பெண்ணாக ஆண் எனும் சமூகத்தில்… – இராசகுமார் வினோதன் – Global Tamil News


சமூகம் என்பது மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்து, இணைந்து வாழும் ஓர் அமைப்பு. ஆனால், இந்த அமைப்பு வரலாற்றின் பெரும்பகுதியில் சமத்துவமானதாக இருந்ததில்லை. ஆணாதிக்கம் எனும் வேரூன்றிய கருத்தியல், ஆண்களை அதிகாரத்தின் மையத்திலும், பெண்களைக் கட்டுப்பட வேண்டியவர்களாகவும், இரண்டாம் நிலையினராகவும் நிலைநிறுத்தியது. ‘பெண்ணாக ஆண் எனும் சமூகத்தில்’ வாழ்வது என்பது சாதாரண விடயம் அல்ல. பெண்கள் இந்த ஆணாதிக்க அமைப்பின் கட்டமைக்கப்பட்ட விதிகள், எதிர்ப்புகள், தடைகள் மற்றும் நிராகரிப்புகளை ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டு கடந்துசெல்வதைக் குறிக்கிறது. வரலாற்றின் தொடக்கப்புள்ளி முதல், இன்று நாம் வாழும் அதிநவீன காலம் வரை, பெண்ணின் இருப்பு எப்போதுமே கேள்விக்குறியாகவோ அல்லது வரையறைக்கு உட்பட்டதாகவோ இருந்துள்ளது. இத்தகைய வலுவான கட்டமைப்பின் மத்தியில், “பெண்” என்ற அடையாளத்துடன் வாழ்வது என்பது, தனது உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும் அன்றாடம் போராடும் ஒரு பயணமாகவே உள்ளது. மனித நாகரிகத்தின் தொடக்க காலத்தில் பெண் தலைமைத்துவம் கொண்ட சமூகங்கள் இருந்ததற்கான சான்றுகள் இருப்பினும், காலப்போக்கில் அரசுரிமை, போர் மற்றும் சொத்துரிமை போன்ற காரணங்களால் உடலியல் பலம் கொண்ட ஆண் சமூகத்தின் தலைமையாக உருவெடுத்தான். இந்த மாற்றம், பெண்ணைக் குடும்ப அமைப்புக்குள் கட்டுப்படுத்தியதுடன் அவளைச் சொத்தின் ஓர் அங்கமாகவும், வாரிசுகளை ஈட்டித் தரும் ஒரு கருவியாகவும் மட்டுமே பார்க்கத் தூண்டியது. நமது மரபின் ஆழத்தில் வேரூன்றியிருக்கும் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், ஒருபுறம் பெண்களைத் தியாகத்தின் மறுவடிவங்களாகப் போற்றினாலும், மறுபுறம் அவர்களைச் சமூகத்தின் கௌரவம் என்ற பெயரில் அடக்கியாள்வதற்கான விதிகளையும், எல்லைகளையும் சன்னமாக விதைத்தன. இராமாயணம் தர்மம், நீதி ஆகியவற்றைப் பற்றிப் பேசும் காவியமாகப் போற்றப்பட்டாலும், அதில் சீதையின் நிலை ஆணாதிக்கச் சமூகத்தின் கொடுமையை அம்பலப்படுத்துகிறது. சீதை பதிவிரதையாக வர்ணிக்கப்பட்டாலும், அவளின் வாழ்க்கை ஆணின் அதிகார எல்லைக்குள் கட்டுப்பட்டே அமைந்தது. இராவணனிடமிருந்து மீட்கப்பட்ட பின்னரும், இராமன் சீதையை ஏற்றுக்கொள்ளத் தயங்கினான். பழிச்சொல் விழுந்துவிட்டதைக் காரணமாகச் சொல்லி, தன் தூய்மையை நிரூபிக்கச் சீதை அக்கினிப் பிரவேசம் செய்ய நேர்ந்தது. போர் வெற்றிக்கான கௌரவம் இராமனைச் சார, தூய்மையை நிரூபிக்கும் சுமை மட்டும் சீதை மீது சுமத்தப்பட்டது. இது ஆணாதிக்கத்தின் உச்சக்கட்டச் செயலாகும். ஒரு பெண்ணின் மதிப்பு அவளது மனத்தூய்மையில் அல்லாமல், அவளது உடல் மற்றொருவனால் தீண்டப்பட்டதா என்ற பொதுச் சந்தேகத்திற்குக் கீழ்ப்படிய