பாடசாலைகளை மூடி போராடுவோம் – Global Tamil News

by ilankai

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக கடந்த மூன்று நாட்களாக போராடி வரும் எங்களை சந்திக்காது பின் கதவால் வெளியேறிவர்களுக்கு வெட்கம் இல்லையா என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான  இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள் கடந்த  திங்கட்கிழமை முதல் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நிலையில் ஆசியர்கள் போராட்டம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலைமையில், நேற்றைய தினம் புதன்கிழமை  கல்வி அமைச்சின் செயலாளர் , வலய கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்டவர்களுடனான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் பின்னர் தம்மை வந்து அதிகாரிகள் சந்திப்பார்கள் என ஆளுநர் செயலகம் முன்பாக ஆசிரியர்கள் காத்திருந்த போது , ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் ஆளுநர் செயலகத்தின் பின் கதவு வழியாக வெளியேறி சென்று விட்டனர் என ஆசியர் சங்க செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சகல பாடசாலைகளையும் மூடி போராட்டங்களை முன்னெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம். நாங்கள் பிழையான செயலில் ஈடுபடவில்லை நியாமான கோரிக்கைகளை முன் வைத்து எமது உரிமைக்காகவே போராடி வருகிறோம்.  ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் பின் கதவால் சென்றமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என மேலும் தெரிவித்தார்

Related Posts