மாவத்தகம – கஹபத்வல, கெபிலிதிகொட புராண ரஜமஹா விகாரையின் தேரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 28ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக மாவத்தகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.அன்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு நான்கு பேர், விகாரைக்கு சென்று, விசாரணைக்குத் தேவை என கூறி, தேரர்களிடமிருந்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒன்றறை அடி உயர தங்க புத்தர் சிலையை எடுத்துச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்று 31 ஆம் திகதி சம்பவத்துடன் தொடர்புடைய 14 சந்தேகநபர்களை மாவத்தகம பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பயன்படுத்தப்பட்ட இரண்டு வேன் ரக வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் மினீகமுவ, தெல்தெனிய, மொனராகலை, மத்துகம, மாத்தளை மற்றும் ரிதீகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் 22 முதல் 56 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.சந்தேகநபர்கள் நேற்று 31ஆம் திகதி பிலஸ்ஸ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.