வேண்டியதாயிற்று. ஒரு பெண் தீண்டப்பட்டால் களங்கப்பட்டவளாகக் கருதப்படுவாள் என்ற கொடிய விதியை இந்த நிகழ்வு நிலைநாட்டி, பாலியல் வன்முறைக்குப் பெண்களுக்கு எதிரான சமூக மனநிலைக்கு வித்திட்டது. சீதை அக்கினிப் பிரவேசத்தின் மூலம் தனது தூய்மையை நிரூபித்த பின்னரும், இராமன் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பொதுமக்கள் மத்தியில் எழுந்த சிறு வதந்திக்காகக் கருவுற்றிருந்த அவளை மீண்டும் காட்டுக்கு அனுப்பத் துணிந்தான். இது, ஒரு மன்னன் தனது மனைவியின் மீதான நம்பிக்கையையும் தியாகத்தையும் விட, “பொதுமக்கள் என்ன சொல்வார்கள்?” என்ற ஆணாதிக்க சமூகத்தின் கௌரவத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இராமன் ஒரு மன்னன் என்றாலும், அவனது தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகூட, சமூகத்தின் பழிச்சொல்லுக்கு அஞ்சும் மனநிலைக்கும், ஆணாதிக்கச் சட்டங்களுக்கும் பலியானது. சீதையைத் தியாகம் செய்வதன் மூலம், இராமன் தர்மத்தின் காவலனாகப் பார்க்கப்பட்டான். இது, ஒரு ஆண் தனது கடமையைச் செய்வதற்காகத் தனது மனைவியைத் தியாகம் செய்யலாம் என்ற மரபான விதியை உருவாக்கி, பெண் என்பவள் கணவனுக்காகவும் சமூகத்திற்காகவும் தியாகம் செய்யவே பிறந்தவள் என்ற மனநிலையை ஆழமாகப் பதிய வைத்தது. மகாபாரதக் காவியத்தில், திரௌபதி வலிமையின் வடிவமாகக் காட்டப்பட்டாலும், அவள் எதிர்கொண்ட அவமானங்கள் ஆணாதிக்கச் சமூகத்தில் பெண் ஒரு உடைமைப் பொருளாகவே பார்க்கப்பட்டதற்கான கொடூரமான சான்றுகளாகும். பாண்டவர்களில் மூத்தவன் யுதிஷ்டிரன் சூதாட்ட மோகத்தால் தன்னுடைய சகோதரர்கள், தன்னை என அனைத்தையும் இழந்த பிறகு, இறுதியாகத் தன்னுடைய மனைவியான திரௌபதியைப் பணயமாக வைத்தான். இந்தப் பயங்கரமான நிகழ்வு, பெண்ணை ஒரு சொத்து என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்ததைக் காட்டுகிறது. ஒரு மனைவிக்குச் சொந்த விருப்பமோ, உரிமையோ அங்கு மதிக்கப்படவில்லை. யுதிஷ்டிரனுக்கு தன்னை இழக்கும் உரிமை இருக்கிறதா இல்லையா என்ற விவாதமே ஆணாதிக்கச் சபையின் முக்கிய விவாதமாக இருந்ததே தவிர, அங்கே திரௌபதிக்குத் தன்னைத் தானே பணயமாகப் போடுவதில் சம்மதம் இருந்ததா என்ற கேள்வி எழவே இல்லை. இது ஆணாதிக்கத்தின் உச்சபட்ச ஆளுமையையும், மனைவியின் தனிப்பட்ட இருப்பை முற்றிலுமாக மறுத்தலையும் காட்டுகிறது. சூதாட்டத்தில் பணயமாக இழந்த பின், துச்சாதனன் திரௌபதியைத் தாசி என்று அழைத்து, பொது மன்றத்தில் அவள் துகிலுரியப்பட்ட சம்பவம், ஆணாதிக்கச் சமூகம் ஒரு பெண்ணின் மானத்தை எந்த அளவிற்கு இழிவுபடுத்தத் துணியும் என்பதைக் காட்டுகிறது. ஐந்து கணவர்கள் இருந்தும், தனக்குச் சொந்தமாக முடிவெடுக்கும் உரிமையோ, தற்காத்துக் கொள்ளும் பலமோ இல்லாமல் அவள் அவமானப்படுத்தப்பட்டாள். சபையில் வீற்றிருந்த பீஷ்மர், துரோணர் போன்ற வலிமைமிக்க குருமார்கள் மற்றும் வீரர்கள் இந்த