மன்னார் – புத்தளம் பாதையை திறந்து மக்கள் பாவனைக்கு விடுவோம் என தேர்தல் வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி அனுர குமாரவின் அரசு, 15 வருடங்களுக்கு முன் அப் பாதைக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்த இனவாத தரப்புடன் இணைந்து செயற்படுவது கண்டிக்ககூடியவது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார். இன்று (05) பாராளுமன்றில் ஆற்றிய உரையின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,“மன்னார் புத்தளம் பாதையை பாதையை திறந்து தருவோம் என்று சொல்லி விட்டு இன்று, நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த இனவாத தரப்புடன் இணைந்து அவர்களின் அமைச்சின் திணைக்களங்கள் கூறுவது வேடிக்கையானது. இன்று நான் இல்லாத வேளையிலே, அமைச்சர் விமல் ரத்நாயக்க, ஒரு பாராளுமன்ற உறுப்பினருடைய கேள்விக்கு, பதிலளிக்கின்ற பொழுது, அவருடைய பதில், ஒரு நியாயமானதாக, எனக்கு தெரியவில்லை. விமல் ரத்நாயக்கவின் மீது ஒரு பெரிய நல்லெண்ணம் கொண்டவனாக நான் இன்று வரை இருந்தேன். ஆனால், மன்னார் புத்தளம் பாதை சம்பந்தமாக, அவருடைய கருத்து, ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. நூறு வருடம் பழமை வாய்ந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான, B(பீ) வகையான பாதையே மன்னார்- புத்தளம் பாதை ஆகும். நான் அமைச்சராக இருந்த பொழுது, அந்த பாதையை, மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தேன். அதற்கு முன்னர் 100 வருடங்களுக்கு முன்னால் அந்த பாதை, வீதி அபிவிருத்தி அதிகார சபை பாதையாக இருந்த பாதை, எங்களை எல்லாம் அன்று அந்த மண்ணிலிருந்து, பயங்கரவாதம் வெளியேற்றிய பொழுது, அந்தப் பாதையும் மூடப்பட்டு, வாழ்ந்த மக்கள் எல்லாம் விரட்டி அடிக்கப்பட்டதனால், அந்தப் பகுதியில், யாரும் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. இரண்டாயிரத்தி ஒன்பதாம் ஆண்டு, சமாதானம் வந்த பிறகுதான், சொந்த ஊருக்கு, அந்த மக்கள், குறிப்பாக மறிச்சுக்கட்டி, காரடிக்குழி, பாலக்குழி, பெரியமாடு, முள்ளிக்குளம் மக்கள் அந்தப் பகுதிகளுக்கெல்லாம் மீள் குடியேறச் சென்றார்கள். அவ்வாறு செல்லுகின்ற பொழுது, பாரம்பரியமாக மக்கள் வாழ்ந்த பெரியமடு, மரிச்சுக்கட்டு, பாலக்கூலி, கரடிக்குழி, முள்ளிக்குளம், கொண்டச்சி, அளக்கட்டு உள்ளிட்ட சில பகுதிகள் இவ்வாறு வன வள திணைக்களத்திற்கு கீழ் ரெண்டாயிரத்தி பனிரெண்டாம் ஆண்டு, அந்த மக்களுக்கே தெரியாமல் அன்றிருந்த அரசாங்கம் இரகசியமாக வர்த்தமானி அறிவித்தல் செய்து கையகப்படுத்தினார்கள். இதற்கு எதிராக, அன்று நான் ஆளும் கட்சியில் இருந்தாலும் இவ் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தொடர் முயற்சியாக போராடிக்கொண்டு எதிர்த்து பல போராட்டங்களை நியாயபூர்வமாக நாங்கள் செய்த பொழுது இந்த நாட்டில் இருந்த மதவாதம் குறிப்பாக, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மதகுருமார் ஒரு சிலர் மன்னாரோடு எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் மன்னாருக்குள்ளே வந்து ஆர்ப்பாட்டங்களை செய்து என்னை ஒரு காடுகளை அழிக்கின்ற ஒருவராக காட்டுகின்ற, ஒரு மோசமான ஒரு இனவாத செயலைச் செய்தார்கள்.எந்த ஊடகத்தை எடுத்தாலும் எனக்கு எதிராக அந்த மக்களுடைய குடியேற்றத்திற்கு எதிராக ஒரு பெரிய அநியாயமாக அன்று பேசப்பட்ட ஒரு காலமாக இருந்தது. அதையெல்லாம் தாண்டி அம்மக்களை நான் குடியேற்றினேன். அவ்வாறு இருக்கின்ற பொழுது இந்த மன்னார் – புத்தளம் பாதையை மூடுமாறு மேல் மாகாணத்தில் இருக்கின்ற, அந்த பாதைக்கு, சம்பந்தமில்லாத ஒரு சில சிங்கள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அன்று வழக்கு போடுகின்ற பொழுது நானும் அதில் நான்காவது குற்றவாளியாக பெயரிடப்பட்டேன். அதுபோல் வனவள திணைக்களத்திற்கும், அன்று இருந்த முன்னாள் அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ, சேர்த்து வழக்குதாக்கல் செய்தனர். இதன்போது அன்றைய காலம் தொட்டு அனுரவுக்கு முன்னர் இருந்த மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால ஸ்ரீசேனா , கோட்டாபாய ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அனைத்து ஆட்சியாளர்களின் அமைச்சின் திணைக்களங்கள் மக்களுக்கு சார்பாகவே இருந்தனர் குறிப்பாக வனவளத்திணைக்களம், வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம் மக்களுக்காக அப்பாதையை திறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலலையே இருந்தனர்.ஆனால் இன்று இருக்கின்ற ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்கவின் ஆட்சியிலுள்ள அமைச்சரின் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியோர் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்கும் இடையிலே, இருக்க, வருகின்ற பொழுது, 100 கி.மீ குறைவு, மன்னாரிலே இருந்து, புத்தளத்துக்கு வருகின்ற பொழுது, 100 கி.மீ குறைவு. ஜனாதிபதியாகியதும் இந்த பாதையை திறப்பதாக தேர்தல் வாக்குறுதியில் கூறிய அனுரகுமார திஸ்ஸநாயக்க மீது, இனவாதம் இல்லாத ஓர் அரசாங்கம் என்றும், முஸ்லிம் சமூகத்தினர் ஜனாதிபதி அனுர மீது நல்லெண்ணம் கொண்டிருந்தோம். நீங்கள் செய்யும் நல்ல விடயங்களுக்கு நாம் ஆதரவுகளை வழங்கி இருந்தோம், ஆனால் அப்படிப்பட்ட இந்த அரசாங்கம் இந்த பாதையை நிரந்தரமாக மூடுவதற்கான துரோகத்தை செய்கின்றது என்றால் அதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்கின்ற பொருட்களை கொழும்புக்கு கொண்டு வருவதன் மூலம் எவ்வளவு பொருளாதாரம் மிச்சம் என்று சிந்தியுங்கள். நூறு கிலோமீட்டர் குறைகின்ற பொழுது, இந்த நாட்டுக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள், அந்த பிரதேசத்துக்கு செல்லுகின்ற பொழுது, அந்த பிரதேசம் முன்னேறும். அதேபோல, நூறு கிலோமீட்டர் கூடுதலாக செல்லுகின்ற பொழுது, எவ்வளவு சுற்றாடல் மாசடையும் என்று சிந்தியுங்கள்.78வது இலங்கையின் சுதந்திரத்தினை அரசு கொண்டாடியபோது வடக்கிலும், கிழக்கிலும் வாழும் மக்கள் இன்றைய தினத்தை கறிநாளாக கொண்டிாடியதுடன், தமது எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தினர். ஆனால் நாங்கள் உங்களிடம் நாட்டை பிரித்து கொடுங்கள் என்று கேட்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.எனவே, தயவு செய்து விலங்குகளை பாதுகாக்கிறோம் என்று மக்களை மக்களை கஷ்டப்படுத்துகின்ற ஒரு முடிவை இந்த அரசாங்கம் எடுக்கக் கூடாது. இது தொடர்பாக அவசரமாக பொறுப்பான அமைச்சர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஓர் மேசையில் உட்கார்ந்து பேசுங்கள் தீர்வைப் பெற்றுத்தாருங்கள்.ஜனாதிபதி, புத்தளத்துக்கு சென்ற பொழுது மன்னார் புத்தளம் பாதையில் ஒரு பெரிய அணைக்கட்டை கட்டுவதற்கு 600 மில்லியன் தருவதாக முடிவெடுத்து வரலாற்று துரோகத்தை செய்துவிடாதீர்கள். அந்த அணைக்கட்டு திட்டத்தை விட இந்த வீதி முக்கியம் அதை திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள், இல்லையெனின் நாட்டிற்கு அது பெரும் பாதிக்கப்பாக அமையும்.” என குறிப்பிட்டுள்ளார்.