Home இலங்கை நாளை வாக்களிப்பு – வாக்குச்சீட்டில் இவற்றை செய்ய வேண்டாம்!

நாளை வாக்களிப்பு – வாக்குச்சீட்டில் இவற்றை செய்ய வேண்டாம்!

by ilankai

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்குத் ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியாக 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெற உள்ளது. 

339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெறும் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் கட்டாயமாக வருகைதர வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். 

அத்தோடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்னும் பெறாத வாக்காளர்கள் இன்றும் நாளையும் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திற்குச் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, அறிவுறுத்தியுள்ளார்.

வாக்களிப்புக்கான தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, அலுவலக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பம் செய்தமைக்கான பிரதி ஆகியவற்றை எடுத்து வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு எதிரே கட்சிகளின் சின்னங்களும் சுயேச்சைக்குழுக்களின் பெயர்களுக்கு எதிரே சுயேச்சைக் குழுக்களின் சின்னங்களும் இருக்கும், 

அதற்கு எதிராக வெற்றுக்கட்டம் இருக்கும், அதில் புள்ளடி (X) இடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வாக்குச்சீட்டில் எழுதவோ, சித்திரம் கீறவோ, கிறுக்கவோ, எண்ணங்களை எழுதவோ, பெயர்களை எழுதவோ வேண்டாம். புள்ளடி (X) இடப்படாத எந்தவொரு வாக்குச்சீட்டும் நிராகரிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்தார். 

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 65,000இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். 

நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்காக சுமார் 3,000 அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக PAFFREL அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 

Related Articles