Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்தியா – பாகிஸ்தான் மோதலில் யாருடைய கை ஓங்கியிருந்தது? பாதுகாப்பு நிபுணர் பேட்டி
பட மூலாதாரம், ani
படக்குறிப்பு, பிரமோஸ் ஏவுகணை சோதனை (சித்தரிப்புப் படம்)எழுதியவர், நிதின் ஸ்ரீவாஸ்தவ்பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் தற்போது மட்டுப்பட்டுவிட்டது. ஆனால் மோதலின் போது இரு நாடுகளும் எதிர் தரப்புக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியதாக பரஸ்பரம் தெரிவித்துள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கிய நிலையில், பாகிஸ்தான் எதிர் தாக்குதல் நடத்திய போது, இரு நாடுகளும் பதிலுக்கு பதில் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதால் பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்தது.
பல்வேறு வகையான ஆயுதங்கள் இந்த மோதலில் பயன்படுத்தப்பட்டன. இரு நாடுகளுமே வெளிநாடுகளில் இருந்து வாங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக மோதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் பேசுபொருளாயின.
இரு அண்டை நாடுகளிடையிலான மோதல் மற்றும் பிரச்னை குறித்து, பாதுகாப்பு நிபுணர் சி. உதய் பாஸ்கரிடம் பேசினோம், இந்த மோதல் தொடர்பாக அவரின் கோணம் என்ன என்பதை அறிய முயற்சித்தோம்.
படக்குறிப்பு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதல் குறித்து சி உதய் பாஸ்கர் பேசினார். இந்த மோதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கருத்தில் கொண்டால், இதனை ‘போர்’ என்றே கருத வேண்டும் என்று சி உதய் பாஸ்கர் கூறுகிறார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
பிபிசியிடம் பேசிய அவர், “இரு தரப்பினரின் ராணுவத் திறன்கள், அதிலும் குறிப்பாக ஏவுகணைகள், டிரோன்கள், செயற்கைக்கோள்கள் உள்ளிட்டவற்றின் திறன்கள் மற்றும் எல்லை தாண்டி தாக்கக் கூடிய திறன்களைப் பார்க்கும் போது, பரஸ்பர தாக்குதல் என்பது போர் என்று சொல்லும் அளவில் இருப்பதாகவே கருதுகிறேன். காட்சி வரம்பிற்கு அப்பாற்பட்டு (BVR) உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை இந்த மோதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
காட்சி வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றால், அது நம்மால் பார்க்க முடியாத இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளைக் குறிக்கிறது என்று சி உதய் பாஸ்கர் விளக்கம் அளிக்கிறார்.
“ஓர் இலக்கை முடிவு செய்துவிட்டால், உதாரணமாக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஏவுகணையைப் பயன்படுத்த விரும்பினால், 200 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையைப் பயன்படுத்தலாம். நீங்கள் அத்தகைய ஏவுகணையை ஏவினால், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பால் அதைக் கண்டறிய முடியாது. அதனால்தான் இது காட்சி வரம்பிற்கு அப்பாற்பட்டது அல்லது BVR என்று அழைக்கப்படுகிறது.”
ரஃபேல் போர் விமானம் உட்பட இந்திய விமானங்களையும் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. இதில் உண்மை இருக்கிறதா?
“இதுவரை இரு தரப்பினரும் விவரங்களை முழுமையாக பகிர்ந்து கொள்ளவில்லை, ஆனால் பாதுகாப்பு நிபுணராக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்த மோதலின் அளவை வைத்துப் பார்த்தால், ஏதோ ஒரு வகையான இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது” என்று சி உதய் பாஸ்கர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2022ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் விமான எதிர்ப்பு ஏவுகணை திறன்களின் செயல்விளக்கம் (கோப்புப் படம்)அண்மையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் உச்சத்தில் இருந்தபோது, சீனாவின் பாதுகாப்பு நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.
குறிப்பாக, பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை வழங்கும் நிறுவனங்களின் பங்குகள் கணிசமான அதிகரிப்பைக் கண்டன. அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிறுவனம் ஜே-10சி போர் விமானங்களை தயாரிக்கும் அவிக் செங்டு விமான நிறுவனம் ஆகும்.
சீனாவின் ஷென்சென் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனத்தின் பங்குகள், கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு மே 7ஆம் தேதியன்று மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டன குறிப்பிடத்தக்கது.
