13வது திருத்தம் குறித்து பேசுவதை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவே பார்க்கிறோம் – கஜேந்திரகுமார்

13வது திருத்தம் குறித்து பேசுவதை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவே பார்க்கிறோம் – கஜேந்திரகுமார்

by ilankai

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளைப் பெற்றுவிட்டு, எம்மோடு செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் இப்போது 13 ஆவது திருத்தம் தொடர்பில் கூட்டங்களை நடாத்துவதை தாமாகவே ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகவே நாம் பார்க்கிறோம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.நீண்டகாலம் நடாத்தப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவரும் மாகாணசபைத் தேர்தல்கள் விரைவில் நடாத்தப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், அதற்குரிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கிலும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், சமத்துவக் கட்சியின் தலைவர் சந்திரகுமார் மற்றும் முன்னாள் இணைந்த வட-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்குரிய அழுது;தங்களைப் பிரயோகிப்பதுடன் அத்தேர்தலை இலக்காகக்கொண்டு தமிழ்த்தரப்புக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.அதனையடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடாத்திய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூறிய முக்கிய விடயங்கள் வருமாறு:யாழில் கூட்டத்தை நடத்தியது தமிழ்க்கட்சிகள் அல்ல. மாறாக அதனை ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியே நடத்தியது. ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிகள் கூடி மாகாணசபைத்தேர்தலை நடாத்தவேண்டும் என்பது குறித்தும், அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.நாம் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் மிகத்தெளிவாக ஒற்றையாட்சி முறைமைக்குள் தமிழ் அரசியல் நடத்த அறவே இடமில்லை என்பதை எழுத்து மூலமாகத் தெளிவாக வலியுறுத்தி வந்திருக்கிறோம். அதுமாத்திரமன்றி அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் இறுதித்தீர்வு அல்ல, ‘ஏக்கிய இராச்சிய’ யோசனை நிராகரிக்கப்படவேண்டும் எனும் இரண்டு விடயங்களும் ஒப்பந்தத்தில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கு இணங்கியே ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் அனைவரும் ஒப்பமிட்டனர். அதன்பின்னர் உள்ளுராட்சி சபையில் எம்மோடு இணைந்து, நாம் விட்டுக்கொடுப்புகளைச் செய்து அவர்களுக்குப் பதவிகளைக் கொடுத்த பிறகு, அதன் நன்மைகளை அவர்கள் பெற்றுக்கொண்டனர். அவர்கள் எம்மோடு ஒப்பந்தம் செய்திருக்காவிடின் அவர்கள் எந்தவொரு சபையிலும் பதவிகளை பெற்றிருக்க முடியாது. அவ்வாறு பதவிகளைப் பெறுவதற்கு எமது உதவிகளைப் பெற்றுவிட்டு, இப்போது செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் அவர்கள் இப்போது 13 ஆவது திருத்தம் தொடர்பில் கூட்டங்கள் வைப்பதை தாமாகவே ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகவே நாம் பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts