
சிங்களவர்கள் ஏன் சமஷ்டியை எதிர்க்கிறார்கள் என்பது குறித்து போதிய ஆய்வுகளோ, தெளிவுபடுத்தல்களோ இல்லாத நிலையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயத்தில் முன்னோக்கி நகர முடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்கும் நோக்கில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். “அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை குறித்துப் பேசப்படுவது ஆரோக்கியமானதொரு விடயம் என்றாலும், கடந்த காலங்களிலும் இதுபற்றி பல்வேறு கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு, பல ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன” என்று அவர் தெரிவித்தார்.
அவ்வாறிருக்கையில் முன்னைய முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன என்று நிச்சயமாக ஆராயவேண்டும்.
அத்தோல்விக்கான காரணத்தைக் கண்டறியாமல் இவ்விடயத்தில் முன்னோக்கி நகரமுடியாது.
பெரும்பான்மையானோர் ஒருமித்த நாட்டையும், சிறுபான்மையானோர் சமஷ்டி முறைமையையும் வலியுறுத்தும் போக்கும், அது சார்ந்த பிரிவினையும் நாட்டில் பல தசாப்த காலமாக நிலவுகின்றது.
அந்தப் பிரிவினைகள் முன்னைய அரசியலமைப்பு முன்மொழிவுகளிலும் பிரதிபலித்தன என்றும் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். ஏன் மூன்று தசாப்தகால யுத்தம் ஆரம்பமானது, என்பது பற்றி பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
ஆனால் சிங்களவர்கள் ஏன் சமஷ்டியை எதிர்க்கிறார்கள் என்பது குறித்து போதிய ஆய்வுகளோ, தெளிவுபடுத்தல்களோ இல்லை அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே புதிய அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருக்கும் பின்னணியில், மீண்டும் புதியதொரு ஆவணத்தை உருவாக்குவதில் எவ்வித பயனுமில்லை என்பதே தனது நிலைப்பாடாகும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.