“இந்தியாவின் ரஃபேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்த ஜே-10சி போர் விமானத்தைப் பயன்படுத்தினோம்” என்று பாகிஸ்தான் கூறியிருந்ததும் இந்த பங்கு விலை அதிகரிப்புக்கு காரணம் என்றும் நம்பப்படுகிறது.
ஜே-10சி போர் விமானத்தைப் பயன்படுத்தினோம் என்பதை மே 7ஆம் தேதியன்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசியபோது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் தெரிவித்திருந்தார். பாகிஸ்தானின் இந்த கூற்றுக்கு இதுவரை எந்தவொரு பதிலையும் இந்தியா தெரிவிக்கவில்லை. ரஃபேல் விமானம் குறித்த பாகிஸ்தான் கூற்றை ஏற்றுக்கொள்ளவும் இல்லை.
“பிரான்சில் இருந்து வாங்கப்பட்ட ரஃபேல் விமானங்கள் குறித்து தற்போது சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சில ரஃபேல் விமானங்களை இழந்ததாகக் கூறப்படுவது குறித்து இந்தியா அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, உண்மையில் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமுமில்லை என்றே நான் கூறுவேன்” என சி உதய் பாஸ்கர் கூறுகிறார்.
“இரு தரப்பிலும் ஓரளவு சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். பாகிஸ்தானின் சில விமானப்படை தளங்களை சேதப்படுத்தியதாக இந்தியா கூறுகிறது. அதேபோல இந்தியாவின் நிலைகளை சேதப்படுத்தியதாக பாகிஸ்தானும் கூறுகிறது, ஆனால் அதிகபட்ச சேதம் யாருக்கு ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை” என்று அவர் மேலும் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் இந்த மோதலால் இரு நாடுகளின் ஏவுகணைத் திறன்களும் பரிசோதிக்கப்பட்டது என்றோ இல்லை அவற்றின் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் புரிந்துக் கொள்வதற்கான விஷயமாகவோ பார்க்க முடியுமா?
“2019-ல் பாலகோட்டில் நடந்ததற்கும் இப்போது மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. முன்பைவிட தற்போது தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டுள்ளது. உதாரணமாக, யுக்ரேன் போரில் காணப்பட்ட டிரோன் போர் போன்றே மத்திய கிழக்கில் பார்க்க முடிந்தது” என்று சி உதய் பாஸ்கர் கூறுகிறார்.
“பஹல்காமிற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பல அறிகுறிகளை பார்க்க முடிகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் பாரம்பரிய ராணுவ முறைகளிலிருந்து ஓரிரு நிலைகள் முன்னேறியுள்ளன. சொந்தமாக முன்னேறியதா அல்லது பிற நாட்டின் ஆதரவு தேவைப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.”
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பாதுகாப்புச் செலவுகள்
இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவத்துக்காக பெரும் தொகையை செலவிடுகின்றன.
குளோபல் ஃபயர் பவர் தகவல்களின்படி, 2025 ஆம் ஆண்டுக்கான ராணுவ வலிமை தர வரிசையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எட்டு இடங்கள் வித்தியாசம் உள்ளது.
ராணுவ சக்தியை மதிப்பிடும் போது, உலகின் 145 நாடுகளில் இந்தியா நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் 12வது இடத்திலும் உள்ளன.
இந்திய ராணுவத்தில் சுமார் 22 லட்சம் ராணுவ வீரர்கள், 4,201 டாங்கிகள், தோராயமாக 1.5 லட்சம் கவச வாகனங்கள் மற்றும் 3,975 பீரங்கிகள் உள்ளன.
இவற்றைத் தவிர, 264 மல்டி-பேரல் ராக்கெட் பீரங்கிகள் உள்ளன. இந்திய விமானப்படையில் 3 லட்சத்து 10 ஆயிரம் விமானப்படை வீரர்களும், 513 போர் விமானங்கள் மற்றும் 270 போக்குவரத்து விமானங்கள் உட்பட மொத்தம் 2,229 விமானங்களும் உள்ளன.
இந்தியாவின் மொத்த விமானங்களில், தாக்குதல் விமானங்கள் 130, பயிற்சி விமானங்கள் 351 ஆகியவை அடங்கும்.
“இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல போர்கள் நடந்துள்ளன. இவற்றில் 1971இல் வங்கதேசத்தை உருவாக்கிய போர், மிகப்பெரியதாக இருந்தது. அந்த நேரத்தில் சோவியத் யூனியன் (தற்போதைய ரஷ்யா) இந்தியாவிற்கு உதவியது, அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவியது. அப்போது, இருவரின் பின்னணியிலும் இரண்டு சக்தி வாய்ந்த நாடுகள் பக்கபலமாக இருந்தன. மோதலின் விளைவு என்னவென்று அனைவருக்கும் தெரியும்” என்று சி உதய் பாஸ்கர் கூறுகிறார்.
