கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பரிந்துரை குறித்து தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் ஐந்தாவது முறையாக ஒருவரது பெயர் அரசியலமைப்பு சபைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று (31) கூடி இறுதி முடிவெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், உறுப்பினர்கள் அந்தப் பரிந்துரையை ஆய்வு செய்ய அவகாசம் தேவைப்பட்டதால், இறுதித் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க இது குறித்துக் கூறுகையில்: “கணக்காய்வாளர் நாயகம் பதவி தொடர்பாக அரசியலமைப்பு சபை கூடி கலந்துரையாடியது. ஜனாதிபதி புதிய பெயர் ஒன்றை அனுப்பியுள்ளார். அதனை முறையாக ஆய்வு செய்ய உறுப்பினர்களுக்குச் சற்றே கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, பாராளுமன்றம் கூடும் நாளான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3-ம் திகதி இது குறித்த இறுதி முடிவை எடுப்போம்.”