அவமானத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கத் திராணியின்றி மௌனம் காத்தார்கள். அரசு சபையின் நீதி தலைகுனிந்து நின்ற மிக மோசமான தருணம் அது. காரணம், ஆணாதிக்கத்தின் கட்டமைப்பில், வீட்டின் பெண் மீது கணவன் எடுக்கும் முடிவை எதிர்ப்பது என்பது ‘தர்மத்தை மீறுவது’ என்ற தவறான புரிதலைத் தரும். இந்த மௌனம், ஆணாதிக்கச் சட்டங்களுக்குப் பணிந்துபோகும் கோழைத்தனத்தையும் மற்றும் ஒரு பெண்ணின் கௌரவத்தைவிடச் சமூக விதிகளும் அரசதிகாரமும் மேலானவை என்ற பிடிவாதத்தையும் வெளிப்படுத்தியது. இராமாயணம், மகாபாரதம் போன்ற பெரும் காவியங்களைத் தாண்டி, பிராந்திய மற்றும் புராணக் கதைகள் பலவற்றிலும் பெண்ணின் நிலை, ஆணாதிக்கச் சமூகத்தின் வரையறைக்குள் சிக்கித் தவிப்பதும், சில சமயங்களில் ஆணாதிக்கத்தை மீறிச் சக்திமிக்க பாத்திரங்களாக எழுச்சி பெறுவதுமான இரட்டை நிலையை வெளிப்படுத்துகின்றன. இக்கதைகள், ஒரு பெண் நீதி கேட்பவளாக இருந்தாலும் அல்லது தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவளாக இருந்தாலும், அவள் கடந்து வர வேண்டிய சோதனைகளும், சுமக்க வேண்டிய பழிகளும் மிக அதிகம் என்பதையே சுட்டுகின்றன. அகலிகை, கௌதம முனிவரின் மனைவி, இந்திரனின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டாலும், அவளது கணவனால் கல்லாகப் போகச் சபிக்கப்படுகிறாள். இதில் தவறுக்குக் காரணமாக இருந்த ஆணுக்குச் சிறிய தண்டனை அல்லது மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில், ஏமாற்றப்பட்டவளாக இருந்தும், ‘கற்பு” என்னும் ஆணாதிக்கக் கட்டுப்பாட்டைக் கடந்ததற்காகப் பெண்ணுக்கு மட்டுமே கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. மேலும், அவளது விடுதலை இராமனின் பாதத்தால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற விதியும், பெண்ணின் விடுதலைகூட ஆணைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க மரபைப் பலப்படுத்துகிறது. இதற்கு மாறாக, கண்ணகி, சிலப்பதிகாரக் காவியத்தில், அநீதியாகக் கொல்லப்பட்ட கணவனுக்காகப் பாண்டிய மன்னன் அவையில் நீதி கேட்டுப் போராடி, மதுரையை எரித்துத் தன் கோபத்தைத் தீர்த்துக்கொள்கிறாள். ஒரு சாதாரணக் குடிமகளாக ஒரு மன்னனின் அதிகாரம் மற்றும் ஆணாதிக்கத்தின் கட்டமைப்பைத் தனி ஒருவளாக நின்று கேள்வி கேட்கும் கண்ணகியின் செயல், தொன்மையான காவியங்களில் ஆணாதிக்கக் கட்டமைப்பைத் தகர்க்க ஒரு பெண் ஆயுதம் ஏந்திய அரிதான நிகழ்வாகும். அவள் நீதிக்காகக் குரல் கொடுத்தபோதும், இறுதியில் அவள் தெய்வமாக உயர்த்தப்படுவது, பெண்ணின் கோபமும் சக்தியும் சாதாரண மனித வடிவத்தில் ஏற்றுக்கொள்ளப்படாமல், கட்டுப்படுத்த முடியாத சக்தியாகவே மதிக்கப்படும் சமூக மனநிலையைக் குறிக்கிறது. பெரும்பாலான புராணக் கதைகள் ஆண்களின் வீர சாகசங்களைப் போற்றினாலும், அதற்குக் காரணமாக இருந்த பெண்களின் பின்னணி உழைப்பையும், ஆதரவையும் பெரும்பாலும் மௌனமாக்கிவிடுகின்றன. உதாரணமாக, இராவணனின் மனைவியான மண்டோதரி, இராமனுடன் போரிட வேண்டாம் என்று பலமுறை அறிவுரை கூறியும், இராவணன் அவளது ஞானமோ, தீர்க்கதரிசனமோ ஆணின் அகங்காரம் மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்தின் முன் நிற்கவில்லை என்று கருதிப் புறக்கணிக்கிறான். இது, வீட்டுக்குள் உள்ள பெண்ணின் அறிவு மற்றும் முடிவெடுக்கும் திறன் மீது ஆணாதிக்கச் சமூகம் கொண்டிருக்கும் அவநம்பிக்கையையும் புறக்கணிப்பையும் குறிக்கிறது. இதேபோல், மகா விஷ்ணுவின் அவதாரங்களில் இலட்சுமி திருமாலின் ஒவ்வொரு அவதாரத்திலும் அவருடன் செல்கிறார். இங்கு, இலட்சுமி நேரடியாகப் போரில் பங்கேற்காமல், அவருக்கான ஆதரவை வழங்குபவளாகவே சித்தரிக்கப்படுகிறாள். அவளது இருப்பும், பங்களிப்பும் பெரும்பாலும் அவதாரத்தின் வெற்றிக்கு ஒரு துணையாகவே வரையறுக்கப்படுகின்றன. கிராமப்புற மற்றும் நாட்டார் கதைகளில், ஏழு கன்னிகள் மற்றும் கிராம தேவதைகள் (மாரியம்மன், காளியம்மன்) வலிமைமிக்கவர்களாகவும், தீய சக்திகளை அழிப்பவர்களாகவும் போற்றப்பட்டு, பெண்ணின் ஆதி சக்தி கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்தத் தெய்வங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கான வழிபாட்டு முறைகள் மற்றும் எல்லைகள் கடுமையாக வரையறுக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ஆண் பூசாரிகளே தெய்வங்களை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். இது, பெண் தெய்வம் சக்தியின் வடிவமாக இருந்தாலும், அவளைக் கட்டுப்படுத்தவும், வழிபாட்டின் அதிகாரத்தைக் கையாளவும் ஆண் தேவைப்படுகிறான் என்ற ஆணாதிக்கக் கருத்தை மீண்டும் நிலைநிறுத்துகிறது. இராமாயண, மகாபாரதக் கதைகளுக்கு அப்பாற்பட்டுப் புராணங்களில், பெண் என்பவள் ஆதிசக்தி (காளி, துர்கை, இலட்சுமி, சரஸ்வதி) என்ற உயர்ந்த நிலையில் போற்றப்படுகிறாள். ‘சக்தி இல்லையேல் சிவன் இல்லை” என்ற தத்துவம், பெண்ணின் ஆற்றலை உலகத்தின் மூலமாக நிலைநிறுத்துகிறது. இந்த உயரிய நிலை ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஒரு முரண்பாடு நிலவுகிறது. அதாவது, பெண் ஒருபுறம் தெய்வமாக, மாரியம்மனாக, பூமாதேவியாக வழிபடப்பட்டாலும், அன்றாட வாழ்வில், குடும்ப அமைப்பில் அவள் கட்டுப்பாடுகளுக்குள் அடங்கிப்போக வேண்டியவளாகவும், இரண்டாம் தரப் பிரஜையாகவும் நடத்தப்படுகிறாள். ஆணாதிக்கச் சமூகம், ‘சக்தி” என்ற தத்துவத்தை ஆலய வழிபாட்டுக்குள் மட்டுமே சிறைப்படுத்துகிறது. அந்தச் சக்திக்குச் சொந்தமான முடிவெடுக்கும் உரிமை, தலைமைப் பொறுப்பு, சொத்துரிமை போன்ற உண்மையான அதிகாரங்களைப் பெண்களுக்குக் கொடுக்கத் தயங்குவது, ஆணாதிக்கச் சமூகம் தனக்குச் சாதகமான அம்சங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, பெண்ணின் உண்மையான அதிகாரத்தை மறுத்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. பொது