“ஆபரேஷன் சிந்தூரில் நடுத்தர வலிமை கொண்ட நாடுகளின் உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டன என்பதே தற்போதைய மாற்றம். உதாரணமாக, பாகிஸ்தானுக்கு துருக்கி அதிக அளவிலான டிரோன்களை வழங்கியது, ஆனால் அவை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது,” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் நரேந்திர மோதி அண்மை மோதலில் இரு நாடுகளுக்கும் உதவிய நாடுகள்
பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானில் இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இதற்குப் பிறகு, சில நாட்கள் வான் மோதல்கள், பீரங்கித் தாக்குதல்கள் தொடந்தன. இரு தரப்பினரும் எதிரி நாட்டின் விமானத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியதாக பரஸ்பரம் கூறின.
இரு நாடுகளுக்கும் இடையிலான வார்த்தைப் போரும் அதிகரித்தது. அண்டை நாட்டின் தாக்குதல்களை முறியடித்ததாக இருவரும் பரஸ்பரம் தெரிவித்ததுடன், பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் கூறினார்கள்.
“பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளித்துள்ளதாகவும், சீனாவின் ஆயுத உதவியை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் இந்த உதவி எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதை இப்போது உறுதியாகக் கூற முடியாது” என்று சி உதய் பாஸ்கர் கூறுகிறார்.
“இந்தியாவின் சொந்த ராணுவ சக்தி மிகவும் வலுவாக இருந்தது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அத்துடன், வெளிநாட்டு உபகரணங்களையும் இந்தியா பயன்படுத்தியது. உதாரணமாக, ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கிய S-400 மிகவும் வெற்றிகரமாக இருந்தது என்று கூறலாம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, போர் குறித்து தெளிவான கருத்துக்களைக் கொண்ட டிரம்ப், போருக்கு எதிரானவர்டிரம்ப் பற்றிய கருத்து
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் தனது பங்கு பற்றி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் குறித்த தகவல்களை தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்திருந்தார், அதில், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முயற்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“அமெரிக்கா தற்போது உலகின் சக்தி வாய்ந்த நாடு. டிரம்ப் பற்றிய நமது கருத்து என்னவாக இருந்தாலும், அவர் தனது அவரது முதல் பதவிக் காலத்திலும், தற்போதைய இரண்டாவது பதவிக் காலத்திலும், தான் அமைதியை விரும்புவதாக மீண்டும் மீண்டும் கூறிவருகிறார்” என்று சி உதய் பாஸ்கர் கூறுகிறார்.
“அவர் முயற்சிகளை மேற்கொள்ளும் வழிமுறைகள் விசித்திரமாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க அதிபர் போருக்குப் பிறகு ஓடவில்லை என்பதும், அதைத் தடுக்க முயற்சிக்கிறார் என்பதும் நல்ல விஷயம்” என அவர் கூறுகிறார்.
பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் முனீரும் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் யாவை?
“பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்குகிறது. அந்நாட்டு ராணுவத்தின் செயல்பாடுகள் பாகிஸ்தான் மற்றும் அதன் மக்களின் நலனுக்கானதாக இல்லை என்று இம்ரான் கான் தெளிவாகக் கூறியுள்ளார். இது பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றம்” என்று சி உதய் பாஸ்கர் கூறுகிறார்.
நாடாளுமன்ற ஜனநாயகம் இருக்கும் இந்தியாவில் ராணுவம் எப்போதும் மிகவும் ஒழுக்கத்துடன் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவின் அரசியல் அமைப்புகள் வலுவுடன் இருக்கின்றன. ராணுவத்தின் மீது அரசியல் செல்வாக்கு இருப்பதை பார்க்க முடிவதாக கூறப்படுவதையும் அடிக்கடி கேட்கமுடிகிறது.
“இந்திய ராணுவம் எப்போதுமே தொழில்முறை சார்ந்ததாகவும், அரசியல் சார்பற்றதாகவும் இருந்து வருகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் கலாசாரத்தின் தாக்கம் ராணுவத்தில் தற்போது எதிரொலித்து வருவதற்கான சில அறிகுறிகளை நம்மால் பார்க்கமுடிகிறது என்பதை நான் நேர்மையாகச் சொல்ல வேண்டும்,” என்கிறார் சி உதய் பாஸ்கர்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு