சரியான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த நாட்டிற்கு அவசியமானவை என்றும், அது அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சர்வஜன பலயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.பதவிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே திலித் ஜயவீர இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.”நவீன கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் என்று நாம் கூறத் தொடங்கி இருபது வருடங்களாகிவிட்டன. இப்போது சீர்திருத்தங்கள் அவசியம். ஆனால் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டுள்ள முதலாவது அரிச்சுவடிப் புத்தகத்தில் பாட்டனுக்கு பாட்டி என்றும் பாட்டிக்கு பாட்டன் என்றும் போடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தவறுகளே உள்ளன. அரசாங்கம் கொண்டுவரும் விடயத்திற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் என்று… சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் என்று யாராவது சொன்னால்… அது மிகப்பெரிய முட்டாள்தனமான கதையாகும்.இதில் ஒரு ‘சிறப்பான’ புத்தகம் உள்ளது. ஆறாம் வகுப்புக்காகத் தயாரிக்கப்பட்டு புத்தகத்தில் உலகப் புகழ் பெற்ற தொழில் முயற்சியாளர்களின் பெயர்கள் உள்ளன. முதலாமவர் – ஏ.டி. ஆரியரத்ன. ஏ.டி. ஆரியரத்ன தொழில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், உலகத்தில் யார் நினைக்கிறார்கள்? இலங்கையில் யார் நினைக்கிறார்கள்? உபாலி விஜேவர்தன வாழ்ந்த நாடு இது. அடுத்ததாக எமது சித்தாலோப முதலாளியைப் போட்டுள்ளார்கள். உலகப் புகழ் பெற்ற இரண்டாவது தொழில் முயற்சியாளர் ஹெட்டிகொட அவர்களாம். மூன்றாவது இடத்தில், சிறிய கடையொன்றை நடத்திச் செல்லும் அச்சலா என்ற எனக்குத் தெரிந்த தங்கையொருவரின் பெயரைப் போட்டுள்ளார்கள். அவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கேட்டபோது, தனது பெயர் ஏன் போடப்பட்டுள்ளது என்று அவருக்கே தெரியவில்லை.அடுத்ததாக பில் கேட்ஸ் உள்ளார், அதன் பிறகு வாரன் பஃபெட் உள்ளார். அதன் பிறகு எலான் மஸ்க். இவர்களுக்கு இடையில்தான் ஹெட்டிகொடவின் பெயரும், ஆரியரத்னவின் பெயரும் உள்ளது. இவர்களுக்குப் பைத்தியமா? உலகப் புகழ் பெற்ற தொழில் முயற்சியாளர்கள் என்று சொல்வதற்கு இந்த நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? உலகையே அதிரவைத்த தொழில் முயற்சியாளர்கள். இப்போதும் அதிரவைக்கும் வர்த்தக நாமங்கள் எத்தனை உள்ளன? இந்தப் பக்கத்தை வாசித்த எந்தவொரு சிறுபிள்ளையும் வாழ்க்கையில் தொழில் முயற்சியான்மையைக் கற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்தத் தொகுதிகளில் என்ன இருக்கிறது என்று நீங்களே சும்மா வாசித்துப் பாருங்கள்.ஆகவே இதனைச் சீர்திருத்துங்கள் என்றே நாம் சொல்கிறோம். நாங்களும் ஒத்துழைப்பு வழங்குகிறோம். நாங்கள் யோசனைகளை முன்வைக்கிறோம். முன்னோடித் திட்டமொன்றை ஆரம்பித்து, பெற்றோரின் கருத்துக்களைப் பெற்று, பிள்ளைகளின் கருத்துக்களைப் பெற்று, ஆசிரியர்களின் கருத்துக்களைப் பெற்று, கல்வி நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்று இதனைச் செய்வோம் என்றே சொல்கிறோம். வேண்டாம் என்று சொல்லவில்லை.”