
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட, தமிழர்களின் பூர்வீக அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்லும் வீதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளமையினாலும், குறித்த வீதியில் அமைந்துள்ள விளாத்தியடி இறக்கப் பாலம் உடைப்பெடுத்துள்ளதாலும் அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்வதற்குரிய போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தற்போது அக்கரைவெளியில் அறுவடைசெய்யப்பட்ட 5000 வரையிலான நெல் மூட்டைகள் அங்கிருந்து எடுத்துச்செல்ல முடியாமல் வயல்வெளிகளிலும், வீதிகளிலும் நீண்ட நாட்களாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டிற்கு அமைவாக அப்பகுதிக்குச் சென்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விவசாயிகள் எதிர்நோக்கும் பாதிப்புநிலமைகள் தொடர்பில் பார்வையிட்டதுடன், விவசாயிகள் எதிர்நோக்கியள்ள பாதிப்பு நிலமைகளைச் சீர்செய்வதற்கு தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலையப் பிரிவில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக அக்கரைவெளி பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதியினைச் சேர்ந்த விவசாயிகளும், திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப்புறக்கிராமமான தென்னமரவடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் சுமார் 2000 ஏக்கர் இற்கும் மேற்பட்ட வயல்நிலங்களில் நெற்செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அக்கரைவெளி விவசாயநிலப் பகுதிக்குச் செல்லும் வீதி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாலும், குறித்த வீதியில் அமைந்துள்ள விளாத்தியடிஇறக்கப் பாலம் உடைப்பெடுத்துள்ளதாலும் அப்பகுதியில் நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் அறுவடைசெய்யப்படும் பெரும்போக நெல்லினை அங்கிருந்து எடுத்துச்செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் குறிப்பாக 800 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களில் அறுவடை மேற்கொள்ளப்பட்ட 5000 வரையிலான நெல் மூடைகள் அங்கிருந்து எடுத்துச்செல்ல முடியாத நிலையில் வீதியோருங்களிலும், வயல்வெளிகளிலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு இவ்வாறு எடுத்துச்செல்ல முடியாத நிலையில் 15 நாட்கள் வரையில் அங்கு நெல்மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் நெல்மூட்டைகள் மூழ்கிப் பாதிப்படைந்துள்ளன.
இதனால் அக்கரை வெளியில் தற்போது 200இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதனைவிட இன்னும் அறுவடை செய்யவேண்டிய நிலையில் பலநூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் அக்கரை வெளியில் காணப்படுகின்றபோதும் குறித்த வீதிப் பாதிப்பால் விவசாயிகள் அறுவடைசெய்வதிலும் தயக்கங்காட்டி வருகின்றனர்.
