தித்வா மீள் கட்டுமானத்தில், மலையக பெருந்தோட்ட மக்கள் மீது இன ஒதுக்கல் காட்ட படுகிறது!தித்வா பேரழிவுக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களில், மலையக பெருந்தோட்ட சமூகத்தை, இன்றைய அரசாங்கம் ஒதுக்கி வைத்துள்ளது. இது திட்டமிட்ட இன ஒதுக்கல். எமது மக்கள் மீது பொறுப்பு ஐநா சபைக்கு இருக்கிறது. ஆகவே எங்கள் இந்த குற்றசாட்டை ஐநா சபை விசேட கவனத்தில் எடுக்க வேண்டும்.இலங்கை அரசாங்கத்தின், இடர் நிவாரண நிலையத்தின் மீள் கட்டுமான (Rebuilding Sri Lanka), திட்டங்களின் கீழ், தித்வா பேரழிவில் பாதிப்புக்கு உள்ளான மலையக பெருந்தோட்ட மக்களுக்கு இடமில்லை. அவர்களை நாம் இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ்தான் வைத்துள்ளோம் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்-நாயகம் பகிரங்கமாக இலங்கையின் ஒரு முன்னணி ஊடகத்துக்கு கூறியுள்ளார்.இடர் நிவாரண நிலையத்தின் மீள் கட்டுமான (Rebuilding Sri Lanka), வீடமைப்பு திட்டத்தில், ஒவ்வொரு வீடும் அதிகபட்சமாக ரூபா. 50 இலட்சத்தில் வீடுகள் கட்டப்படும்; உரிய காணிகள் இல்லாதோருக்கு காணிகள் வழங்கப்படும்; என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்த திட்டத்தை அனுராதபுரத்தில் ஆரம்பித்து வைக்கும் போது, அறிவித்தார். அதேவேளை இந்த திட்டத்தில், மலையக தமிழ் மக்களுக்கு இடமில்லை, என ஜனாதிபதியால் விசேடமாக, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்-நாயகமாக நியமிக்க பட்டுள்ள பிரபாத் சந்திரகீர்த்தி கூறுகிறார்.மலையக தமிழர்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லையா? அவர்கள் என்ன, இந்திய பிரஜைகளா? இலங்கையின் ஏனைய மக்களுக்கு, இடர் நிவாரண நிலையத்தின் மீள் கட்டுமானத்தில் வழங்கப்படும், உரிமைகள், கொடுப்பனவுகள் என்ற அரசாங்க கவனிப்புகள், ஏன் எமது மக்களுக்கு வழங்க படமுடியாது? ஆகவே இது எமது மக்களை மாற்றான் தாய் பிள்ளைகள் போன்று, இரண்டாம் தர பிரஜைகள் போன்று, நடத்த படும் இன ஒதுக்கல் இல்லையா? இதை கவனத்தில் எடுங்கள் என இலங்கையில் உள்ள ஐநா வதிவிட பிரதிநிதி ஒருங்கிணைப்பாளர் மார்க் அந்ரே பிரான்சேவை சந்தித்து, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள ஐநா அலுவலகத்தில், ஐநா வதிவிட பிரதிநிதி ஒருங்கிணைப்பாளர் மார்க் அந்ரே பிரான்சேக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் சந்திப்பு நிகழ்ந்தது. இதன் போது, ஜனநாயக மக்கள் முன்னணியின், சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான இணை தலைவரும், தமுகூ அரசியல் குழு உறுப்பினருமான பாரத் அருள்சாமியும் கலந்து கொண்டார். இந்த சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன், தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது;இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட வேண்டிய ரூ50 இலட்ச வீடமைப்பு நிதியுதவியும், காணி ஒதுக்கீடும், பெருந்தோட்ட சமூகத்திற்கு மறுக்கப்பட்டுவருகிறது. இது கவனயீனம் அல்ல. இது திட்டமிட்ட பாகுபாடு ஆகும். மலையக தமிழர்கள் மீது காட்டப்படும் இந்த “அபார்தெய்ட்” என்ற இன ஒதுக்கல் முடிவுக்கு வரவேண்டும்.