Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ரஷ்யா – யுக்ரேன் இடையே 3 ஆண்டுக்குப் பிறகு நேரடி பேச்சுவார்த்தை – என்ன நடந்தது?
பட மூலாதாரம், TURKISH FOREIGN MINISTER OFFICE HANDOUT/EPA-EFE
எழுதியவர், ஒர்லா குரின்பதவி, பிபிசி செய்தியாளர்17 மே 2025
1945-ம் ஆண்டுக்கு பிறகான ஐரோப்பாவின் மிக மோசமான போரில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ஒரு சிறிய ராஜதந்திர முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
யுக்ரேன் மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகள் மார்ச் 2022 க்குப் பிறகு முதல் முறையாக பேச்சுவார்த்தைக்கு நேருக்கு நேர் வந்தனர். இந்த சந்திப்பு, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள பாஸ்ஃபரஸ்ஸின் கடற்கரையில் அமைந்துள்ள ஓட்டமான் காலத்து அரண்மனையில் நடைபெற்றது.
துருக்கி மற்றும் அமெரிக்காவின் அழுத்தமும் ஊக்கமும் இரு தரப்பினரையும் அங்கு கொண்டு வர உதவியது.
இந்த சந்திப்பின் போது கைகுலுக்கல்கள் எதுவும் இல்லை. யுக்ரேனிய பிரதிநிதிகளில் பாதி பேர், தங்கள் நாடு தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது என்பதை நினைவூட்டும் வகையில் ராணுவ சீருடைகளை அணிந்திருந்தனர்.
அந்த அறையில் யுக்ரேன், துருக்கி மற்றும் ரஷ்யாவின் கொடிகளும், ஒரு பெரிய மலர் அலங்காரமும் இருந்தது. யுக்ரேனில் நிரம்பி வழியும் கல்லறைகள் மற்றும் தகர்க்கப்பட்ட நகரங்களிலிருந்து வெகு தூரத்தில் அமைந்திருந்தது இந்த உலகம்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.1000 போர்க் கைதிகளை விடுவிக்க இருதரப்பும் ஒப்புதல்
துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான், இருதரப்பின் முன்னால் இரண்டு பாதைகள் உள்ளன என்று பிரதிநிதிகளிடம் கூறினார். அவரது கூறுப்படி, ஒன்று அமைதிக்கு வழிவகுக்கும், மற்றொன்று அதிக இறப்பு மற்றும் அழிவுக்கு வழிவகுக்கும்.
பேச்சுவார்த்தை இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே நீடித்தது. அதற்குள்ளாகவே வலுவான கருத்து வேறுபாடுகள் வெளிப்பட ஆரம்பித்தன. ரஷ்யா “புதிய மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை” முன்வைத்ததாக யுக்ரேனிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போர் நிறுத்தத்திற்கு ஈடாக யுக்ரேன் அதன் சொந்த பிராந்தியத்தின் பெரும் பகுதிகளில் இருந்து அதன் துருப்புகளை திரும்பப் பெற வலியுறுத்துவதும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Handout photo by Arda Kucukkaya/Turkish Foreign Ministry via Getty Images)
போர் நிறுத்தம் என்ற முக்கியமான விஷயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றாலும் – எதிர்பார்த்தது போலவே – ஒரு உறுதியான முடிவு பற்றிய செய்தி உள்ளது. இரு தரப்புகளுமே 1,000 போர்க் கைதிகளை விடுவிக்க ஒப்புக் கொண்டன.
“இது மிகவும் கடினமான நாளின் நல்ல முடிவு” என்று யுக்ரேனின் வெளியுறவு துணை அமைச்சர் செர்ஹி கிஸ்லிட்ஸ்யா கூறினார். “1,000 யுக்ரேனிய குடும்பங்களுக்கு இது ஒரு நல்ல செய்தி” என்றார்.
இந்த பரிமாற்றம் விரைவில் நடைபெறும் என்று தனது நாட்டின் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டம் உமெரோவ் தெரிவித்தார்.
“எங்களுக்கு தேதி தெரியும்,” என்று கூறிய அவர் , “நாங்கள் அதை இன்னும் அறிவிக்கவில்லை” என்றார்.
“அடுத்த கட்டம்” ஜெலன்ஸ்கி மற்றும் புதினுக்கு இடையிலான சந்திப்பாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அந்த கோரிக்கையை “குறித்து வைத்துக்கொண்டுள்ளதாக” ரஷ்ய தூதுக்குழுவின் தலைவரான விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை ஜெலன்ஸ்கி மற்றும் புதினுக்கு இடையிலான சந்திப்பாக இருக்க வேண்டும் என யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டம் உமெரோவ் தெரிவித்தார். நானும் புதினும் பேசினால் தான் ஏதாவது நடக்கும் : டிரம்ப்
ரஷ்ய தூதுக்குழு பேச்சுவார்த்தையில் திருப்தி அடைந்துள்ளதாகவும், தொடர்புகளைத் தொடர தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். வியாழக்கிழமை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை “ஒரு கோமாளி மற்றும் தோல்வியுற்றவர்” என்று அழைத்ததில் இருந்து இது ஒரு மாற்றமாகும்.
ஆனால் யுக்ரேன் மற்றும் அதன் சில நட்பு நாடுகளிடையே வெறுமனே காலம் கடத்தவும், போர் நிறுத்தத்திற்கான சர்வதேச அழுத்தங்களிலிருந்து திசை திருப்புவதற்கும், 18வது சுற்று ஐரோப்பிய பொருளாதாரத் தடைகளைத் தடுப்பதற்குமான ராஜ தந்திரத்தில் ரஷ்யா ஈடுபடுகிறது என்பது போன்ற அச்சங்கள் உள்ளன.
இரு தரப்பினரும் இப்போது பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தாலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனக்கும் ரஷ்ய அதிபர் புதினுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளே முக்கியம் என்று கூறியுள்ளார். வியாழனன்று அவர் பேசும் போது, “புதினும் நானும் சந்தித்து பேசும் வரை எதுவும் நடக்கப் போவதில்லை.” என்றார்.
அந்த சந்திப்பு எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் “நிச்சயமாக தேவை” என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகிறார், ஆனால் அதுபோன்ற சந்திப்புக்கு தயார் செய்ய நேரம் எடுக்கும். அந்த பேச்சுவார்த்தைகள் எப்போது நடந்தாலும், யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட வாய்ப்பில்லை.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு