இலங்கையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பின்றி முன்னெடுப்பதற்காக, மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட மிக முக்கியமான துறைகளை அத்தியாவசிய சேவைகளாகப் (Essential Services) பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்புச் சட்டத்தின் (Public Security Ordinance) கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எரிவாயு (LP Gas) விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு, வைத்தியசாலைகள், மருந்தகங்கள் (Nursing homes/Dispensaries) மற்றும் நோயாளிகளின் பராமரிப்பு தொடர்பான அனைத்து சேவைகள், பயணிகள் அல்லது சரக்கு போக்குவரத்துக்கான அனைத்து சேவைகள், புகையிரத போக்குவரத்து மற்றும் வீதிப் போக்குவரத்து சேவைகள்மற்றும் துறைமுகச் சேவைகள் மற்றும் உணவு விநியோகம் தொடர்பான அத்தியாவசிய நடவடிக்கைகள் உள்ளடங்குகின்றன. இந்தச் சேவைகளை அத்தியாவசியமாக்குவதன் மூலம், இந்தத் துறைகளில் பணிபுரிபவர்கள் பணிப்புறக்கணிப்பு (Strike) செய்வதற்கோ அல்லது சேவைகளுக்குத் தடை ஏற்படுத்துவதற்கோ சட்டப்படி முடியாது. மீறினால் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. பொதுமக்களுக்குத் தடையில்லாச் சேவையை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். அத்தியாவசிய சேவைகள் தொடர்பான இந்த வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாகும். தேவைப்படின், ஒவ்வொரு மாதமும் புதிய வர்த்தமானி மூலம் இது நீடிக்கப்படலாம். அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்ட துறைகளில் பணியாற்றுவோர், பணிக்கு சமூகமளிக்கத் தவறினால் அல்லது சேவைகளுக்குத் தடை ஏற்படுத்தினால், அவர்கள் விசாரணையின்றி கைது செய்யப்படவும், பிணையின்றி விளக்கமறியலில் வைக்கப்படவும் சட்டத்தில் இடமுண்டு. அத்துடன் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்புள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குப் பல தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இது தங்களது ஜனநாயக ரீதியான போராட்ட உரிமையைப் பறிக்கும் செயல் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பள உயர்வு அல்லது சீர்திருத்தங்கள் கோரி போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி வந்த நிலையிலேயே, அரசாங்கம் இந்தத் தடையை விதித்துள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். இந்த வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்யச் சில தொழிற்சங்கங்கள் ஆலோசித்து வருகின்றன. Tag Words: #SriLankaNews #EssentialServices #GazetteNotification #Electricity #FuelSupply #Healthcare #Transport #LKA #BreakingNews2026 #GovernmentOrders