அமெரிக்காவின் தற்போதைய ட்ரம்ப் நிர்வாகம், சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கு எதிரான தனது கடுமையான கொள்கைகளை மீண்டும் ஒருமுறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாட்டிலிருந்து சுயமாக வெளியேறத் தவறிய பெண் ஒருவருக்கு எதிராக 941,000 டாலர் (சுமார் 28 கோடி இலங்கை ரூபாய்) அபராதம் விதித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமெரிக்கக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் (ICE) உத்தரவை மீறி, சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காக இந்த மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் அமெரிக்காவிலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டும், அவர் குறித்த காலத்திற்குள் ‘சுயமாக வெளியேறத் (Self-Deport)’ தவறியுள்ளதாக தொிவிக்கப்பட்டு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது $941,000. இது அமெரிக்க வரலாற்றில் ஒரு தனிநபர் மீது குடியேற்ற விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட மிக உயர்ந்த அபராதங்களில் ஒன்றாகும். “சட்டத்தை மதிக்காதவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை” என ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியேற்ற விதிகளை மீறுபவர்கள் மீது இனி வெறும் நாடுகடத்தல் (Deportation) மட்டுமல்லாமல், பாரிய நிதி அபராதங்களும் விதிக்கப்படும் என்பதை இது காட்டுகிறது. அதிபர் ட்ரம்ப் பதவியேற்றது முதல், சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தப் பல்வேறு புதிய சட்டங்களையும் அபராதங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார். இது அதன் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகிறது.