தமிழருவி த. சண்முகசுந்தரத்தின் நூற்றாண்டு விழா ஆய்வு மாநாடு: சில பதிவுகள் – ஏபிஎம். இதிரீஸ். – Global Tamil News


மறுமலர்ச்சிப் பாதை நோக்கிய மக்கள் கலை இலக்கியப் பயணத்தில் ஆய்வாளராக, மக்களோடு இணைந்த கலை இலக்கியச் செயற்பாட்டாளராக வாழ்ந்து மறைந்த தமிழருவி த. சண்முகசுந்தரத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மூன்றாவதுகண் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்பில்  தேசிய ஆய்வு மாநாடு, பேராசிரியர் சி. ஜெய்சங்கர் தலைமையில் 24, 25 ஆகிய இரு தினங்களில் மட்டக்களப்பில் சத்துருக்கொண்டான் சர்வோதயம் பயிற்சி நிலையத்தில்  நடைபெற்றது. இருநாள் அமர்வுகளில் 12 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. தமிழருவி சண்முகசுந்தரம் நாட்டார் கலைகளை முன்னெடுப்பதிலும், மீளுருவாக்குவதிலும் மக்களோடு இணைந்து செயல்பட்டார். நவீனத்துவத்திற்கும் காலனியத்துவத்திற்கும் மாற்றான தமிழ் அறிவு மரபை வளர்த்தெடுக்கப் பாடுபட்டார். மேற்கைரோப்பிய அதிகாரத்திற்கு எதிரான அறிவுருவாக்கம் குறித்துச் சுதந்திர காலப் பிரிவிலேயே சிந்தித்தார். ஆசியா, ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் மேற்கைரோப்பிய காலனித்துவத்திலிருந்து விடுதலை பெறுவதற்காகப் புதிய சுதேசிய அறிவிருவாக்கங்களில், சிந்தனைகளில் முனைப்புக் காட்டுவதைப் போல, நாமும் நமது உள்ளூர் அறிவு மரபை மீளுருவாக்க வேண்டும் எனச் சுதந்திர காலப் பிரிவிலேயே குரல் கொடுத்தவராக த. சண்முகசுந்தரம் திகழ்கிறார், எனப் பேராசிரியர் சி. ஜெய்சங்கர் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார். ஈழத்துக் கலை மரபின் அடையாள இருப்பு, காலனியநீக்கத்தின் முதற்படியான மீளுருவாக்கம், அதில் சண்முகசுந்தரத்தின் வகிபாகம், அவரது வாழ்வியல் பின்னணி மற்றும் சமூக ஆய்வுச் செயற்பாடு என்பவற்றின் வழியாக அவரது கருத்துகளை ஆய்வாளர் சி. ரமேஷ் முன்வைத்தார். கலைகளைக் காலனியநீக்கம் செய்தல் என்கிற பெருந்திட்டத்தில் சண்முகசுந்தரம் எவ்வாறு கூத்தை அணுகினார் என்பதை, அவரது மிகச் சிறிய கூத்தாய்வுப் பனுவலைக் கொண்டு நுண்கலைத்துறை முதுநிலை விரிவுரையாளர் திரு சு.சந்திரகுமார் நுண்ணாய்வுக்கு உட்படுத்தினார். கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர் து. கௌரீஸ்வரன், தமிழருவியின் நாடகங்களில் ஒன்றான ‘இறுதி மூச்சில்’ இடம்பெறும் வைரவன் பாத்திர உருவாக்கம், இன்றைய கலைப் பண்பாட்டுச் சூழலில் வைத்துப் பார்க்கும்போது மிகுந்த முற்போக்கான பாத்திர உருவாக்கமாகவும், விளிம்புநிலை பாத்திரம் ஒன்றை மையத்திற்கு சமாந்தரமாகக் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதாகவும், தனது ஆய்வுரையில் குறிப்பிட்டார். அடுத்து, இதே நாடகத்தைத் திரைப்பிரதி அணுகுமுறைக்கு உட்படுத்திய பல்லூடகப் புத்தாக்குனர் நௌபர் ஒல்லாந்தரின் கொடுமை, தமிழரின் எழுச்சி, உள்நாட்டுப் போர், இறுதித் தியாகம் என நாடகப் பிரதியின் காட்சிக் களங்களை விவரித்ததோடு; நாடகத்தின் அக்கூறுகளான பருவகால மாற்றங்கள், நிலவியல் குறியீடுகளை தெளிவாகியதோடு, எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிவித்த நாடகத் தீர்க்கதரிசி எனவும், வரலாறு திரும்புகிறது என்பதையே இதுவும் உறுதிப்படுத்துகிறது என்றும் கூறினார். அரபு மொழி இலக்கியத் திறனாய்வுகளில் ஈடுபட்டு வரும் பல்கலைக்கழக மாணவரான  ஹஸ்மத்துல்லாஹ், சண்முகசுந்தரத்தின் ஐந்து சிறுகதைகளில் உள்ள விளிம்புநிலை கதாபாத்திரங்களின் நிலவரங்களை, ஒரு சிறுகதைக்குரிய சுவாரசியத்துடன் அணுகும் தனது ஆய்வினை முன்வைத்தார். ஈழத்துச் சுற்றுச்சூழலியலாளரும் பசுமைப் பந்து செயற்பாட்டாளருமான ரியாஸ் அஹ்மட், தமிழருவி பெருந்தொகுப்பு முழுவதிலும் இடம்பெறும் உயிர்க்கோளத்தையும் உயிர்ப்பல்வகைமையையும் எடுத்துக்காட்டி ஒரு சூழலியல் திறனாய்வைச் செய்ததோடு, தமிழருவியை ஒரு சூழலியல் இலக்கியப் படைப்பாளர் எனவும் குறிப்பிட்டார். “பெண்களின் உணர்வுகளையும் கொந்தளிப்புகளையும் ஆண் எழுத்தாளர்களால் எவ்வாறு இவ்வளவு நுட்பமாகப் படைப்புக்குள் கொண்டுவர முடிகிறது?” என்கின்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு முகநூல் பதிவாளரும், ஆங்கில ஆசிரியருமான றிஹானா நௌபர், ‘மீனாட்சி’ நாவலில் வரும் பெண் பாத்திரங்களின் வார்ப்பு குறித்துத் தனது அனுபவங்களையும் ஆய்வுக் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். சோழர் காலத்தில் தொடங்கி நாயக்கர் கால தெலுங்கு மற்றும் தமிழர் மேலாளர்கள் ஊடாகத் தற்கால அரசியல் நிலவரங்களைத் தெளிவுபடுத்தி இசை மற்றும் தேவதாசி மரபு வழியான இசை, நடன வரலாற்றுப் பின்புலத்தில், சண்முகசுந்தரத்தின் இசை வேளாளர் இசை ஆய்வுப் பனுவலைத் தனக்கே உரிய எடுத்துரைப்பு முறையில் சத்தியதேவன் விளக்கினார். ஈழத் தமிழியலில் மறைக்கப்பட்ட மீளுருவாக்கத் தமிழ் அறிவு மரபின் எடுத்துரைஞர் தமிழருவி சண்முகசுந்தரம் என்ற தலைப்பில் எனது உரை அமைந்திருந்தது. நூல் தொகுப்பாளரும், சண்முகசுந்தரத்தின் மருமகனும், கதாசிரியருமான மகாலிங்கசிவம், தமிழருவியின் வரலாற்று ஆய்வு முறைகளை மிகுந்த அங்கதச் சுவையுடன், துள்ளல் மொழிநடையில், வித்தியாசமான குரல் நிகழ்த்துகையுடன் ஆற்றிய உரை அனைவரின் ரசிப்பையும் பெற்றது. பேராசிரியர் சி. ஜெயசங்கர், ஆய்வாளர் சி. ரமேஷ், துரைராஜா கௌரீஸ்வரன், சத்தியதேவன் போன்றோர் சூடான விவாதங்களை உருவாக்கி கரு த்தரங்கைக் களைகட்டச் செய்தனர். கருத்தரங்கு சுறுசுறுப்பாக நடைபெற, சுவையான உணவுகளைப் பரிமாறுவதற்குப் பொறுப்பாக நின்று செயல்பட்டவர்களில்: கலைஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான பிரிசிலா, நீதிக்கான பறை  மற்றும் கலாசார உத்தியோகத்தர் சிந்து உஷா ஆகியோர் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். “உலகம் முழுவதும் ஒடுக்கப்படுகின்ற, நவகாலனித்துவத்தின் கீழ் இன்றுவரை சிக்கியுள்ள அனைத்து சமூகங்கள் மற்றும் பண்பாட்டுக் குழுமங்களுடனும் சண்முகசுந்தரத்தின் ஆய்வும் பணியும் சேர்ந்து பயணிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்,” எனப் பேராசிரியர் தனது தொகுப்புரையில் குறிப்பிட்டார். ஏபிஎம். இதிரீஸ்

Related Posts

🪧 பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம் – 3வது நபரும் வைத்தியசாலையில்! – Global Tamil News

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் ஐந்தாவது நாளாகவும் நீடித்துவரும் நிலையில், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு உத்தியோகத்தர் உடல்நிலை மோசமடைந்ததால் இன்று காலை அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப்…

Read more

🍵 பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக உயர்வு –  ஒப்பந்தம் கைச்சாத்து – Global Tamil News

இலங்கை பெருந்தோட்டத் துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான சம்பள உயர்வு இன்று உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் வைத்து இன்று (ஜனவரி 30, வெள்ளிக்கிழமை) காலை இந்த வரலாற்றுச்…

Read more

👑 உலக திருமதி அழகிப் போட்டி –  சபீனா யூசுப் மூன்றாம் இடம் – Global Tamil News

அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சபீனா யூசுப் (Sabina Yusuf) மூன்றாம் இடத்தைப் பிடித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இலங்கை நேரப்படி இன்று (ஜனவரி 30, வெள்ளிக்கிழமை) காலை கலிபோர்னியாவில் இந்த…

Read more

⚖️ கெஹெலிய  பணமோசடி வழக்கு – தொழிலதிபருக்கு விளக்கமறியல்! – Global Tamil News

இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்குத் தொடர்புடைய 30 மில்லியன் ரூபாய் பணமோசடி வழக்கில், பிரபல தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிரடி விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது…

Read more

சம்மாந்துறையில் பாரிய போதைப்பொருள் வேட்டை: 2 கோடியே 30 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு! – Global Tamil News

by admin January 30, 2026 written by admin January 30, 2026 அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில், வீடுகளில் சூட்சுமமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான பல்வேறு வகையான போதைப்பொருட்களை சம்மாந்துறை காவற்துறையினர்…

Read more

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு

 திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான உத்தரவை அறிவிப்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம்…

Read more