அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான தகவல்களை வழங்கி மக்களை பிழையாக வழி நடத்துகின்றனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான தகவல்களை வழங்கி மக்களை பிழையாக வழி நடத்துகின்றனர்.

by ilankai

அரியாலையில் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் தொடர்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான தகவல்களை மக்களை பிழையாக வழி நடத்துகின்றனர் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அரியாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக இன்றைய தினம் புதன்கிழமை அரியாலை பகுதியை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகை தந்திருந்த தவிசாளரிடம் மக்கள் மகஜர் ஒன்றினை கையளித்தனர். அதன் பின்னர் தவிசாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை சேகரிக்கும் முகமாக அரியாலை பகுதியில் சகல அனுமதிகளை பெற்றே பிரதேச சபை செயலாளரால் கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டன மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூட இந்த இடத்திற்கான அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து பிரதேச செயலாளரால் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையமான காரைக்கால் பகுதியில் இருந்த நிலையத்தில் தற்போது அவற்றின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. அரியாலையில் இந்த இடம் பொருத்தமான இடமாக காணப்பட்டமையால் அதில் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைத்துள்ளோம். இது குப்பைகளை கொட்டும் இடமில்லை. தரம் பிரிக்கும் இடம். இந்த மக்களை சில குப்பைகளை கொட்டும் இடம் என கூறி குழப்பியுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான தகவல்களை மக்களை பிழையாக வழி நடத்துகின்றனர். வடமாகாண ஆளுநரிடம் திண்ம கழிவகற்றலுக்கு பொருத்தமான திட்டத்தினை தீட்டுமாறு கோரி உள்ளோம். அவ்வாறான திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் இந்த இடத்தினை நாம் தொழில் பேட்டையாக மாற்றி அமைப்போம். இதொரு சுற்றுலா தளம் என்கின்றார்கள். இது ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள மயானத்திற்கு அருகிலையே அமைக்கப்பட்டுள்ளது திண்ம கழிவுகளை அகற்ற வேறு இடங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றால் இந்த இடத்தினை தொழில் பேட்டையாக மாற்றி அமைப்போம் என உறுதி அளிக்கிறோம் என தெரிவித்தார். 

Related Posts