இடங்களில், உலகளாவிய அளவில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலையே நீடிக்கிறது. பாலியல் துன்புறுத்தல், கேலி, பின்தொடர்தல் போன்ற அச்சுறுத்தல்கள், பெண்களின் நடமாடும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றன. சமூகத்தில் ஒரு குற்றம் நடந்தால், “பெண்கள் இரவு நேரத்தில் வெளியில் போகக்கூடாது” அல்லது “அவர்களது உடை நாகரிகமாக இருக்க வேண்டும்” என்ற அறிவுரைகளே பெரும்பாலும் வழங்கப்படுகின்றன. இது, பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய சமூக அமைப்பின் தோல்வியை மறைத்து, பெண்களின் உரிமைகளையும் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்வி மற்றும் விழிப்புணர்வு அதிகரித்திருந்தாலும், வேலைவாய்ப்பு மற்றும் தலைமைப் பதவிகளில் ஆணாதிக்கம் நுட்பமான வடிவங்களில் நீடிக்கிறது. பாலின ஊதிய இடைவெளி மூலம், ஒரே வேலையைச் செய்தாலும் ஆண்களுக்குச் சமமான ஊதியம் பெண்களுக்குப் பல துறைகளில் மறுக்கப்பட்டு, பெண்ணின் உழைப்புக்குரிய மதிப்பை ஆணாதிக்கச் சமூகம் குறைந்தே மதிப்பிடுகிறது. பணியிடங்களில் கர்ப்பகாலம் மற்றும் தாய்மை போன்ற காரணங்களுக்காகப் பெண்களுக்குப் பதவி உயர்வுகள் மறுக்கப்படுவதும், வேலை இழப்புக்கு ஆளாவதும் தொடர்கிறது. மேலும், பெண்கள் கல்வி மற்றும் தொழில் நுட்பத்தில் ஆண்களுக்குச் சமமான திறமைகளைப் பெற்றிருந்தாலும், தலைமைப் பதவிகள், அரசியல் பதவிகள் மற்றும் உயர்மட்ட முடிவெடுக்கும் குழுக்களில் அவர்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. இந்த ‘கண்ணாடிக் கூரை’ என்பது, கண்ணுக்குத் தெரியாத ஆணாதிக்கத் தடைகள் பெண்களை உயர் பதவிகளை அடையவிடாமல் தடுப்பதைக் குறிக்கிறது. இறுதியாக, நவீன காலத்திலும், பல மத மற்றும் கலாச்சாரச் சடங்குகளில், பெண்களுக்குப் பிரத்தியேகத் தடைகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட கோவில்களுக்குள் செல்ல அனுமதி மறுப்பது, மாதவிடாய் காலங்களில் விலக்கி வைப்பது போன்ற சடங்குகள் பெண்களை ‘தீட்டு” அல்லது ‘தூய்மையற்றவர்கள்” என்ற ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது. இவை, பெண்ணின் இயற்கையான உடல் செயல்பாடுகளை இழிவுபடுத்தி, அவளது சமத்துவ உணர்வைப் பாதிக்கின்றன. பெண்ணுக்குள்ளே இருக்கும் ஆணாதிக்கம் என்பது மிகவும் துயரமான விடயமாகும். உண்மை என்னவென்றால், ஆணாதிக்கச் சிந்தனைப் போக்கு ஆண்களால் மட்டுமல்லாமல், பெண்களாலும் தீவிரமாகப் பேணப்படுகிறது. இந்தக் கருத்தியல், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு, பெண்களின் மனதில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. “ஆண்களை எதிர்த்துப் பேசாதே,” “குடும்ப விஷயத்தைப் பொதுவில் சொல்லாதே,” “பெண்ணுக்கு அடக்கம்தான் அழகு” போன்ற அறிவுரைகள் பெரும்பாலும் குடும்பத்தின் மூத்த பெண்களிடமிருந்தே வருகின்றன. ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் அனுபவித்த பல நூற்றாண்டுகால ஒடுக்குமுறையானது, அவர்களுக்குள் ஒருவகையான ‘உளவியல் அடிமைத்தனத்தை’ உருவாக்கிவிடுகிறது. இந்தச் சமூக அமைப்பை எதிர்ப்பதைவிட, அதற்கு உட்பட்டு வாழ்வதே தங்கள் இருப்புக்கு ஒரு பாதுகாப்பையும், குறைந்தபட்ச அதிகாரத்தையும் உறுதி செய்யும் என அவர்கள் நம்புகிறார்கள். இந்த ‘உள்வாங்கப்பட்ட ஆணாதிக்கம்’ சமத்துவத்திற்கான போராட்டத்திற்கு மிகப் பெரிய தடையாக அமைகிறது. ஒரு பெண் தன்னுடைய மகள் அல்லது மருமகளைக் கட்டுப்படுத்தும்போதும், அவளது சுதந்திரத்தைக் கேள்வி கேட்கும்போதும், அவள் ஆணாதிக்கச் சங்கிலியின் ஒரு கண்ணியாகவே செயல்படுகிறாள். அவள் ஆணை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, ஆணாதிக்க அமைப்பின் விதிகளை ஏற்றுக்கொண்டு, அதே விதிகளைப் பிற பெண்களின் மீது திணிக்கிறாள். இது ஒரு சுழற்சிமுறை அடிமைத்தனமாகத் தொடர்கிறது. பெண், தான் அனுபவித்த வலியை மற்ற பெண்களுக்கும் கடத்துவதன் மூலம், ஆணாதிக்க அமைப்பு எந்தவித எதிர்ப்புமில்லாமல் நிலைத்து நிற்கிறது. இதிகாசங்களில் கட்டமைக்கப்பட்ட ‘இலட்சியப் பெண்மை’ என்னும் விம்பம், பல நூற்றாண்டுகளாகச் சமூகத்தில் பெண்களின் மீதான எதிர்பார்ப்புகளையும் கட்டுப்பாடுகளையும் நியாயப்படுத்தப் பயன்பட்டு வருகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் இன்றுவரை சங்கிலித் தொடர் போலப் பெண்களைச் சுற்றிப் பிணைக்கின்றன. உதாரணமாக, சமகாலச் சீதைகளும், அக்கினிப் பிரவேசங்களும் இன்று வடிவம் மாறியுள்ளன. வரதட்சணைக் கொடுமையால் மற்றும் சந்தேகத்தின் பேரில் தீவைத்து எரிக்கப்படும் பெண்களாகவோ, அல்லது கணவனின் குடும்பத்தின் ‘கௌரவச்’ சடங்காக இது வெளிப்படலாம். மேலும், கற்பின் மீதான அழுத்தமும், சமூகப் பழியும் தொடர்ந்து பெண்களைப் பாதிக்கின்றன. ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால், அவளது கற்பு சூறையாடப்பட்டதாகவே சமூகம் கருதுகிறது. பாதிக்கப்பட்டவள் குற்றவாளியாகக் கருதப்பட்டு, மறுபடியும் சமூகம் அல்லது குடும்பத்தால் நிராகரிக்கப்படுகிறாள். இது, சீதை இராமனால் புறக்கணிக்கப்பட்டதன் நவீன வடிவமே. ‘அடக்க ஒடுக்கம்’, ‘அமைதி’, ‘பொறுமை’ போன்றவை பெண்மைக்கான இலக்கணங்களாகக் கற்பிக்கப்படுவதால், மௌனமே இலக்கணமாகப் பெண்ணுக்கு அமைகிறது. இதனால், பெண் தனக்கு ஏற்படும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்குகிறாள். குடும்பத்தில், பணியிடத்தில், பொதுவெளியில் தான் அடையும் துன்பங்களைக் கணவனுக்கோ, தந்தைக்கோ, காவல்துறைக்கோ சொல்லாமல், எல்லாவற்றையும் ‘பொறுத்துக்’ கொள்ளப் பணிக்கப்படுகிறாள். இதேபோல், வீட்டிற்குள் திரௌபதியாக அவமானப்படுத்தப்படுவது இன்று தொடர்கிறது. திரௌபதி பொதுச் சபையில் அவமானப்படுத்தப்பட்டது, இன்று வீட்டின் நான்கு சுவர்களுக்குள் நடக்கிறது. அன்று அங்கே அவளுக்கு