
சாமி மலை பகுதியில் உள்ள கவரவலை தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் பணி நிறுத்தம் செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் எட்டு பேர் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாமி மலை பகுதியில் உள்ள ஹொரணை தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் கவரவலை தேயிலைத் தோட்டத்தை சேர்ந்த எட்டு தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தில் அமைந்துள்ள இந்து கோவிலுக்கு முன்னால் சத்தியாக்கிரகத்தை வியாழக்கிழமை ( 05 ) ஆம் திகதி காலை 7 .30 மணிக்கு தொடங்கினர்.
கவரவலை தேயிலைத் தோட்ட நிர்வாகத்தால் தங்கள் சேவைகள் இடை நிறுத்தப்பட்டதற்கு எதிராகவும், நிலுவைத் தொகையுடன் தோட்ட நிர்வாகம் தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கோரி சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
எட்டு தோட்டத் தொழிலாளர்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டு 48 நாட்கள் கடந்து விட்டதாக சத்தியாகிரகத்தில் பங்கேற்ற தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
கவரவலை தேயிலைத் தோட்டத்தில் தினமும் வேலை செய்ய வரும் பதிவு செய்யப்படாத தொழிலாளர்களை தேயிலை கொழுந்தினை பறிக்க அனுமதிக்க வேண்டாம் என கவரவலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்,
தோட்ட நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, 48 நாட்களுக்கு தங்கள் சேவைகளை தன்னிச்சையாக தோட்ட நிர்வாகம் நிறுத்தி வைத்ததற்கு எதிராக கவரவலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இந்த சத்தியாக்கிரகத்தை தொடங்கியுள்ளனர்.
மேலும், இடைநீக்கம் செய்யப்பட்ட நாட்களுக்கு சம்பளத்துடன் தங்கள் சேவைகளை உடனடியாக மீண்டும் வழங்குமாறு தோட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி இந்த சத்தியாக்கிரகத்தை தொடங்கியுள்ளதாக சத்தியாகிரகத்தில் பங்கேற்ற தோட்டத் தொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர்
