மன்னார் நகர சபை எல்லைக்குள் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி (MOH) மற்றும் நகரசபை சுகாதாரப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, நீண்டகாலமாக இயங்கி வந்த ஒரு வெதுப்பகத்தில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற முறையிலான செயல்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. குறித்த வெதுப்பகம் எவ்வித சட்டரீதியான அனுமதியும் (License) இன்றி இயங்கி வந்துள்ளதுடன் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் எவரிடமும் முறையான மருத்துவ தகுதிச் சான்றிதழ் இல்லை. மேலும் வெதுப்பகத்திற்குள் எலிகளின் நடமாட்டம் அதிகளவில் இருந்தமை, பழுதடைந்த பாண் துண்டுகள் மற்றும் ஏனைய உணவுப் பொருட்கள் மீளப் பயன்பாட்டிற்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை சுகாதாரமற்ற முறையில் பாண் மற்றும் ஏனைய சிற்றுண்டிகள் தயாரிக்கப்பட்டமை கண்டறியப்பட்டன. இதனையடுத்து வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் தலைமையிலான குழுவினர், குறித்த வெதுப்பகத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். மேலும், மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இவ்வாறான இடங்கள் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்புகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். Tag Words: #MannarHealth #FoodSafety #BakeryRaid #PublicHealthLKA #MannarMOH #HygieneAlert #LKA #ConsumerProtection #BreakingNewsMannar