அநீதி நிகழ்ந்ததைப் பார்த்து அரசு மற்றும் நீதித்துறை எவ்வாறு மௌனித்த நிலையில் வேடிக்கை பார்த்ததோ, அந்நிலை இன்றும் நீள்கிறது. பொருளாதாரச் சார்புநிலை காரணமாக, பெரும்பாலான குடும்பங்களில் பெண்ணுக்குச் சொந்தமாகச் சொத்துரிமை மறுக்கப்படுவது அல்லது அவளது உழைப்புக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்காதது அவளைப் பொருளாதார ரீதியாக ஆணைச் சார்ந்து இருக்க வைக்கிறது. இது, அவளை முடிவெடுக்கும் அதிகாரமற்ற ஒரு ‘சொத்தாகவே’ வைக்கிறது. இன்று, உலகில் பெரும்பாலான பெண்கள் குடும்ப வன்முறையை அனுபவிக்கிறார்கள். கணவனால், அல்லது புகுந்த வீட்டாரால் அவர்கள் துன்புறுத்தப்படும்போது, சமூகத்தின் பழிகள், “நான்கு பேர் என்ன சொல்வார்கள்?”, “குடும்பக் கௌரவம்” போன்ற திரௌபதியின் சபைக் கேள்விகள் அவர்களை மௌனமாக இருக்கத் தூண்டுகின்றன. விவாகரத்து கேட்பது என்பது சமூகத்தின் பார்வையில் ஒரு ‘தோல்வி’ என்று கருதப்படுவது, பெண்களை மீண்டும் வன்முறைக் கூடாரத்திற்குள் அடைக்கிறது. சங்கிலிகளை உடைக்கும் பயணத்தில் பெண்ணாக ஆண் எனும் சமூகத்தில் வாழ்வது என்பது, ஒருபுறம் இராமாயணத்தின் சீதை மீது இதிகாசங்கள் விதித்த தியாகச் சுமையையும், மகாபாரதத்தின் திரௌபதி மீது சுமத்தப்பட்ட பொது அவமானத்தையும், மறுபுறம் சமகாலச் சமூகத்தின் ஊதியப் பாகுபாடுகள் மற்றும் பொதுவெளிக் கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்வது ஆகும். இத்தகைய போராட்டங்கள், இன்று ஒரு நிறுவனத்தில் தலைமைப் பதவிக்காகப் போராடும் பெண்ணாகட்டும் அல்லது வீட்டிற்குள்ளே முடிவெடுக்கும் உரிமைக்காகக் குரல் கொடுப்பவளாகட்டும், அவர்கள் எதிர்த்து நிற்பது ஆணாதிக்கத்தின் பல்வேறு வடிவங்களையே. உண்மையான சமத்துவம் என்பது சட்டங்களை இயற்றுவது மட்டுமல்ல; பெண்களுக்குச் சொத்துரிமை, சம ஊதியம் மற்றும் பாதுகாப்பு வழங்கும் சட்டங்கள் ஒரு கருவியே தவிர, அது ஆழமாக வேரூன்றியுள்ள சமூக மனப்பான்மையைக் களைவதே நிரந்தரத் தீர்வாகும். ஆணாதிக்கச் சமுதாயம் என்பது வெறும் ஆண்களால் மட்டும் ஆனது அல்ல. அது ஆண்களால் உருவாக்கப்பட்டு, சுமக்கப்பட்டு, பின் பெண்கள் மீது சுமத்தி சுமக்கப்படும் ஒரு கருத்தியல். இந்த அடிமைத்தனத்தை முற்றிலும் நீக்க, பெண்கள் தங்களின் உரிமைகளைத் துணிச்சலுடன் வலியுறுத்துவதும், தங்கள் மனதில் குடிகொண்டிருக்கும் ஆணாதிக்கச் சிந்தனைகளைக் களைவதும் அவசியம். அதே சமயம், ஆண்களும் இந்தச் சமத்துவப் போராட்டத்தை ஒரு மனிதாபிமானக் கடமையாக ஏற்றுக்கொண்டு, பெண்கள் மீதான அடிமைத்தனத்தின் தடைகளை உடைக்க உதவ வேண்டும். உண்மையான விடுதலையும் விடியலும், ஆண், பெண் என்ற இருபாலாரும் ஒருவருக்கொருவர் சமமான மதிப்பையும், உரிமைகளையும், அதிகாரப் பகிர்வையும் முழுமையாகக் கொடுக்கும் நாளில் மட்டுமே சாத்தியமாகும்…” இராசகுமார் வினோதன் கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

