தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத்தினரின் போர் வெற்றியைப் பற்றி பேச ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தைரியம் இல்லை என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இந்த கருத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் தனது உரையில், “உலக நாடுகள் தங்கள் சுதந்திர தினங்களில் படைப் பிரிவுகள் மற்றும் பிரிவுகளின் வெற்றிகளைப் பற்றி பெருமையாகப் பேசுகின்றன
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் வெற்றிகள் கூட பேசப்படுகின்றன. டித்வா சூறாவளியின் போது ஆயுதப் படைகளின் பங்களிப்பு பற்றி ஜனாதிபதி பேசினார். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத்தினரின் வெற்றிகளை பற்றிப் பேச அவருக்கு தைரியம் இல்லை” என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“நாங்கள் தமிழ் மக்களுடன் போர் புரியவில்லை. ஆயுதப்படை ஒன்றுடனேயே போரிட்டோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர தினத்தன்று இந்த வெற்றியைப் பெருமையாகக் கூற நாட்டின் தலைவருக்கு ‘முதுகெலும்பு’ இருக்க வேண்டும்.
அமைச்சர்கள் பகிரங்கமாக மதத் தலைவர்களை விமர்சிப்பது நாகரிகமான சமூகத்துக்கு அழகல்ல என்றும் அவர் சாடினார். திருகோணமலை போன்ற பகுதிகளில் மதத் தலைவர்கள் நடத்தப்பட்ட விதம் கவலைக்குரியது.
அரசாங்கம் மக்களின் நலனை விட அரசியல் பழிவாங்கல்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது.
அதற்காகவே புதிய சட்டங்களைக் கொண்டு வரத் துடிக்கிறது. சுதந்திர தினத்தில் ஒரு தரப்பினருக்கு மட்டும் கருத்துச் சுதந்திரம் வழங்கப்படுகிறது.
மற்றவர்கள் ஒடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையான ஜனநாயகம் என்பது அனைவருக்கும் சமமான உரிமையை வழங்குவதே ஆகும் என்றும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
