கம்பஹா பகுதியில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆறு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும் நீதிமன்றம் இன்று (ஜனவரி 29, 2026) நிபந்தனையுடனான பிணை வழங்கியுள்ளது. கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, சந்தேகநபர்களுக்கு வெளிநாடு செல்லத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் அறுவரும் தலா 6 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் மூவரை அடையாளம் காட்டிய பாதிரியாளர் அவர்களில் ஒருவர் தன்னைத் தாக்கியவர் என்றும், ஏனைய இருவர் அருகில் நின்றவர்கள் என்றும் சாட்சியமளித்துள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், குறித்த காவல்துறை உத்தியோகத்தர்களின் பணி இடைநீக்கத்தை (Suspension) தொடர்ந்து முன்னெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வழக்கின் விசாரணைகள் முடியும் வரை இவர்கள் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையினரே இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. Tag Words: #Gampaha #PoliceAssault #PriestAttack #SriLankaJustice #CourtUpdate #BailGranted #LKA #LegalNews #PoliceAccountability #GampahaNews