போனால், அது என்.பி.பிக்கு அனுகூலமாக முடியலாம்.

என்பிபிக்கு தமிழ் மக்களின் ஆணை கிடைக்குமாக இருந்தால் தீர்வு விடயத்தில் அவர்கள் தமிழ்த் தேசிய கட்சிகளைப் பொருட்படுத்தப் போவதில்லை.எனவே, என்பிபிக்கு மக்கள் ஆணை கிடைக்கக்கூடாது என்பதும் ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வை தடுப்பதற்கு அவசியமான உத்திகளில் ஒன்றுதான்.இந்த அடிப்படையில் தமிழ்த் தேசியக கட்சிகள் சிந்திக்க வேண்டும்.

தேர்தல்களை நோக்கி அதாவது உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பது என்ற அடிப்படையில் ஐக்கியத்தைப்பற்றி பேச முடியாது என்ற நிலைப்பாடு சரி. அதேசமயம் தேர்தல்களின் மூலம் தேசிய மக்கள் சக்தி மக்கள் ஆணை பெறுவதைத் தடுக்கவும் வேண்டும் என்பதும் மிக முக்கியம்.எனவே ஐக்கியத்திற்காக உழைக்கும் போது இறுதித் தீர்வு தொடர்பாக தெளிவான திட்டவட்டமான கொள்கைகளை முன்வைத்து உடன்படிக்கைகளை எழுதலாம். எது வேண்டாம் என்று கேட்பதற்குப் பதிலாக இதுதான் வேண்டும்;இது அல்லாத வேறு எந்தத் தீர்வை நோக்கியும் போக முடியாது;அந்தத் தீர்வு வெளிப்படைத்தன்மை மிக்கதாக இருக்க வேண்டும்;உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டால், அது ஒற்றையாட்சிப் பண்புடையது என்று உச்சநீதிமன்றம் பொருள் கோட முடியாததாகவும் இருக்க வேண்டும் என்பதனை எழுத்தில் போட்டால், அதை மீறும் கட்சியை மக்கள் முன் அம்பலப்படுத்தலாம்.

இப்போதுள்ள கட்சி நிலவரங்களின்படி, உள்ளூராட்சி சபை நிர்வாகத்தை நோக்கியோ அல்லது மாகாண சபைத் தேர்தல்களை நோக்கியோ முழுமையான தமிழ் ஐக்கியத்துக்கு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போல,ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியை நோக்கி அதிகம் சாய்வதாகத் தெரிகிறது. சங்குச் சின்னத்தின் கீழ் பொது வேட்பாளரை ஆதரித்தவர்களுக்கு எதிராக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பும் ஒரு கட்சி, அதே சங்குச் சின்னத்தின் கீழ் பொது வேட்பாளரை ஆதரித்த கட்சிகளோடு உடன்பாட்டுக்கு வரத் தயாராக இருக்கிறது.அதுதான் தேர்தல் அரசியல்.இதன்மூலம் தமிழ்த் தேசியப் பேரவையைத் தனிமைப்படுத்தலாம் என்றும் அவர்கள் சிந்திக்கக் கூடும்.

எதுவாயினும், இன அழிப்பை நினைவு கூரும் ஒரு காலகட்டத்தில்,தியாகிகளையும் கொல்லப்பட்டவர்களையும் நினைவுகூரும் ஒரு காலகட்டத்தில்,உயிரைக் கொடுத்தவர்களின் ஆத்மாக்களை மகிழ்விக்க கூடிய ஒரு முடிவை எடுக்கா விட்டாலும் பரவாயில்லை ஆகக்குறைந்தது மாகாண சபைத் தேர்தலில் என்பிபிக்கு தமிழ் மக்களின் ஆணை கிடைப்பதைத் தடுப்பதற்காவது ஏதாவது செய்ய வேண்டும்.