இஷாரா செவ்வந்தியின் கைதுடன் வெளி நாடுகளில் இருந்து 18 பேர் கைது! – Global Tamil News

by ilankai

புதுக்கடை நீதிமன்ற கட்டடத்துக்குள் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தேடப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் நேபாளத்தில் இலங்கையின் விசேட காவற்துறை குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இஷாரா செவ்வந்தியுடன் மேலும் ஒரு பெண் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவருக்கு தஞ்சமளித்த ஒரு சந்தேகநபரும் மேலும் 3 சந்தேகநபர்களும்  பெண்ணொருவரும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் கம்பஹா மற்றும் கொழும்பில் போதைப்பொருள் கடத்தல்களை வெளிநாடுகளிலிருந்து நிர்வகிக்கும் குழு எனவும் இனங்காணப்பட்டுள்ளனர். இஷாரா செவ்வந்தி சட்ட விரோதமாக கடல் மார்க்கமாகவே தப்பிச் சென்றுள்ளார் என்றும்  காவற்துறை  பேச்சாளர் உதவி காவற்துறை  அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார். மேலும், சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 40 சந்தேகநபர்களில் 18 பேர் இதுவரை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். திட்டமிட்ட குற்றச் செயல்களால் சேகரிக்கப்பட்ட 140 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம் மற்றும் பணம் உள்ளிட்ட சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார். நீதிமன்றத்தை உதாசீனப்படுத்தும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர்களை வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசாரணைகளும், சர்வதேச சுற்றிவளைப்புக்களும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் பிரதி பலனாக இதுவரையில் 40 சந்தேகநபர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இவ்வாண்டுக்குள் 18 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும்  பொலிஸ் காவற்துறை உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.

Related Posts