
நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனின் புகைப்படம் மற்றும் பெயரை வணிக ரீதியாக பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற பெயருடைய நிறுவனம், தனது புகைப்படம், பெயர், உலக நாயகன் என்ற படத்தையும், தனது பிரபல வசனத்தையும் தனது அனுமதியின்றி பயன்படுத்தி, டி–சர்ட்களையும், சர்ட்களையும் விற்பனை செய்து வருவதாகக் கூறி, நடிகர் கமல்ஹாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரித்த உயர் நீதிமன்றம் வர்த்தக ரீதியில் கமல்ஹாசனின் அனுமதியின்றி அவரின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல்ஹாசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எதிர்மனுதாரருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் தவறான முகவரி என திரும்ப வந்துள்ளதாக கூறினார்.
அதன் காரணமாக மின்னஞ்சல் மூலமாக நோட்டீஸ் அனுப்ப அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். வழக்கு தொடர்பாக தமிழ் நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டதாகவும் கமல்ஹாசன் தரப்பில் கூறப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, எதிர்மனுதாரருக்கு மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்ப கமல்ஹாசன் தரப்புக்கு அனுமதி அளித்தார். மேலும், கமல்ஹாசன் தரப்பு விரும்பும்பட்சத்தில் மனு குறித்து செய்தி தாள்களில் இன்னும் விரிவாக விளம்பரம் செய்ய அறிவுறுத்தி வழக்கை பிப்ரவரி 25-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
