
மாநகராட்சிகளில் துணை ஆணையர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரையிலான அமைச்சுப் பணியாளர்களின் பதவி உயர்வுகளில் நீடிக்கும் சிக்கல்களால், தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் 50 சதவீதம் காலிப்பணியிடங்கள் உருவாகி உள்ளன.
சென்னை மாநகராட்சி மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாநகராட்சிகள் நீங்கலாக, பழைய 20 மாநகராட்சிகளுக்கு மக்கள்தொகைக்கு ஏற்ப பணியிடங்களை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் 20 மாநகராட்சிகளில் 22 துணை ஆணையர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதில் 12 பணியிடங்களில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் நகராட்சி நிர்வாக இணை இயக்குநர்கள் மாற்றுப்பணி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். மீதமுள்ள 10 துணை ஆணையர் பணியிடங்களில் மாநகராட்சிகளில் பணிபுரியும் உதவி ஆணையர் கிரேடு-1 (மண்டலம்) ஊதிய நிலை 25-ல் உள்ளவர்களை பதவி உயர்வு வழங்கி பணி நியனம் செய்யப்பட வேண்டும்.
இதில் திருப்பூர் மாநகராட்சி தவிர, மற்ற மாநகராட்சிகளில் இந்த அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதேபோல், உதவி ஆணையர் முதல் கடைநிலை இளநிலை உதவியாளர் பணிநிலை வரை பதவி உயர்வுகள் பாதிக்கப்பட்டு, மாநகராட்சிகளில் 50 சதவீதம் காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளன. இதனால் மாநகராட்சிகளின் நிர்வாகத்திறன் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளர் சங்க தலைவர் ஆர்.சுப்பிரமணியன் கூறும்போது, “மாநகராட்சிகளில் உதவி ஆணையர் நிலையில் 146 பணியிடங்கள் உள்ளன. இதில், 22 பணியிடங்களில் மட்டுமே மாநகராட்சி பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதி 70 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அதுபோல், மாநகராட்சிகளில் நிர்வாக அலுவலர், கணக்கு அலுவலர், வருவாய் அலுவலர் பணியிடங்கள் 86 அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 35 பணியிடங்கள் காலியாக உள்ளன. கண்காணிப்பாளர், உதவி வருவாய் அலுவலர் நிலையில் 283 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்னன. இவற்றில் 80 பணியிடங்கள் காலியாக உள்ளன.
புதிதாக உருவாக்கப்பட்ட 10 மாநகராட்சிகளில் கண்காணிப்பாளர், உதவி வருவாய் அலுவலர் இடங்கள் பெரும்பாலும் காலியாகவே உள்ளன. கண்காணிப்பாளர் அல்லது உதவி வருவாய் அலுவலர் பணியிடங்களுக்கு நிர்வாக அலுவலர், கணக்கு அலுவலர், வருவாய் அலுவலர்களில் இருந்து பதவி உயர்வு செய்யப்பட வேண்டும்.
ஆனால், இந்த பதவி உயர்வில் அந்தந்த மாநகராட்சிகளில் பணிபுரிவோரை மட்டுமே பதவி உயர்வு செய்ய வேண்டும். ஆனால், பழைய மாநகராட்சிகளில் இதுபோன்ற பணியிடங்களில் மிக அதிகமானோரும், புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகளில் இந்த பணியிடங்களில் ஆட்களே இல்லாமலும் உள்ளனர்.
அதனால், விதிகளில் தளர்வு செய்து மாநில அளவில் பணிமூப்பு பட்டியல் தயார் செய்து பதவி உயர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
