தும்புகளை முறுக்கி கயிறுகள் திரிக்கப்படுகின்றன. இழைக் கயிறுகள் என இவை அழைக்கப்படுகின்றன. இழைக் கயிறுகளை முறுக்கி தேடாக்கயிறுகள் ஆக்கப்படுகின்றன. இவ்வாறு முறுக்கி முறுக்கி உருவாக்கப்படும் கயிறுகள் பல வகைப்படும். பற்பல தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும். இந்த கயிறுகள் ஆக்கப்பூர்வமான வகைகளில் பயன்படுத்தப்படுவதாக இருக்கின்றன. ஆனால் இவையே அழித்தழுக்குப் பயன்படுத்துவதாக இருப்பதும் யதார்த்தம். ஆக்கப்பூர்வமான வகையிலான பயன்பாட்டுக்கு உதவுகின்றன கயிறுகள் அழித்தலுக்கும் பயன்படுத்துவது போல, வறுமைநிலையில் இருந்து மீள்வதற்காக உருவாக்கப்பட்டவைதான் நுண்கடன் திட்டங்கள். ஆனால் திட்டங்கள் கிராம மட்டங்களிலுள்ள பாதிக்கப்பட்ட பெண்களை துயரத்துள் மூழ்கடித்து, தற்கொலையில் முடிவு முடிய வைக்கும் விடயமாகவே யதார்த்தத்தில் காணப்படுகிறது. ஏழ்மையும், உதவியின்மையும், அப்பாவித்தனமும் கொண்ட பெண்கள் இனங்காணப்பட்டு அவர்களை குறிவைத்து இலாபமீட்டும் வணிக துறையாக நுண்கடன் திட்டம் கொலையுறுக் கொண்டிருப்பதை நேரடியாகவும் வெகுசன ஊடகங்கள் வாயிலாகவும் அறியமுடிகிறது. அதிநுகர்வு பண்பாட்டுள் ஆட்படுத்தப்பட்ட மக்கள் கடன் வாங்குவது இயல்பானதாக, மகிழ்வான வாழ்வுக்கு வலிப்படுத்துவதாக “ஆசை காட்டி மோசம் செய்யும்” வணிக துறையாக நுண்கடன் திட்டம் வணிக வைரசாக கட்டுப்பாடுகளின்றியும், கட்டுப்படுத்த முடியாமலும் உயிர்ப்பலி எடுத்து வருகிறது. வருடத்திற்கு ஒரு தடவை நம்பிக்கையின் அடிப்படையில் உயிர்ப்பலி கொடுப்பது காட்டுமிராண்டித்தனமானதாக எழுப்பப்படும் குரல்கள் அப்பாவி பெண்களது உயிர்ப்பலி பற்றி அக்கறை கொள்வதில்லை. மாறாக, வன்முறைக்கு உள்ளாக்கப்படும் மேற்படி பெண்களது நடத்தைகள் பற்றியே கதைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. பத்திரிகைகளின் வணிகம் பக்கங்களிலும் வணிக இதழ்களிலும் நுண்கடன் துறையின் அபரிவிதமான வளர்ச்சி பற்றிய செய்திகளே வளர்ச்சியின், அபிவிருத்தியின் அடையாளங்களாக புளகாங்கிக்கப்படுகின்றன. வணிகத்துறைக்கு வளமானதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குறிப்பாக ஏழ்மையிலும் உதவியற்றும் வாழும் பெண்களுக்கு வாழ்வை அழிப்பதற்காகவும் அமையும் நுண்கடன் திட்டங்களது வன்முறை பற்றியே வெற்றிவேல் ஜதீஸ்குமாரின் ஓவியங்கள் மிகப்பெரும்பாலும் அமைகின்றன. ஆக்கத்திற்காக மனிதரால் உருவாக்கப்பட்ட கயிறுகள் எவ்வாறு இன்னொரு பக்கத்தின் தூக்கு கயிறுகளாக, சுற்றி வளைத்து மலைப்பாம்புகள் என இறுக்கி அளிக்கும் செயலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. வண்ணவண்ணமான