
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் உள்ளக முரண்பாடு உச்சம் பெற்றுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை புதிய நாடாளுமன்ற குழுத் தலைவராக நியமித்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் அணி அறிவித்துள்ளது.கட்சியின் கொள்கைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான உள் முரண்பாடுகளைத் தொடர்ந்து, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியிருப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன் அணி தெரிவித்துள்ளது.முன்னதாக அரசியலமைப்பு சபையிலிருந்து சிவஞானம் சிறீதரன் விலக மறுத்திருந்த நிலையில் அத்தகைய முடிவையெடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியலமைப்பு சபையிலிருந்து இராணுவ அதிகாரிகளை பதவிக்கமர்த்தும் நடவடிக்கைகளிற்கு ஆதரவளித்திருந்தமை, கட்சியின் நீண்டகால நிலைப்பாடுகளுக்கும் தமிழ் வாக்காளர்களின் உணர்வுகளுக்கும் முரணானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியிலிருந்து விலக மறுத்ததைத் தொடர்ந்து ஒழுக்காற்று நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் அத்தகைய அறிவிப்புக்கள் தொடர்பில் சிவஞானம் சிறீதரன் இதுவரை கருத்து எதையும் தெரிவித்திருக்கவில்லை.