ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) இரண்டாவது நாளாகவும் கலந்து கொண்டார்.7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தங்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 7 நாட்களைப் பூர்த்தி செய்கிறது.அவ்விடத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர், அக்குழுவினரின் சுகதுக்கங்களை விசாரித்ததுடன், பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு கூறினார்:“எனதும், ஐக்கிய மக்கள் சக்தியினதும், ஐக்கிய மக்கள் கூட்டணியினதும், அதேபோன்று கட்சி பேதமின்றி அனைவரினதும் உச்சபட்ச ஆதரவை இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதற்காகவே நான் இன்றும் இங்கு வந்தேன்.5 முதல் 10 வருடங்கள் பிள்ளைகளுக்குக் கற்பித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர் சேவையில் இணைய உரிமையில்லையா? ஏன் அவர்களுக்கு ஆசிரியர் சேவையில் இணையத் தடை விதிக்கப்பட்டுள்ளது? மிகவும் தெளிவான தீர்வொன்று உள்ளது.அரசாங்கத்திற்கும் இந்தத் தீர்வு தெரியும். ஆனால், தற்போதைக்கு அரசாங்கம் உறுதியளித்ததை நிறைவேற்றாமல் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது.ஏன் இவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார்கள்? அரசாங்கம் பொய் சொன்னதால்தானே… இந்த ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாம் எப்போதும் இவர்களுடன் இருப்போம்.”