
லோக்சபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை “நேரடியாகத் தாக்க ” திட்டமிட்டிந்ததாக தனக்கு உறுதியான தகவல் கிடைத்ததாகச் சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தெரிவித்தார்.
பிரதமரின் பாதுகாப்பு கருதியே அவரது பதிலுரை ரத்து செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்களை கேடயமாகப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்ததாக ஓம் பிர்லா தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு எம்பி ஜோதிமணி மற்றும் எம்பி சுதா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள எம்பி ஜோதிமணி, “கேள்விகளுக்கு பயந்துகொண்டு மோடி அவைக்கு வரவில்லை.
ராணுவ தளபதி கூறியது பொய் என பிரதமர் கூறுவாரா? மோடி, அதானி, பாஜகவை காப்பாற்ற இந்தியாவை மொத்தமாக அமெரிக்காவிற்கு அடகு வைத்துள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தெரியாமல் எப்படி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும்? அதுபோல எப்ஸ்டீன் கோப்புகள் குறித்தும் விளக்கவேண்டும். இதைத்தான் கேட்கிறோம். இவைகளை கேட்க ராகுல் காந்தி முயலும்போது அவரை பேசவிடாமல் தடுக்கின்றனர். அவர்களின் பயமும், பலவீனமும் இன்று பிரதமரை அவைக்கு வரவிடாமல் தடுத்துள்ளது. அனைத்தையும் மறைக்க ஒரு கட்டுக்கதையை திரிக்கின்றனர். ” என தெரிவித்தார்.
எம்பி சுதா, “சபாநாயகர் கூறுவது முற்றிலும் தவறானது. நடுநிலையுடன் செயல்பட வேண்டிய சபாநாயகர் அவதூறாக பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. எதையோ மறைப்பதற்கு பெண் எம்பிக்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். சீன ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்க ராகுல் காந்தி கேட்கிறார். ராகுல் காந்தியை பேசவிடாமல் அத்தனை பேரும் தடுத்தார்கள். முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி பற்றி பாஜக எம்பிக்கள் அவதூறாக பேச சபாநாயகர் அனுமதித்தார். எப்ஸ்டீன் விவகாரத்தை மறைக்க இதனை கையில் எடுத்துள்ளனர் ” என தெரிவித்துள்ளார்.