தித்வா பேரழிவுக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களில் எங்கள் சமூகத்தை விலக்கி வைக்கும் நிலையை விளக்குவதற்காக ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அந்ரே பிரான்சேஇடம் நாம் தெரிவித்த எங்களது அவசர நிலைப்பாடுகள்:1️⃣ தித்வா பேரழிவால் இடம்பெயர்ந்த அனைத்து மலையகக் குடும்பங்களும், தேசிய பேரிடர் முகாமைத்துவ மையத்தின் கீழ் செயல்படும் ஜனாதிபதியின் ரூபா. 50 இலட்ச வீடமைப்பு, மற்றும் காணி வழங்கல் திட்டத்தில் உள்வாங்க பட வேண்டும். பெருந்தோட்ட காணிகளின் உரிமையாளர் அரசாங்கமாகும். அங்கே பெருந்தோட்ட நிறுவனங்கள் நீண்டகால குத்தகைக்கே காணி நிலத்தை பயன் படுத்துகின்றன. ஆகவே பெருந்தோட்டங்களில் பாதுகாப்பான காணிகளை, அடையாளம் கண்டு, அவற்றை மலையக மக்களுக்கு பிரித்து கொடுக்க, அரசாங்கத்துக்கு சட்டப்படி அதிகாரம் உண்டு. காணிகளை தந்து, வீடமைத்து தந்து, பாதிக்க பட்ட மலையக மக்களுக்கும், நாட்டின் ஏனைய மக்களுக்கு சமானமான அந்தஸ்த்தை தரும் கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு உண்டு. இதில் சட்ட தடைகள் எதுவும் இல்லை. அவசரச் சட்டங்கள் நிலம் கைப்பற்ற அனுமதிக்கின்றன. தோட்ட நிலங்கள் அரசின் நிலங்களே. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் நிரந்தரத் தீர்வுகள் உள்ளது.2️⃣ ரூபா. 27 இலட்ச பெறுமதியான, இந்திய அரசின் உதவி வீடமைப்பு திட்டம் தனியாகவே தொடர வேண்டும். இலங்கை பிரஜைகளான மலையக தமிழர்களுக்கான இலங்கை அரசின் பொறுப்புக்கு மாற்றாக, இந்திய அரசின் உதவி வீடமைப்பு திட்டம் அமைய முடியாது. தித்வா வீடமைப்பு திட்டம் என்பது, இலங்கை அரசின் இடர் நிவாரண விசேட அவசர திட்டமாகும். இந்திய அரசின் உதவி வீடமைப்பு திட்டம், பேரழிவு நிகழாத பிரதேசங்களில், வழமை போல், பெருந்தோட்ட தனி வீட்டு திட்டமாக தொடர வேண்டும். இலங்கையில் உள்ள இந்திய தூதரகமும் எமது நிலைப்பாட்டுக்கு சமானமான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. 3️⃣ நில உரிமை, நிலத்துடன் கொண்டுள்ள சமூக பிணைப்பு, மற்றும் பாதுகாப்பு காரணங்களால், பெருந்தோட்டங்களில் தொடர்மாடி குடியிருப்புகளை கட்டி, நமது மக்களுக்கு வழங்கும் அரசாங்க யோசனையை நாம் ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டோம். மலையக மக்களை ஒதுக்கி வைக்கும் கொள்கை “அபார்தைட்” (Apartheid) என்ற இன ஒதுக்கல் ஆகும். தித்வா மீள்கட்டமைப்பு, பாதிக்க பட்ட இலங்கை மக்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதற்காகவே உலக நாடுகள், மற்றும் இலங்கையின் உலகளாவிய அபிவிருத்தி பங்காளிகள், மற்றும் ஐநா ஆகியவை இலங்கை அரசாங்கத்துக்கு உதவுகின்றன. ஆகவே இலங்கை அரசின் மலையக மக்களை ஒதுக்கி வைக்கும் இந்த கொள்கையை, ஐநா தலையிட்டு உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.