நடைப்பெற்று வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கு, இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் இருந்தாலும், அவர்கள் வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கை செலுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க,
“வாக்காளர் அட்டை இல்லை என்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. இது கட்டாயமான ஆவணம் அல்ல. இது இல்லையெனினும் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது.
வாக்கு செலுத்துவதற்கு மிக அவசியமானது அடையாள அட்டை ஆகும். இது தேசிய அடையாள அட்டையாக இருக்கலாம். இல்லையெனில், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவையாக இருக்கலாம். நீங்கள் ஓய்வு பெற்றவர் என்றால், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஓய்வூதிய அடையாள அட்டையை பயன்படுத்தலாம்.
மேலும், சமூக சேவைகள் திணைக்களத்தால் பிரதேச செயலாளர்கள் மூலம் வழங்கப்படும் முதியோர் அடையாள அட்டையையும் பயன்படுத்த முடியும். இதற்கு மேலதிகமாக, மதத்தலைவர்கள் அவர்களுக்கான அடையாள அட்டையை பயன்படுத்தலாம்.
கடந்த காலத்தில் அடையாள அட்டைகள் மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளில் தாமதங்கள் ஏற்பட்டதால், புகைப்படத்துடன் கூடிய ஆவணம் வழங்கப்பட்டது. அந்த ஆவணத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இவை தவிர, தேர்தல்கள் ஆணைக்குழுவால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம்.
இவை எதுவும் இல்லாதவர்களுக்கு, தேர்தல் அலுவலகங்களில் இருந்து தேர்தலுக்காக தற்காலிக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால், நீங்கள் வாக்களிப்பு நிலையங்களில் உங்கள் வாக்கை செலுத்த முடியும் என மேலும் தெரிவித்தார்.