யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் கைவிரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. அது தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய உதவிப்பணிப்பாளர் U.A.பந்துல ஜீவ வை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011 ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மந்திரி மனையை பாதுகாக்கவும் , அதனை புனரமைக்கவும் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் அவை எதனையும் செய்ய முடியவில்லை. மந்திரி மனை அமைந்துள்ள காணியானது தனிநபருக்கு உரியது. அவருக்கு சொந்தமாதாகவே மந்திரி மனை காணப்படுகிறது. அதனால் அவரின் அனுமதியின்றி தொல்லியல் திணைக்களத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. மந்திரி மனையை புனர்நிர்மாணம் செய்து பாதுகாப்பதற்காக 2011ஆம் ஆண்டு முதல் , வடமாகாண ஆளுநர்கள் , மாவட்ட செயலர்கள் , தொல்லியல் பணிப்பாளர்கள் என மாறி மாறி வந்த அத்தனை பேரும் காணி உரிமையாளருடன் பல்வேறு கட்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்த போதிலும் , அவர் எதற்கும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் குறித்த காணியை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டது. அதற்கும் அவர் சம்மதிக்கவில்லை. மந்திரி மனையை புனரமைக்க பல்வேறு தன்னார்வ கொடையாளிகள் , உலக வங்கி என பல்வேறு பட்ட தரப்பினரும், நிதியுதவிகளை வழங்க முன் வந்தார்கள். ஒரு கொடையாளி 50 இலட்ச ரூபாயை வழங்கியும் இருந்தார். அவர் நிதி வழங்கி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் , காணி உரிமையாளரின் சம்மதம் இல்லாதமையால் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது போனமையால் , அந்த கொடையாளி தனது பணத்தினையும் மீள பெற்றுக்கொண்டார். இவ்வாறான நிலையில் மந்திரி மனை பல்வேறு சேதங்களை அடைந்திருப்பதால் , அது இடிந்து விழாமல் இருக்கும் வகையில் , எமது தற்துணிவின் அடிப்படையில் , இடிந்து விழ கூடிய நிலைமையில் காணப்பட்ட பகுதிகளுக்கு 19 இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு அவற்றை பாதுகாத்தோம். அந்த கம்பிகளை திருடர்கள் திருடி சென்றுள்ளார்கள். இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம். பொலிஸார் அதனை ஒரு முறைப்பாடாக மாத்திரமே ஏற்றுக்கொண்டார்களே தவிர , விசாரணைகளை முன்னெடுத்து திருடர்களை கைது செய்யவில்லை. இவ்வாறான நிலையில் தான் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக ஏற்கனவே இடிந்து விழ கூடும் என எதிர்பார்த்து இரும்பு கம்பிகள் பொருத்தி இருந்த பகுதி , இரும்பு கம்பிகள் திருடப்பட்டமையால் இடிந்து விழுந்துள்ளது. தொல்லியல் சின்னமாக 2011ஆம் ஆண்டு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட மந்திரி மனை தனியார் ஒருவரின் சொத்தாக காணப்படுவதால் , இது வரை காலமும் குறித்த தனியாருடன் தொல்லியல் திணைக்களம் கலந்துரையாடல்களை நடாத்தி வந்தது. அவை எதற்கும் அவர் தனது சம்மதத்தினை தெரிவிக்கவில்லை. இவ்வாறான நிலையில், மந்திரி மனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது. அதனால் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேசி அவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்
மந்திரிமனையை பாதுகாக்க 14 வருடங்களாக முயல்கின்றோம் – தனிநபர் தடையாக உள்ளதாக தொல்லியல் திணைக்களம் தெரிவிப்பு – Global Tamil News
4
previous post