இந்தியாவை தளமாகக் கொண்டு ஆன்லைனில் பார்மசி என்ற பெயரில் போதை பொருட்கள் விற்கும் சர்வதேச கிரிமினல் அமைப்புடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட வலைகளங்களை அமெரிக்கா முடக்கி உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இந்தியாவை தளமாகக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட இணையதளங்களில் மருந்து மற்றும் போதைப் பொருட்கள் விற்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து மருந்துக் கட்டுப்பாட்டு துறை கள ஆய்வாளர்கள், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் இந்த ஆய்வு நடைபெறுகிறது. ஆன்லைனில் பார்மசி என்ற பெயரில் சட்டவிரோதமாக மருந்து மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததில் இதுவரை 3 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. அத்துடன் 6 பேர் அதிக டோஸ் மருந்துகள் எடுத்துக் கொண்டதில் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தியாவை தளமாகக் கொண்டு இதுபோல் ஆன்லைனில் போதை பொருட்கள் விற்கும் சர்வதேச கிரிமினல் கும்பல் குறித்து இந்திய அரசிடம் தகவல் தெரிவித்துள்ளோம். அத்துடன் சர்வதேச அளவில் இந்த கும்பல் செயல்படுவதால் 200-க்கும் மேற்பட்ட இணையதளங்களை முடக்கி உள்ளோம்.கிரிமினல் கும்பலை கண்டறிந்து விசாரணை நடத்த இந்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளோம். அந்த கும்பலை ஒடுக்கவும் தகவல்கள் அனுப்பி உள்ளோம். இதுபோல் சட்டவிரோதமாக பார்மசி நடத்தும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
