
இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ள மாபெரும் கரிநாள் போராட்டங்களில் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார்.யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.மேலும் தெரிவித்ததாவது:-“இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு, கிழக்கில் மாபெரும் கரிநாள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.பல்கலைக்கழக மாணவர்களும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் இணைந்து முன்னெடுக்கும் இந்தப் போராட்டங்கள் தொடர்பாக மாணவர்கள் எம்மைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ள இந்தப் போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவை நாம் வழங்குவதாகத் தெரிவித்துள்ளோம்.மேலும், மட்டக்களப்பிலும் கிளிநொச்சியிலும் மட்டுமல்லாது, தமிழர் தாயகம் எங்கும் அன்றைய நாளை கரிநாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தோம்.எனவே, மக்கள் அனைவரும் மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சிக்கு அணிதிரண்டு சென்று கரிநாள் போராட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.தமிழின இருப்பை அழிக்கும் ஒற்றையாட்சி முறைமையை அடியோடு நிராகரித்து, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டித் தீர்வை எட்டும் வரையில் கரிநாள் என்ற செய்தியை நிரூபிக்கும் வகையில் அனைவரும் ஒத்துழைப்பை வழங்கி ஒன்றுதிரள வேண்டியது அவசியமாகும்.இந்த அரசு தமிழ் மக்களுக்கு நல்லதைச் செய்வதாகக் கூறிக்கொண்டாலும், தொடர்ச்சியாக இனவாத ரீதியில் தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக, தமிழ் மக்கள் தொடர்பில் கடந்த கால அரசுகள் எவ்வாறு செயற்பட்டனவோ, அதேபோன்று இன்றைய அரசும் செயற்பட்டு வருகின்றது.” – என்றார்.