Related Posts

📈 அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம்: இந்தியப் பங்குச் சந்தை 5% உயர்ந்து சாதனை! – Global Tamil News

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எட்டப்பட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தை இன்று 5% வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் (Sensex) மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீடான…

Read more

ஈரான் ட்ரோனை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது! – Global Tamil News

ஈரான் ட்ரோனை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது! by admin February 4, 2026 written by admin February 4, 2026 அரேபியக் கடலில் அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பலுக்கு அருகில் பறந்ததாக கூறப்படும் ஈரான் ட்ரோனை அமெரிக்க…

Read more

சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம்

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை என தெரிவித்து, இந்த நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்தது….

Read more

49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

 78-வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள 49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34-வது பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் இந்த விசேடபொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்…

Read more

🇮🇳 பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் ஒட்டிய பிரித்தானிய தம்பதி  –  வெளியேறுமாறு உத்திரவு! – Global Tamil News

ராஜஸ்தானின் புஷ்கர் (அஜ்மீர் மாவட்டம்) பகுதியில் பாலஸ்தீன ஆதரவு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியதற்காக பிரித்தானிய தம்பதியினரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் இந்தியா சென்றிருந்த இந்தத் தம்பதியினர், புஷ்கர் நகரின் பல்வேறு பொது இடங்களில் இஸ்ரேல்-பாலஸ்தீன…

Read more

🏴    78-வது சுதந்திர தினத்தில் எதிர்ப்பு –  யாழ். பல்கலையில் கறுப்புக் கொடி: – Global Tamil News

இலங்கையின் 78-வது சுதந்திர தினமான இன்று (பெப்ரவரி 4, 2026, புதன்கிழமை), தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள்…

Read more