கயிறுகள் மாயமாய் உயிர் எடுக்கும் வித்தையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து பொதுவெளியில் உரத்துப் பேசவைக்கும் பணியை ஓவியங்கள் வாயிலாக கலைச்செயற்பாடாக வெற்றிவேல் ஜதீஸ்குமாரால் முன்னெடுக்கப்படுவது கவனத்திற்குரியது. இவற்றிலிருந்து விடுபடும் வழிமுறையாக உள்ளூர் வளங்கள், உள்ளூர் திறன்கள், உள்ளூர் ஆக்கங்கள் மூலமாக நிலையான வளர்ச்சியின் சாத்தியப்பாடுகளையும் சமாந்தரமாகக் கொண்டு வருவது இவரது ஓவியங்களது சிறப்பு. பல்வேறு சந்தர்ப்பங்களில் குழுநிலை காண்பிய காட்சிகளில் கலந்துகொண்டு கவனத்தை ஈர்த்த ஜதீஷ்குமார் தனது முதலாவது தனியால் காண்பியக் காட்சி தனது வாழ்விடத்திலும் ஓவியம் வெளிப்படுத்தும் அவலங்களால் பீடிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நிகழ்த்தப்பட வேண்டும் என்ற தீர்மானமும் குறிப்பிடப்பட வேண்டியது. ஓவியர்கள் தமது ஓவியங்களுடன் சமூகங்களின் அனைத்து மட்டங்களிலும் வாழ்தலை ஆக்க வேண்டும் என்ற நோக்குடன் வாழ்ந்த, இலக்கிய ஓவியர் அ.மாற்குவின் ஓவியப் பயணத்தின் தொடர்ச்சியாகவும், நீட்சியாகவும் ஓவியர் வெற்றிவேல் ஜதீஸ்குமாரின் பயணமும் அமைவது சமுதாய நிலைப்பட்ட கலைச் செயற்பாட்டு ஆக்கங்களுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைவதும் உண்மை. அவரது ஓவியங்களும்; ஓவிய ஆக்கங்களுக்கான ஊடகங்களும் அந்த ஊடகங்களை ஓவிய ஆக்கங்களுக்காக பயன்படுத்தும் முறைமைகளும் சிறப்பாக கவனிக்கப்பட வேண்டியவை. நவீனமயமாக்கம் அபிவிருத்தி என்ற பெயரிலான முன்னெடுப்புகள் மூலம் இல்லாமல் ஆக்கப்படும் உள்ளூர் வளங்கள், உள்ளூர் அறிவு முறைகள், உள்ளூர் திறன்கள் என்பவற்றை மீட்டெடுத்தலுக்கான பயணத்தின் ஓவிய செயற்பாட்டு இயக்கமாக “மீண்டெழல்” காண்பியக் கலைக் காட்சி அமைகிறது. பிறரில் தங்கி வாழ்தலில் இருந்து விடுவித்துக் கொண்டு தங்களில் நம்பி வாழும் காலத்தை மீளுருவாக்கும் வாழ்க்கை போராட்டத்தின் ஓவியச் செயற்பாட்டு இயக்கம் வெற்றிவேல் ஜதீஷ்குமாரின் “மீண்டெழல்”. நவீன ஓவியங்களை நேரடியாகவே உள்ளூரின் வாழ்வியலுடன் தொட்டுக் கொள்ளும் ஜதிஸ்குமாரின் ஓவிய இயக்கம் தனித்துவமான தொடக்கம். மறந்து போன அல்லது கவனத்திற்கு எடுக்காத போர்க்காலத்து முற்றுகை வாழ்தலின் போது பட்டினிச் சாவில் விழுந்தழிய விடாது உயிர்ப்பு தந்த உள்ளூர் வளங்கள், உள்ளூர் திறன்கள், உள்ளூர் உருவாக்கங்கள் கவனத்தில் கொள்ளப்படுதலுக்கு ஓங்கி ஒழிக்கும் குரல்களின் ஓவியக் குரல் ஜதிஷ்குமாரின் “மீண்டெழல்” . பேராசிரியர் சி. ஜெய்சங்கர்.
வெற்றி. ஜதீஷ்குமாரின் “மீண்டெழல்” – Global Tamil News
3