இலங்கையில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான உத்தியோகபூர்வ முன்மொழிவு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவரும், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான இனோகா ரணசிங்க, இதற்கான சட்ட ஏற்பாடுகளைத் தயாரிப்பதற்குச் சற்று கால அவகாசம் எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். இந்தத் தடையை நடைமுறைப்படுத்த நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், ஆரம்ப கால சிறுவர் அபிவிருத்திக்கான தேசிய செயலகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகிய மூன்று நிறுவனங்களின் ஆலோசனைகள் அவசியமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் நாமால் சுதர்சன, இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன என்றார். இலங்கை சமூக மருத்துவ நிபுணர்கள் கல்லூரி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, கட்டுப்பாடற்ற சமூக வலைத்தள பயன்பாடு சிறுவர்களின் உடல் மற்றும் மன நலனைப் பாதிப்பதாகத் தெரிவித்துள்ளது. மன அழுத்தம், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் உடல் தோற்றம் குறித்த அதிருப்தி. இணையவழி துன்புறுத்தல், வன்முறை மற்றும் தவறான உள்ளடக்கங்களை எதிர்கொள்ளுதல். 8-12 வயதுடைய சிறுவர்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 5 மணிநேரமும், இளைஞர்கள் 7 மணிநேரமும் திரைகளுக்கு முன்னால் செலவிடுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் நன்மைகளைத் தடுப்பது இதன் நோக்கமல்ல. மாறாக, சிறுவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உகந்த பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இதன் இலக்கு என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்காக வலுவான வயது சரிபார்ப்பு முறைகள் (Age verification) மற்றும் தரவு பாதுகாப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.