இலங்கையும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவை துறைகளை மேம்படுத்துவது கவனம் செலுத்தப்பட்டது.இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரக தூதுவர் கலீத் நாசர் அல்அமேரிக்கும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் வியாழக்கிழமை (29) அமைச்சில் நடைபெற்றது.இதன்போது, சிவில் விமான சேவைத் துறையின் தலைவர்களுக்கான சர்வதேச நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் பெப்ரவரி 03 முதல் 06 வரை துபாயில் நடைபெறவுள்ளதுடன் அந்நிகழ்வில் பங்கேற்குமாறும், பெப்ரவரி 03 துபாயில் உலக அரச உச்சி மாநாடு மையத்தில் நடைபெறவுள்ள உலகளாவிய சேவை வழங்கல் தொடர்பான வட்டமேசை கலந்துரையாடலிலும் பங்கேற்குமாறு அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கு தூதுவர் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்தார்.மேலும், கொழும்புத் துறைமுக அபிவிருத்திக்காக அபு தாபி துறைமுக நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளதாகவும், அந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யத் தயார் எனவும் குறிப்பிட்டார்.அத்துடன், இலங்கையில் காணப்படும் திறமையான விமான பொறியியல் மனித வளமும், குறைந்த செயற்பாட்டு செலவுகளும் விமான சேவை துறையை மேம்படுத்துவதற்கு சாதகமாக அமையும் எனவும், இலங்கையில் பிராந்திய விமான பராமரிப்பு மையம் ஒன்றை நிறுவுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.விமான சேவை மற்றும் துறைமுக சேவை வழங்கல் துறைகளில் நடைமுறை மற்றும் நீண்ட கால கூட்டாண்மையை உருவாக்குவதற்கு தொடர்ந்து நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.