
யாழ்ப்பாணம் நயினாதீவு – நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கு காணொளி ஆதாரங்களுடன் முறையிடப்பட்டுள்ளது. நயினாதீவு கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளை , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்களின் படகொன்று அப்பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களை தமது கடற்பரப்பினுள் இருந்து வெளியேறுமாறு நயினாதீவு கடற்தொழிலாளர்கள் அறிவுறுத்தியும் , அதனையும் மீறியும் தொழிலில் ஈடுபட்டனர். அவர்களின் படகுக்கு அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீது கல் வீச்சு தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். அதனை அடுத்து கைத்தொலைபேசியில் “வீடியோ கோல்” ஊடாக இந்திய துணைத்தூதராக அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்ட , கடற்தொழிலாளர் ஒருவர் , நேரடியாக இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை காண்பித்துள்ளார். அதன் போது படகின் இலக்கத்தினை தூதரக அதிகாரி வினாவிய வேளை , படகின் இலக்கம் அழிக்கப்பட்டிருந்ததனை அவதானித்துள்ளனர். பின்னர் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் காணொளி ஆதாரங்களுடன் முறைப்பாடு ஒன்றினை தூதரக அதிகாரிக்கு நயினாதீவு கடற்தொழிலார்கள் அனுப்பி வைத்துள்ளனர்.