ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்

by ilankai

மயிலிட்டி துறைமுக புனரமைப்பு பணிகளை நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ள நிலையில், மயிலிட்டி துறைமுக பகுதிகளில் உள்ள தமிழக கடற்தொழிலாளர்களின் படகுகள் ஜே.சி.பி வாகனம் மூலம் அடித்து உடைக்கப்பட்டு , அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட வேளைகளில் அவர்களின் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றி , மயிலிட்டி மீன்பிடி துறைமுக பகுதிகளில் தடுத்து வைத்திருந்தனர். அவ்வாறு 124 படகுகள் தற்போது மயிலிட்டி மீன்பிடி துறைமுக பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் தனித்தனி வழக்குகளாக நடைபெற்று வரும் நிலைகளில் சில வழக்குகள் முடிவடைந்துள்ளன.அவற்றின் அடிப்படையில் இதுவரையில் முடிவற்ற வழக்குகளில் 33 படகுகள் அரச உடமையாக்கப்பட்டுள்ளன. மேலும் 07 படகுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏனைய படகுகள் மீதான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையிலையே நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி மயிலிட்டி துறை முக பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் , அரசுடைமையாக்கப்பட்ட 33 படகுகளையும் ஜே.சி.பி வாகனம் மூலம் அடித்து உடைத்து அவற்றை அச்சுவேலி தொழில் பேட்டைக்கு எடுத்து செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை உரிமையாளர்களிடம் கையளிக்க  நீதிமன்றம் உத்தரவிட்ட 07 படகுகளையும் அதன் உரிமையாளர்கள் கடந்த 25ஆம் திகதி தமிழகத்தில் இருந்து கடற்படையினரின் பாதுகாப்புடன் மயிலிட்டி பகுதிக்கு வந்த தமது படகுகளை பார்த்து சென்றமை குறிப்பிடத்தக்கது.  

Related Posts